Monday, December 21, 2009

அம்மா பகவான் = சும்மா பகவான்


"வித்தியாமாலை" என்ற சொல்தான் எனக்கு அம்மா பகவனை அறிமுகப்படுத்தியது. இது நடந்தது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு. "வித்தியாமாலை" பற்றி கட்டாயம் சொல்லத்தான் வேண்டும் . "வித்தியாமாலை" கள்ளச் சாமியார்களின் தந்திரங்களில் உச்சக்கட்டம் என்று சொலும் அளவிற்கு பலரையும் தன்பால் ஈர்த்து இருந்தது. ஐந்து மணிநேரம் படித்தால் எவனும் பரீட்சையில் சித்தியடையலாம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டார் அம்மா பகவான். அதுதான் இந்த வித்தியாமாலை என்ற தந்திரம். இந்த மாலையை அணிந்து 21 நாள் அம்மா பகவனை நோக்கி விரதமிருந்தால் பரீட்சையில் சிறந்த பெறுபேறு கிடைக்குமாம். இதற்கு அவர்கள் ஒரு விதிமுறை விதித்திருந்தனர். ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் படிக்க வேண்டும் என்பதுதான் அது.

இதைப்பற்றி கேள்விப்பட்டு என் நண்பர்கள் பலரும் அதை நம்பி மாலை அணிந்து கொண்டனர். அவர்கள் என்னையும் அந்த முட்டாள்தனத்தை செய்யுமாறு அழைத்தனர். நான் இந்த முட்டாள்தனம் பற்றி என் நண்பர்களுக்கு விளக்கமுயன்று தோற்றுப்போனேன்.

என் நண்பர்களுக்கு இதைப்பற்றி விளக்க வேண்டுமானால் அம்மா பகவான் பற்றி நான் ஆராயவேண்டும் என்று எனக்கு தோன்றியது. ஆராயத்தொடங்கினேன் அப்போது எனக்கு முதலில் தெரிந்தது சத்திய லோகம்(ONENESS CENTER) எனும் அவர்களது வசிப்பிடத்தின் பெறுமதிதான்.


பார்க்கும் போதே என்ன ஒரு பிரம்மாண்டம். பார்ப்பதற்கு இன்னுமொரு வெள்ளை மாளிகை போல உள்ளது இது. இதன் பெறுமதி என தெரியுமா?
சும்மா இல்லை 400 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியில் கட்டப்பட்டதாம் இந்த ONENESS CENTER.
அப்போதுதான் யோசித்தேன்.
இந்த காசு எல்லாம் எப்படி அவர்களுக்கு வந்தது?

இதன் பிறகு ஒரு நாள் "கள்" என்ற வலைப்பூவில் உலாவிக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் நான் "அம்மா பகவான் விபச்சாரம்" என்ற கட்டுரையை வாசித்தேன். அதன் பின் எனக்கு இந்த விடயத்தில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. சில நாட்களின் பின் சத்தியன் அண்ணாவிடம் ஒரு கேள்வியை கேட்டேன். "ஏன் அதிகமான போலிச்சாமியார்கள் எல்லாம் இந்தியாவில உருவாகின்றார்கள்?". அவர் ஒரு சிறிய பதில் சொன்னார்." இந்தியாவில சாமியார்கள் சொத்துக் கணக்கு காட்டத்தேவையில்லை வருமான வரியும் கட்டத் தேவையில்லை" என்ற பதில் என்னை சிறிது அதிர்ச்சி அடையச் செய்தது. ஆனாலும் அதுதான் உண்மை என்பதை உணர்ந்துகொண்டேன்.

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் வெளிநாடு வாழ் பக்திப்பழங்களின் காசுதான் அம்மா பகவானின் வங்கி வைப்பை இரட்டிப்பாக்கிக் கொண்டுள்ளது .ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவவேண்டிய பணத்தை ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கொண்டுபோய் கொட்டுகிறார்கள். இவர்கள் தங்கள் முட்டாள்தனத்தை உணருவதுமில்லை மற்றவர்களை உணரவிடுவதுமில்லை.

