Wednesday, July 23, 2008

ஒரு நிமிடம் வா


என் காதல் கடலை விட ஆழமானது
வானை விட உயர்ந்தது என்ற
அடைமொழிகள் கூற விரும்பவில்லை
நான் இறக்கும் தருவாயில் என்னருகில்
ஒரு நிமிடம் வர்

நான் சுவாசித்த உன் வாசங்களைப் பார்
நான் யாசித்த உன் குரல்தனைக் கேள்
நான் எனக்குள் தீட்டிய உன்
வண்ணங்களை மட்டுமல்ல
வர்ணனைகளையும் வந்து பார்
நான் நேசித்த உன்னை நீ
எனக்குள் வந்து பார்

உன் பெயர் சொல்லி என் அணுக்கள் துடிக்கும்
உன் குரல் கேட்டு என் செல்கள் வெடிக்கும்
உனை பார்த்துக்கொண்டே என் இதயம் சுருங்கி
இதயம் சுருங்கி விரியும்
உனை நினைத்துக்கொண்டே என் ஜீவன்
எனை விட்டுப் பிரியும்.

--
மீரா

Thursday, July 10, 2008

சூரியன் என்று சொல்லுங்கள்






"பூமிக்கு ஒரு நிலவு போதாதா? - ஏன்
இத்தனை நிலவுகள்!"


பெண்ணை வர்ணிக்கும்
கவிகளே!


நிலவு வளரும்; தேயும்;
வளர்பிறையை பார்க்க வேண்டும் என்பவர்கள்
தேய் பிறையைப் பார்க்க விரும்புவதில்லை


நிலவுப் பெண்களை எல்லாம்
விலங்கு மாட்டி சொந்தமாக்கி
தேயவைத்து விடுவீர்!
ஒருநாள்
அமாவாசை என்று
சாயமும் பூசி விடுவீர்!


வேண்டாம் இளங்கவிகளே!
நிலவென்ற வர்ணனையை நிறுத்தி விடுங்கள்.


நாம் நிலவல்ல!
சுட்டெரிக்கும் சூரியன்!


கதிர்கள் கொண்டு சாய்த்துக் கொள்வோம்
கண்ணசைவிலேயே சாதித்துக்கொள்வோம்
பகல்நேரச் சூரியன்போல் சுட்டெரிப்போம்
ஒரு நாள் சூரியன் உதிக்காவிட்டால்.....

சூரியன் என்று சொல்லுங்கள்
நிலவில் கூடக் கறைகள் உண்டு - ஆதலின்
சூரியன் என்று சொல்லுங்கள்!


மலரென்று சொல்லி
காயவைத்து உதிரவைத்து சருகாக்காதீர்
அழகென்றுகாட்டி
உயிருடனே புதைகுழியில் புதைக்காதீர்

இன்று பூத்து மாலை மடியும் பூவல்ல நாம்
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதை


விதைகள் ஒருபோதும்
ஒருநாளுடன் புதையாது!

இன்று அடிவேரால் சுவாசித்து
நாளை வெளியில் கிளைபரப்பும்
விருட்சம் நாம்.
நிலவல்ல நாம்..
அழகு மலரல்ல நாம்..

சுட்டெரிக்கும் சூரியனும்
விதைகளாகும் விருட்சங்களுமே

நாம்!

--
மீரா,
திருக்கோணமலை

Saturday, July 5, 2008

(சுவாமி) தந்திரதேவா - தனிநபர் NGO -தன்னின விருப்பு (கல்லு வெட்டுதல்)


[நேர்மையீனங்கள், தனி ஆட்களை புனிதப்படுத்துவதின் பின்னாலுள்ள சமூக விரோத நோக்கங்கள், ஏமாற்று வேலைகள் போன்றவற்றை அம்பலப்படுத்துவதற்காகவும், வரலாறு நெடுகிலும் திரும்பத் திரும்ப உருவாகும் ஒரே மாதிரியான தனி நபர் சாமிகள், பகவான்கள், புனிதப்படுத்தல்களுக்கெதிரான எழுத்து எதிர்ப்பாகவுமே இக்கட்டுரை கள்ளில் பிரசுரமாகிறது. சமப்பாலுறவினை கொச்சைப்படுத்துவதோ சமப்பாலுறவுத்தேர்வாளர்களைத் இயற்கைக்கு மாறானவர்களாகத் தனிமைப்படுத்துவதோ கள்ளின் நோக்கமன்று. சமப்பாலுறவுத்தேர்வு இயற்கையானதென்பதோடு அத்தேர்வுக்கான அங்கீகாரம் போராடிப்பெறப்படவேண்டியது என்பதிலும் "கள்" நம்பிக்கை கொள்கிறது -கள்]

கடந்தமாதம் இறுதிவாரம் திருகோணமலையில் இரு இறப்புக்கள் நிகழ்ந்தது. ஒன்று தி/உவர்மலை விவேகானந்தாக்கல்லூரிக்கு புதிதாய் நியமிக்கப்பட்ட பிரதி அதிபர் சி. காளிராஜா அவர்களின் மரணம். மற்றது வெள்ளைக்கார சாமியார் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் மரணம்.

இரண்டுமே புனிதங்களில் சிறு அசைவை உண்டுபண்ணியது. எனக்கு இரண்டுமே பழைய நினைவுகளை நினைவு படுத்தியது. சில பதிவுகளை கட்டாயம் செய்யவேண்டும் என்று ஒரு உந்துதலைத்தந்தது. முன்னது எனது பாடசாலை சம்பந்தப்பட்டது மற்றது சிலகாலம் நான் நெருக்கமாக பழகிய புனிதர் என்று சொல்லப்படுபவர்பற்றியது. பாடசாலை பற்றி நிறைய எழுத இருக்கிறதால் அதை பிறகு எழுதுறன். இப்ப எங்கட மசிர்ராஜ் மன்னிக்க மகராஜ் பற்றிய எனது அனுபவத்தையும் எனக்குத் தெரிஞ்சதையும் எழுதுறன்.

இதுக்கு நான் சாட்சி. நம்பிக்கையில்லாதவர்கள் அவருடன் நான் எடுத்த போட்டோவப்பாருங்க.


செத்தவன பற்றியெல்லாம் கண்டமாதிரி எழுதக்கூடாது கதைக்கிறவர்களுக்கு ஒன்றைச் சொல்லவேணும் உங்கட ஹிட்லர், முசோலினி, நாதுராம் கோட்சே, அமெரிக்காவின் ஜனாதிபதிகள், ஜே.ஆர் ஜயவர்த்தன இவர்களைப்பற்றியும் இவர்கள் செய்த கொடுஞ்செயல்கள் பற்றியெல்லாம் கதைக்கக்கூடாது. ஏனெனில்; அவர்கள் செத்து கனகாலமாயிற்று அதுக்காண்டி அவாகளின் செயல்களை விமர்சிக்காம இருக்க முடியாது.அப்படி விட்டா எல்லா மசிரும் உயிர் இருக்கும்வரைக்கும் எல்லாத்தையும் செய்திட்டு போவான். உங்களாள அதை செய்யமுடியலாம் என்னால அதை ஏற்கவே முடியாது.

எனது 10, 11வது வயதுகளில் வெள்ளைக்கார சுவாமி பற்றி எனது பள்ளித்தோழன் சொல்லி அறிந்தேன். அக்காலத்தில் எனக்கு சைவசமயம் மீது ஒரு தீவிரவிருப்பு இருந்தது. அனைத்து சமய போட்டிகளிலும் பங்குபற்றுதல் கோயிலுக்கு வேலைசெய்தல் தேவாரம் பாடுதல் என்றுதிரிந்தகாலம் அப்போதுதான் எனது பள்ளித்தோழன் வெள்ளக்கார சாமியார்ட்ட தான்போவதாகவும் என்னையும் வரச்சொல்லி அழைத்தான். அவர் நிறைய திண்பண்டங்கள் புத்தகங்கள் பரிசுப்பொருட்கள் தருவார் என்றும் சொன்னான். நான் அதற்கு ஆசைப்பட்டு போக சம்மதம் சொல்லி அண்டைக்கு பின்னேரமே போனேன். அவற்ற வீடு எங்கள் உவர்மலையில இருந்ததால் இன்னும் வசதியாகப் பொய்விட்டது. சமயம் என்று சொன்னவுடன் அம்மா உடனே சம்மதம் தந்திட்டா.


உயரமான மதில் கட்டின வீடு டபுள்கேட், பெரியவளவு. வீடு வீட்டுக்குப்பக்கத்தில கோயில் மாதிரி ஒரு மண்டபம் சாமிகளுக்கு சின்னசின்ன கட்டிடங்கள். பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. ‘சுவாமி’ கூப்பிட்டவுடன் வாசலில் நல்ல உயரமா சுருட்டைமுடியோடு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோடு ஒரு வெள்ளைக்காரர் கழுத்தில் உருத்திராட்சமாலை சகிதம் வாசலுக்கு வந்தார். நண்பன் உடனே நமஸ்காரம் சுவாமி என்று காலில் விழுந்து வணங்கினான் அவர் என்னைப்பார்க்க நானும் நமஸ்க்காரம் சொல்லி காலில் விழுந்து வணங்கினேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். உள்ளே அழைத்துச்சென்றவர் சாமிப்படத்தின் முன்னால் வணங்கச்செய்தார். “குருப்பிரம்மா குருவிஷ்ணு” சுலோகம் சொல்லித்தந்தார். நான் சில தேவாரங்கள் பாடிக்காட்டினேன் எனக்கு தெரிஞ்ச சமயக்கதையையும் சொன்னேன். அவருக்கு மிகுந்த சந்தோசம். எனக்கு குடிப்பதற்கு பால் தந்தார் அத்துடன் வேட்டி நஷனல் சேட் இரண்டு புத்தகங்கள் தந்தார். வெள்ளிக்கிழமை பஜனைக்கு வரச்சொன்னார். சம்மதம் அத்துடன் மீண்டும் அவர்காலில் விழுந்து வணங்கி வீட்டுக்குப்போனோம்.