அவர்கள் தமது அறிவின்மையால் அம்மா பகவானை நாடுகின்றார்கள் அங்கு பணத்தைக் கொட்டுகிறார்கள் ஆனால் பல இந்தியப் பணக்காரர்களும் சில அரசியல்வாதிகளும் தமது சொத்துகளைப் பதுக்கவும் அரசியல் ஆதாயங்களுக்காகவும் அம்மா பகவானை நாடுகின்றார்கள்.


இது பரவாயில்லை தங்களை ஒரு கண்காட்சியாக எண்ணிக்கொண்டார்கள் அவர்கள். தம்மைப் பார்க்கவும் பேசவும் மக்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா பகவானைப் பார்க்க ரூ.10000 பார்க்க ரூ.20000 என்று கட்டுரையில் வி.புருசோத்தமன் அன்று குறிப்பிட்டதை சில நாள்களுக்கு முன் நான் ஆதரப்பூர்வமாய் அறிந்தேன். திருகோணமலையை சேர்ந்த ஒரு யுவதி அம்மா பகவானைச் சந்திக்க சென்று வந்துள்ளார். சென்றுவந்த அவர் தமது உறவினர்களிடையே கூறியதாவது " அம்மா பகவானை பார்க்க 10000ரூபா காசு கட்டி போனன் ஒரு பிரியோசனமும் இல்ல, அவங்களப் பார்க்க நான் நிறைய நேரம் காத்திருந்தன் அவங்களும் வந்தாங்க ஆனா ஒரு நிமிஷம் கூட அவங்கள என்னால பார்க்க முடியல்ல" என்று அழுதபடி கூறியிருக்கிறார்.



ஆனா எவ்வளவுதான் பட்டாலும் புத்திவராத அவர் இறுதியாக பின்வருமாறு கூறியிருக்கிறார் "எனக்கு காசு போனது கூட கவலை இல்ல ஆனா அம்மா பகவானின் அருள் கிடைக்காதததுதான் எனக்கு கவலையா இருக்கு" இந்த இடத்திலதான் என் மனசில ஒரு கேள்வி தோன்றுகிறது. காசு கட்டித்தான் அருள் வாங்குவதனால் அம்மா பகவான் கடவுளின் அவதாரம் என்று சொல்லாம வியாபாரி படத்தில s.j.சூர்யா சொல்லுரத போல "100% Business Man" எண்டே சொல்லலாமே? அப்புறம் எதுக்கு இந்த அவதார வேடம். வழக்கமான இந்தியச் சீட்டுக் கம்பனி முதலாளிங்க போல ஒரு கம்பனி திறந்துட்டு இழுத்துமூடிட்டு போகலாமே.

ஐந்து ஆறு வருடத்துக்கு முன் இவர்களுக்கு ஒரு சைடு பிசினஸ் வேற இருந்தது. வேற என்ன எல்லா பணக்காரங்கள செய்றத போல சினிமா எடுக்கிறதுதான் அதுவும் பினாமி பேர்லதான். இப்படி இவங்க தயாரித்த படங்களில் ஒன்று முரளி சிம்ரன் நடித்த 'கனவே கலையாதே'.

சாமியார்கள் சினிமா எடுக்கிறதப் பற்றி என்னக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது, ஆனாலும் சமுதாய அழுக்குகளை சுத்தப்படுத்தி ஒரு பரிசுத்த உலகத்தை உருவாக்குவதே என் அவதார நோக்கம் என்று கூறும் இந்த கலியுக கல்கி அவதாரங்கள் சமூகத்துக்கு கருத்தைச் சொல்லும் படங்களை ஏன் எடுக்கவில்லை என்பது என் மனதில் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்திஉள்ளது.

இது தொடர்பாக எனது நண்பனான ஒரு அம்மா பகவான் பக்தனிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது அவன் எனக்கு கூறிய பதில் என்மனதில் இன்னும் ஒரு கேள்வியை எழுப்பியது. அவன் பதிலானது " அடேய் லூசா அந்த படங்களை அம்மா பகவான் தயாரிக்கவில்லை, அந்த படங்களை தயாரித்தது அம்மா பகவானின் பக்தர் ஒருவர்தான் அந்த பக்தர் படங்களை தயாரிக்கும் முன் அம்மா பகவானிடம் அந்தப்படம் வர்த்தகரீதியில் வெற்றி பெற வேண்டுமென்று ஆசீர்வாதம் பெற்றுத்தான் படத்தை தயரித்தாராம், அம்மா பகவானும் அவருக்கு அருள் புரிந்தார் ".