நடந்ததை அம்மாவிடம் சொன்னேன் அவவுக்கு மிகுந்த சந்தோசம். அப்பாவுக்கு பிடிக்கவில்லை அவன் CIAயிட ஏஜென்ட் அவனிட்ட எல்லாம் போகதே என்றார். அம்மாட சம்மதம் இருந்ததால நான் போகத்தொடங்கினேன் வெள்ளிக்கிழமை வான் வந்து பஜனைக்கு ஏற்றிக்கொண்டு போகும் சுமார் 25 மேற்ப்பட்ட பொடியன்கள் வந்திருந்தார்கள் எல்லோரும் முன்பு சொன்ன கோயிலில் உட்கார்நது பஜனைக்கு ஆயுத்தமானோம் சாமியார் வந்தவுடன் பஜனை ஆரம்பமாகியது. ஒரு மணிநேரத்தில பஜனைமுடிந்தது. எல்லோருக்கும் பற்றீஸ் தந்தார்கள். பற்றீசுக்காகவே பலர் பஜனைக்கு வந்ததாக சொன்னார்கள்.

எனக்கு எல்லாம் பிடிச்சிருந்தது. முக்கியமாக அவர் வீட்டில் இருந்த சமய கதைப்புத்தகங்கள படிக்க மிகவும் ஆசைப்பட்டேன். அதற்காக அடுத்தநாளே அவரிடம் என் நண்பனையும் அழைத்துச் சென்றேன். முன்பு போல காலில் விழுந்து வணங்கி உள்ளே போனோம். அவரைச்சந்திக்கும் போதும் அவரைவிட்டுப்பிரியும் போதும் அவர்காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். இல்லாவிட்டால் அவருக்க கோபம் வரும்.

நான் அவரிடம் சொல்லி புத்தகங்கள் அலுமாரியத் திறந்து புத்தகம் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். வீட்டை கொண்டு வாசிக்கலாம் என்று சொன்னவர். என்அருகில் வந்து அமர்ந்து என்னுடைய குடும்ப விபரம் மற்றும் பிறவிபரங்களை கேட்டார். நண்பனை திண்பண்டங்களும் தன்னுடைய உணவுக்கு மரக்கறியும் வாங்கிவரும்படி பணம்கொடுத்து கடைக்கு அனுப்பினார். பின் உள்ளே சென்று சிறது நேரத்தின் பின் வந்து என் அருகில் அமர்ந்து என் கையைப்பிடித்து தன் மடியில் வைத்தக்கொண்டு கதைக்கத்தொடங்கினார். நானும் இயல்பாகவே கதைக்கத் தொடங்கினேன். பின் நண்பன் கொண்டுவந்த மரக்கறியை அவிச்சு வைத்துவிட்டு தின்பண்டங்களையும் சாப்பிட்டுவிட்டு சில புத்தகங்களுடன் வீட்டுக்குப்போனோம். இந்நாடக்ளில் நான் மிகுந்த வெறியுடன் கதைப்புத்தகங்களை அதுவும் படத்துடன் கூடிய கதைப்புங்களை மிகமிக வெறியுடன் வாசிச்ச காலம். அதனால அவர்வீட்டுக்கு அடிக்கடி போவேன் அவர் நடத்தும் பஜனைப்போட்டிகளிலும் சமயசம்பந்தமான போட்டிகளிலும் நான் நிறையப்பரிசில்கள் வாங்கினேன். தவிர கொம்பாஸ் குடை சேர்ட் விளையாட்டுசாமான்கள் என அவர்தரும் பரிசுப்பொருட்கள் என்று எல்லாம் தினமும் அவரிடம் போவதற்கும் அவருக்கு நம்பிக்கையான ஆளாக மாறுவதற்கும் வழிசெய்தது.


ஆரம்பத்தில் கையமைட்டும் பிடித்து கதைத்த அவர் பிறகு கட்டிப்பிடிக்க ஆரம்பித்தார். கன்னங்களில் முத்தமிடவும் (அதை கொஞ்சுதல் என்பது பேச்சு வழக்கு) ஆரம்பித்தார். தொடர்ந்து என் அந்தரங்க இடங்களை தடவுவுதும் மிக இறுக்கமாக கட்டிப்பிடிப்பது முத்தமிடுவது எனது கையை தனது மடியில் வைத்து அழுத்துவது என்று அவர் செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்தன.

அக்காலத்தில் வெளியில் இருந்த என் பெரிய நண்பர்கள் எல்லாம் அவரைத் தன்னினச்சேர்க்கையாளர் என்றுதான் சொல்வார்கள் அவர்கள் தமிழில் ‘கல்லு வெட்டுதல்’ என்று அதைக்கூறுவார்கள். நான் அவர்ட 'கல்' என்றுதான் எனக்கு பட்டப்பெயர். வயதுக்கு மீறிய நண்பர்கள் என்றதால் சில விசயங்கள் தெரியும் அதனால அவர்கள் சொன்னமாதிரி நடக்கவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன் ஆடைகளைந்துதான் அவர்கள் சொன்னது நடக்கும் என்றபடியால் அதைப்பற்றி கவனமாக இருந்தேன். வயதுக்கு மீறிய நண்பர்களின் தொடர்பால் நான் கொஞ்சம் விபரமானவனாகவே இருந்தேன். அப்படிப்பட்ட சம்பவங்கள் எனக்கு வரவில்லை.

அவருடைய பிரதான சிஷ்யனாக இருந்ததும் அவர்கட்டிய அவர் காசுவழங்கிய கோயில்களில், இல்லங்களில் நான் மேடைகளில் இருக்கவைக்கப்பட்டதும் அவருடைய பரிசுப்பொருட்களும் குறிப்பாக நான் கேட்கும் சமய புத்தகங்களை அவர்வாங்கித்தந்ததும் எனக்கு பெருமையாகவும் மிகவும் விருப்பமானதாகவும் இருந்தன. அவரின் இச்செயல்கள் பெரிதாக தெரியவில்லை. ஆயினும் அவரின் வாய்துர்நாற்றமும் சிலவேளை உடல்நாற்றமும் என்னை மிகவும் கஸ்ரப்படுத்தின. அவரின் எச்சில் பட்ட கன்னத்தில் தேமல் வந்தது எனக்குப்பிடிக்கவில்லை.


இவ்வாறு ஒன்றரை வருடங்கள் அவரின் 'சின்'னாக இருந்தேன். இறுதியாக எனது இருநண்பர்களுக்கு அவர் வாங்கிவைத்திருந்து உயர்ரக ஊதுபத்திகளை களவெடுக்க உதவிசெய்ததை அவர்கண்டுபிடித்து என்னை தலையில் மிகப்பலமாக குட்டி அடித்து தேங்காய்கள் நிறைந்த ஒரு இருட்டறையில் கொண்டுபோய் பூட்டி வைத்தார். நண்பர்க்ள அன்று வரவில்லை. அடுத்தநாள் நண்பர்களைக் கூட்டிக்கொண்டுவருமாறு சொன்னார் அதன்படி அவர்களைக் கூட்டிக்கொண்டு போனேன். நண்பர்களையும் அடித்து இருட்டறையில் பூட்ட முற்பட்டபோது அவரை அறைக்குள் தள்ளி விட்ட நாம் ஓடிவந்துவிட்டோம். அத்துடன் அவரின் தொடர்பு முறிந்து விட்டது.

இது எனது சொந்த அனுபவத்தின் சில பதிவுகள். தவிர அவர் பஜனைக்கு வராதவர்களின் வீட்டுக்குப்போய் வேட்டி மற்றும் தான் கொடுத்த பொருடக்ளைப்பறித்தவருவார். அவர்வீட்டுக்கு வருபவர்களை சமைக்கச் சொல்லுவார். சின்ன சின்னத் திருட்டு செய்பவர்களை அடித்தல் குட்டுதல் இருட்டறையில் பூட்டுதல் என கொடுமைப்படுத்தினார். இப்படிப்பட்ட ஒருவர் சாமியாய் இருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை சந்தாப்பம்கிடைத்தால் வெளுக்கலாம் என்றிருந்தன் கிடைக்கவில்லை. அவர் ஒரு அதிகார வெறியர் தன்னிடம் வருபவர் எல்லோரும தன்காலில் விழவேண்டும் என்று எதிர்பார்ப்பார். எல்லாவற்றையும் விட சிறுவர்களுக்கு ஆசைகாட்டி தன்னிடம் வளைத்து வைத்திருந்தார்.

தவிர அவர் ஒரு தனிநபர் NGO வாகத்தான் தொழிற்பட்டார் வெளிநாடுகளில் இருந்து வரும காசைக்கொண்டு கோயில் கட்டிக்கொடுப்பார். அந்தக்கோயிலில்கள் அவர் இஷ்டப்படிதான நடக்கவேண்டும் என்றுபிடிவாதம் பிடிப்பார். அவர் கட்டிக்கொடுத்த கோயில்கள் எல்லாம் அவரைத்துரத்திவிட்டன. இதற்கான பணம் எல்லாவற்றையும் தானே வைத்திருந்து செலவழித்தார். சகலதும் தன்கட்டுபாட்டில் இருக்கவேண்டும் என்று விரும்பினார். முக்கியமான விடயம் அவர் ஒர் விளம்பரப் பிரியர் எல்லாப்பேப்பரும் எடுப்பார் அதில் அவர்பற்றிய செய்தியோ படமோ கண்டு பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பரிசுகொடுப்பார். அதற்காக நாம் போட்டிபோட்டு அவர்பற்றிய செய்தியை பேப்பர்களில் தேடுவோம். சிலபொடியன்கள் அதை அவர் வெளிநாட்டில் காட்டி காசுவாங்குவதாக சொன்னார்கள்.
பிற்காலத்தில் அவரின் தன்னினச்சேர்க்கைபற்றியும அவரின் அடாவடிபற்றியும் நிறைய அறிய கிடைத்தது.

ஆரம்பத்தில் சாம்பல்த்தீவு, பின்னர் உவர்மலை கடைசியாக செல்வநாயகபுரத்தில் வீடெடுத்து தங்கியிருந்தார். அவர் ஒரு புனிதர் ஒரு பம்மாத்துக்காரர். அவரை பெரியாளாக இங்கே யாரும் மதிப்பதில்லை அவரிடம் சென்ற பொடியன்கள் எல்லாம் ஓரளவு வயதுவர நின்று விடுவார்கள். அவரைப்பற்றி அறிஞ்சவன் அவரை மகராஜ் என்றோ சுவாமி என்றோ கூப்பிடமாட்டான் மசிர்ராஜ் என்றோ கல்மஸ்த்தான் என்றோ இல்லாட்டி வேறமாதிரியோதான் கூப்பிடுவான்.