ஆனால் நான் அறிந்தவரையில் அந்த திரைப்படம் வர்த்தகரீதியில் தயாரிப்பாளரை திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இந்த இடத்தில்தான் எனக்குக் கேள்வி எழுந்தது, கடவுளின் (கள்ளக் கடவுள்)அருளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை என்றால் அவருக்குச் சக்தி எதுவும் இல்லையா? அப்படியானால் சக்தியில்லாதவர்களை ஏன் மக்கள் வணங்குகிறார்கள்? "சாணக்யா" படத்தில சரத்குமார் சொல்லுரதப்போல எல்லாம் "பப்ளிசிட்டி" தான்.

இதுக்கிடையில சில மதத்துக்கு முதல் அம்மா பகவான் ஒரு பெரிய கூத்தையே நடத்தயிருந்தாங்க. ஆனா பினிஷிங் டச்சிலத்தான் கோட்டவிடுட்டாங்க. அதுதான் கொழும்பு வாழ் பக்தர்களின் கனவில் வந்த அம்மா பகவானின் கதைதான், அகதி முகாம்களில் வாழும் வன்னி மக்களுக்கு உதவுங்க என்று பக்தர்கள் கனவில சொன்னாங்களாம் அம்மா பகவான். நல்ல விடயந்தான். ஆனா அது பேச்சோட சரி, நடந்ததா தெரியல்ல. கனவில வந்து சொன்ன அம்மா பகவான் ஏன் அவங்க சொன்னத செய்யாத பகதர்களுக்கு புத்தி புகட்டவில்லை. அப்படி என்றால் சாமி (கள்ளச் சாமி) வார்த்தைக்கு மரியாதையை இல்லையா? இப்படி இருக்கும் பொது அவங்கள எப்படி அவதாரமென்று சொல்லமுடியும்...........

தங்கள் பக்தர்கள் கனவில வந்ததுக்கு பதிலாக போர் நடவடிக்கைகளுக்கு முன் நின்றவர்களின் மனதை மாற்றி வன்னி மக்களுக்கு உதவியிருக்கலாமே? அது வேற எதுவும் இல்ல, இப்ப தமிழ்நாட்டிலயும் இலங்கையிலயும் அம்மா பகவானுக்கு மார்க்கெட் கொஞ்சம் கீழபோயிடிச்சு, மார்க்கெட்ட உயர்துரதுக்கு வர்த்தக நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் போலத்தான் இதுவும். அம்மா பகவானுக்கு நல்ல மனசு என்று சொல்லும் உங்கள் நண்பர்களை இயலுமானவரை விழிப்படையச் செய்யுங்கள்.

அம்மா பகவான் இப்போது நமது சமூகத்தில் வேர்விட்டுக்கொண்டிருக்கும் களைத்தான். ஆனால் அது ஒரு பூச்செடியின் தோற்றத்தில் உள்ளது. கண்ணுக்கு தெரியாத முட்களையும் அழகிய வாசனையான விஷப் பூக்களையும் கொண்டுள்ளது அதுதான் வித்தியாசம். வாசம் வருகிறதே என்று விஷத்தின் பக்கம் சென்றுவிடவேண்டாம். அழகிற்கும் அமைதிக்கும் பின்னால் எப்போதும் ஆபத்துதான் இருக்கும். வயலில் வளரும் களையை களை எடுப்பது விவசாயிகளில் கடமை என்பதுபோல சமூகத்தில் வளரும் களையை கிள்ளி எறிவது நமது கடமைதான்.

நண்பர்களே கடமையை செய்யுங்கள் பலனை எதிர்பாராதீர்கள்.நாளைய சந்ததி கள்ளச் சாமியார்கள் பிடியில் சிக்கக்கூடாது.

--
தி. அனோஜன்