இப்படிப்பட்ட ஒருத்தர எங்கட சில மசிருகள் பெரிசா சொல்லுதுகள். அவற்ற செத்தவீட்டு செலவு 200,000 ரூபா இதெல்லாம் தேவையா. கடவுளைச் சொல்லி நடக்கிறது கூத்துக்கள் எவ்வளவு இது தெரிஞ்சும் ஏன் இன்னும் சிலபேர் தனிநபர்கள கடவுளா நம்புறாங்க அதை எழுதுறாங்க அவாகள் என்னைப் பொறுத்தவைரயில் அவர்களுக்கு வேற பெயர்.


எழுத்து என்பது நேர்மையாக இருக்கவேண்டும் அநியாயத்தை எதிர்ப்பதாக இருக்க வேண்டும். அதுவிட்டுவிட்டு மோசடிக்காரர்களை தூக்கிப்பிடிக்கிறதா இருக்கக்கூடாது.

தந்திரதேவா என்ற ஒருவரைப் பற்றி நான் கருத்தில் எடுப்பதையோ அதை பதிவு செய்வதையோ விரும்பவில்லை எதிர்காலத்திற்கு இப்படிப்பட்ட ஒருவர் இருந்தார் என்றதை சொல்லாமல் விடவே விரும்புகிறேன். ஆயினு சில மசிருகள் அவரை பெரிய பருப்பா காட்டி எழுதுவாதால் இதில் சில குறிப்புகளை எழுதினேன் அதையே வேலைமெனக்கேடு என்று எண்ணுகிறேன். இதைப்படிச்சிட்டும் கொஞ்சபர்பேர் என்னோட் சண்டைபோடலாம் ஆதாரங்கள் கேட்கலாம் அவங்களுக்கு சொல்வது இதுதான் தந்திராதேவாப்பற்றி நல்லது எழுதுவதுதான் கஸ்ரம் அவருடைய அசிங்கங்களை எழுதுவது இலகு ஆதாரங்களும் இலகுவாக்கிடைக்கும்.

எனக்கு தன்னினச்சேர்க்கை மற்றும் ஒழுங்கு மீறல்களில் எந்த காழ்ப்பும் கிடையாது. ஆனா அதை நேர்மையா செய்யவேண்டும். ஆனால் புனிதமானது என்று எல்லோரையும் பேக்காட்டி இப்படிச் சிலர் செய்யிறது. அவர் செத்தாப்பிறகு சில மசிர்கள் அவற்றை மசிர் எல்லாத்தையும மறைச்சிட்டு வக்காலத்து வாங்கிறது இவைமீது எனக்கு காழ்ப்பு உண்டு.

--
எஸ். சத்யதேவன்



தொடர்புடைய தொடுப்புக்கள்:

Thursday, July 3, 2008

தசாவதாரம் - இன்டலெச்ஷுவல் மசிர்கள் - கொம்பிலும் கொஞ்சம் கறத்தல்


நீண்டநாளைக்குப்பிறகு சொந்தக்காசில தியேட்டருக்கு போய் படம் பார்த்தன். ‘தல’ (இப்ப தல வேற ஆளாயிரக்கலாம் எங்கட தல கமல்தான்) படம் என்றதாலதான் போனனான் தலைவரு படம்தான் தமிழில் கொஞ்சமாவது உருப்படியான படமாயிருக்கும் என்ற எண்ணம் இந்த பேப்பர்களில படிச்சு அந்த நாளிலேயே மனசில பதிஞ்சு போச்சு.

அப்பெல்லாம் தலையிட மந்தைகளில் நானும் ஒருத்தன் ‘நாயகன்’, ‘சத்யா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘ஹேராம்’, என்று தலபடங்கள் தமிழ் சினமாவின் உச்சம் எனக்கு.

பள்ளிக்கூடம் முடிஞ்சபின்னாடி ‘அன்பே சிவம்’ ‘வசூல்ராஜா MBBS’ இரண்டும் சமூகத்திற்கு மிகச்சிறந்த நல்லதுகள் சொன்னபடம் என்றபடி உளறித்திரிஞ்சன்.

பின்னாடி இந்த 'இன்டலெச்சுவல்களோட' சேர்ந்ததுக்குப்பிறகும் அதுகள்ட புத்தகங்களைப்படிச்ச பின்னாடியும் தமிழ்ப்படங்களைப் பார்ப்பதில்ல. மசாலாப்படம் எடுக்கிறவன்கள் எல்லாம் கள்ளன்கள் அதிலையும் தல தலட மருமவன் எல்லாம் பார்ப்பனிய பணியா கும்பல்ற கைக்கூலிகள் என்ட உண்மைகள் தெரிஞ்சபிறகு தமிழ்சினிமாப்பக்கம் தலைவைக்கிறதில்லை.

'இண்டலெக்சுவல் மகசின்கள்' சொல்ற 'சீரியஸ்' படங்கள் கிடைத்தால் பார்க்கிறனான். மாதம் மாதம் இப்படியான படங்களை போடறது. அதில ஒரு முப்பது படம் வரைக்கும் பார்த்திருப்பன். பொய்க்கில்ல சினிமா எண்டா என்ன என்பதை மனசால உணர அந்த படங்களைத்தான் பாக்கோணும்.


ஆனா உந்த ரெஸ்லிங்கையும் கொஞ்ச இங்கிலிஷ்படங்களையும் தவிர வேற இங்கிலிஷ் படங்களே கிடைக்காத சூழல்ல ஒரு பத்துப்பேரு கூடி சிரியஸ் சினிமா பற்றி கதைச்சு கதைச்சு அலுத்துப்போயிற்று. கதைக்கிறவர்களின் நோக்கம் மக்களின் ரசனையை மாத்திறது.

ஆனா புரியாத மொழியில தெரியாத நாட்டுக்கதையையும் பாத்திரங்களையும் எவன்வந்து பார்க்கப்போறான் குறைஞ்சபட்சம் தியட்டர்காட்டினாலாவது பார்க்கலாம். அதைவிட்டுட்டு புரெஜக்டரில காட்டிறீங்க என்ட கொமன்ட்ஸ்தான் வரும்.

இங்க சாப்பாட்டுக்கே டண்டணக்கா இதில நீங்க ஈரான் டண்டணக்காவையும் ருவாண்டா டண்டணக்காவையும் காட்டுறீங்க அட போடா என்டு வந்த பத்துப்பேர்ல பாதிப்பேர் ஓடிட்டான். இதில எங்கட இன்டலெக்சுவல் மசிர்கள் தண்ணியடிச்சிட்டு ஏதோ எழுதுதுகள் தன்ர ரசனைதான் உயர்ந்தது எண்டு சனங்களில தங்கட இன்டெலெச்சுவலை திணிக்குதுகள் ஏதோ இரெண்டுபேர் கொமன்ட்ஸ் சொன்னா குதிக்குதுகள்.

அப்பதான் நண்பர் மயூரன் ‘தமிழ் சினிமாவின் ஜனநாயகப் பண்புதான் அதிட வெற்றிக்குக் காரணம்’ என்று சிவத்தம்பி சேரிட வார்த்தைகளச் சொன்னது ஞாபகம் வந்தது. 100% உண்மைபாருங்கோ சீரியஸ் சினமாவில இந்த ஜனநாயகப்பண்பு இல்ல. அதனால அதை மக்கள் விரும்பல்ல. சீரியஸ் சினிமா கிடைக்கிறதோ 30 இல்லாட்டி 40 தான் அதுவும் ஒரு இடத்தில இல்லாட்டி இரெண்டு இடத்தில இருக்கும் அதை எடுக்கிறதென்டா கொஞ்சமாவது 'இண்டலெக்சுவல்களோட' பழக்கமிருக்கோணும். தனிய இல்லாம பத்துபேர் சேர்ந்து பாக்க ஏற்பாடுசெய்யோணும். அதுக்கு இன்விட்டேசன் அடிச்சு ஊர்முழுக்க குடுத்து கேனயன் என்ற பேர்வாங்கோணும்.

அப்படிக்கஸ்டப்பட்டு எடுத்து படத்தைப்பார்த்தாலும் சொல்ற கதையை விளங்க அந்த கதைபற்றிய குறிப்புகளை முன்னமே வாசிச்சிருக்கோணும். இப்படி கனக்க லோலாய்ப்பட்டு சீரியஸ் சினிமா எவன் பார்ப்பான். அப்படிப்பார்த்தாலும் அசின நயன்தாராவப் பார்க்கிற சந்தோசம் கிடைக்குமே? வெள்ளைக்காரியள் வெள்ளை என்டாலும் எங்கட ஆக்கள்தான் வடிவுபாருங்கோ அவையைப் பார்க்கிறதிலதான் எங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு.

நம்மட இசை தெரிஞ்ச கதை புரியிர மொழி விரும்பினா தியேட்டரிலயும் பார்க்கலாம் இல்லாட்டி CDயிலையும் பார்க்கலாம் எந்தக்கிராமத்திலையும் கிடைக்கும் எவனையும் தெரிஞ்சிருக்கத் தேவையில்ல கொஞ்சக் காசு இருந்தாப் போதும் இப்படி தமிழ் சினிமா சீரியஸ் சினிமாட எந்த லோலாய்களையும் தாறதில்லை. சனத்தைகூட நாம கஸ்ரப்பட்டு இன்விட்டேசன் அடிச்சு காசுகுடுத்தெல்லாம் கூப்பிடத்தேவையில்லை சனமே காசுகொடுத்துவந்து பாக்கும். கூட்டம் அலைமோதும்.

அப்பதான் யோசிச்சன் நாம சீரியஸ் படம்மூலம் கஸ்ரப்பட்டு முழுக்க நல்ல கருத்த சொன்னாலும மிஞ்சிமிஞ்சிப்போனா ஒரு பத்துபேருக்கு போகுதில்ல மிச்ச சனத்துக்கு அதைப்பற்றியே தெரியாது. அதைவிட சனங்கள் எல்லோரும் பார்க்கிற தமிழ் சினிமாவில நல்லதுகள் கொஞ்சம் சொன்னாலும் ஊர்முழுக்கப்போவுதே அதை ஏன் புறக்கணிக்கவேணும் எண்டு. அதிலையும் தமிழ் சினிமாவில நல்லதுகள் காட்டறது பேசிறது கொம்பில பால்கறக்கிற கதைதான் அதில நம்மட தல கெட்டிக்காரர் பாருங்கோ அதான் காசில்லாட்டியும் கஸ்ரப்பட்டுப் பொறுக்கி தியேட்டருக்குப் போனான். அதிலையும் தசாவதாரத்தைப்பற்றி பேசாத பேப்பர், வலைப்பதிவு இல்ல. பார்த்த பொடியன்களும் பிளந்து கட்டினாங்கள் பழைய தலயெல்லோ என்ன சொல்லியிருக்கார் என்டு பார்க்கப்போனனான்.


சும்மா சொல்லக்கூடாது கூட்டம் பிய்க்குது இருக்க சீட் தேடப்பட்டபாடு. விசில், தூசணம், கூச்சல் கூப்பாடென்று ஒரே அமர்க்களம் ஆயிரம் சொல்லுங்க காதுகிழிஞ்சசு வேர்த்துக்கொட்டினாலும் இந்த சுகம் வேறஎங்கேயும் கிடைக்காது. இதெல்லாம தமிழன்ற தனிக்குணம் படத்தில கதைக்கிறது பெரிசாக்கேக்கேல்ல கஸ்ரப்பட்டு விளங்கினதை கொண்டு மிச்சத்த எழுதுறன்.



இந்துக்குள்ள சைவம் வைணவம்


படத்தில முதற்காட்சி. 12ம் நூற்றாண்டு சைவ வைணவ மோதல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். வைதீக மதம் சனாதன மதம் போன்ற கதைகள கிளப்பி இப்ப தூள் கிளப்பும் இந்துத்துவக் காரர்களுக்கு கழுவில ஏற்றியும் தூக்குக்காவடியில கொழுவி சாட்டையால அடிச்சும்தான் வைதீக மதம் திணிக்கப்பட்டது என்ற உண்மையைச் சொல்லுது முதற்காட்சி.

இதை இன்னும் விரிவாக்கினா இந்துமதம் என்ற மதமே இல்லே அது வெள்ளக்காரனுக்கு பின்னால வந்த கற்பிதம் என்டது தெரியும் பாருங்க. எனக்குத் தெரிஞ்சு பத்துக்கும் மேற்பட்ட பெரும்மதங்கள் தம்மை நிலைநிறுத்த அந்தகாலத்தில போட்டிபோட்டவை.

சைவத்தோட சமணம் பௌத்தம் போட்ட போட்டி ரொம்பப்பிரபலம் திருஞானசம்பந்தர் 60000 சமணரை கழுவில ஏற்றினத (அது என்னண்டா பின்னால கம்பிய அடிச்சு உச்சந்தலையால வெளியவரப்பண்ணி ஆக்களைக் கொல்லுறது. சில கிராமக்கோயிலில கோழிகுத்துவினம் அப்படித்தான் ) பெருமையா 5ம் 6ம் வகுப்பு சமயப்புத்தகத்தில போட்டிருக்கிறான். இதைப்படிக்கிறவன் மற்றமதக்காரனை கொல்லாம என்ன செய்வான். மற்றமதம் தேவேல்ல சைவத்துக்குள்ளேயே சுத்தசைவம் வீரசைவம் கபாலீகம் என்று போட்டிபோட்டான்கள். எல்லாம் அகிம்சையில்ல எல்லாம் கொலையும் கொலைமுயற்சியும்தான். சைவம் எண்டில்ல வைணவத்துக்குள்ளேயும் போட்டி இருக்கு இப்பவும் திருவரங்கத்தில (ஸ்ரீரங்கம்தான்) வடகலை தென்கலை பாகுபாடு இருக்கு.


இதெல்லாத்தையும் மறைச்சுத்தான் இப்ப இந்து என்ற புனிதமதத்தை சொல்றாங்கள் படத்தில பழசு ஞாபகப்படுத்தப்பட்டது பாருங்க அது இந்துத்துவாக்கு ஒரு சறுகக்கல்தான். சரி அப்ப இந்து என்ற அடையாளம் எப்ப வந்தது. அதையும் பாத்திட்டு அங்கால போவம் என்ன. வரலாற்றறிஞர் பொ.ரகுபதி சொல்லுறார் ‘ஒருமைத்தன்மையான சமய சிந்தனைக்குப் (Monotheism ) பழக்கப்பட்ட மேற்கத்தையார், அதே கண்களோடு தென்னாசிய சமய ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்து, அதற்கு ஒற்றைத் தன்மையான ஒரு பொதுச் சொல் கொடுக்க முனைந்தபோது வசதியாக அகப்பட்டது, ஆதிசங்கருடைய வைதிகம் அவைதிகம் என்ற பிரிப்பு.

வேதத்தை முன்னிறுத்தி, அதற்கூடாகப் பிராமணியத்தை முன்னிறுத்திய சமய சிந்தனையே இந்து சமயத்தின் மூலம் என்ற கருத்தை, மேற்கத்தேய கீழைத்தேய வாதிகள் சொல்லப்போக, அவர்கள் கண்களுக்கூடாக எம்மை நாம் பார்ப்பதுதான் நாகரிகம் என்று நினைத்த எமது தேசியவாதிகளும் சேர்ந்து செய்த கற்பிதம் தான் இந்து சமயம் என்ற இன்றைய கருத்து.

வேதத்தையும் வேதியரையும் எமது பக்தி இலக்கியங்கள் முன்னிறுத்தவில்லையா என்று கேட்போருக்கான பதில் அந்தப் பக்திஇலக்கியங்களிலேயே இருக்கிறது. சந்தேகம் இருப்போர் மாணிக்கவாசகருடைய போற்றித் திருவகவலை ஒரு தடைவ படிக்கவும் இப்ப விளங்கும் இந்து என்ற கருத்து. சுமார் 200 ஆண்டுகால இந்த இந்துசமய கருத்தோட்டம் சைவ வைணவ சண்டையை இல்லாமல் செய்திருக்கலாம். இப்போது அது ஒரு பாசிசமாக உருவெடுக்கையில் பழைய வராலற்றை பேசுவதனூடகத்தான் ஒடுக்கப்பட்ட தலித்துக்கள், ஆதிவாசிகள், மற்றும் சூத்திரர் பார்ப்பனிய இந்துத்தவத்துக்குள் சிக்காமல் காப்பாற்ற வழி இதை பார்ப்பனியம் ஆதிக்கம் செய்யிற நாட்டில ஒரு பார்ப்பான் அதை வெகுசன சினிமாவில காட்டறது எப்படிச் சொல்லுறது.

திருவரங்கநாதர் உலா

அது மட்டுமில்ல வைணவ கோயில்ல விதவைகள் கோயிலுக்குள்ளே போறது இப்பவும் குறைவு அதிலயும் அவர்கள் சாமிய தொடுவது நடக்காத காரியம் ஆனா படத்தில விதவை மூதாட்டி உலாவரும் உற்சவ மூர்த்திய தொட்டு அதுக்குள்ள கிருமி குண்டைப் போடுறா.

இந்துக்கடவுள்மார் தலித்துக்கள்ற ஏரியாப்பக்கமே போமாட்டினம் ஆனா படத்தில திருவரங்கர் தலித்துகள்ர சுடலைக்கு போறது மட்டுமல்லாம சுடலைக்குள்ளேயும் தாட்டுவைக்கப்படுகிறார்.

பிறகு முஸ்லிம்களோட வானில போகிறார் சீக்கியர் மருந்துபெட்டிக்குள்ள போகிறார் கடசியா வேதக்கார சேர்ச்சில நிற்கிறார். கடவுளை பயபக்தியோடு தூக்கிறதுதான் இந்துசமய வழக்கம் ஆனா படத்தில பொம்மையமாதிரி எறிஞ்சு விளையாடப்படுகிறார். கடசியா முதலமைச்சர் பிரதமர் எண்டு ஆட்சிபீடத்தின்ர உச்ச ஆக்கள் பேசுற மேடையில நடுநாயகமாக நிற்கிறார் ஆட்சிசெய்யிறது ஆரா இருந்தாலும் அவை இந்துப் பார்ப்பனிய சொல்படிதான் நடப்பினம் என்றத எப்படி காட்டியிருக்கினம் பாருங்க. இப்படி புனிதமானதை கிண்டலடிக்கிறது தமிழ் சீரியஸ் படங்களில கூட கிடையாது மசாலாப்படத்தில இதெல்லாம் சாத்தியமாகியிருக்கு என்னண்டு சொல்லுறது.

அமெரிக்காவும் புஷ்ஷும்

படத்தில அமெரிக்கக்காரன் தன்ர ஆதிக்க வெறிக்காக உயிர்கொல்லி கிருமிகளை உற்பத்தி செய்யிறதும் அதை அழியாமல் காப்பாத்த CIA செய்யிற பிரயத்தனங்களும் அதிகளவாச் சொல்லப்பட்டிருக்கு. அதிலையும் CIA ஏஜென்ட கமல்ர விசயம் இந்தியாவில காரில வார புஷ்ஷுக்கு சொல்லுறது மூலம் அமெரிக்கா எந்த நாட்டில போய் என்னத்தை கக்கினாலும் தன்ர கொள்கையை மாத்தாது என்டதும் விளங்கியிருக்கும். எல்லாத்துக்கும மேல அமெரிக்காவுக்கு போற பாப்பான்கள் தான் இப்படியாக கொடிய ஆயுதங்களுக்கு கைக்கூலி வேலைசெய்யிறதையும் காட்டியிருக்கினம். CIA செய்யிற கொலைகளில சிலதை காட்டியிருக்கினம் பாருங்க இப்படி படத்தில அமெரிக்க எகாதிபத்தியத்தின் உண்மைமுகம் மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கு


தலித்துக்கள்

‘உங்கள்ள எவண்டா படிச்சவன் இருக்கான்’ என்டு மணல்க்கொள்ளைக்காரன் கேக்க ‘இப்ப எங்களில படிக்காதவன் இல்ல’ எண்டு தலித் இளைஞர்கள் சொல்லிற மாதிரிகாட்சி தலித்மக்களை இனியும் எமாத்த ஏலாது என்றதை காட்டுது. ஆறுகளில் மணல்கொள்ளை போன்றவற்றை தலித்துக்கள்தான் தடுத்து சூழலியல் கேடுகள் வராம எதிர்க்கினம் இதில சாதி மசிர் ஒன்டும் இல்ல எண்டதும் காட்டப்படுகிறது. கடசியா மணல் முதலாளி தலித்தலைவர்ர காலை தொட்டுக்கும்பிடுற காட்சி என்ன சொல்லுது.

கிளைமாக்ஸ்ல ஒரு வசனத்தை சொல்வாரு கமல் ‘கடவுள் இல்லையெண்டு நான் சொல்லேல்லே. இருந்தா நல்லது எண்டுதானே சொல்லுறன்’ இதைத்தான நானும் சொல்ல விரும்பினான் இப்படி படத்தில கொம்பில கறக்க தல நிறைய முயற்சிசெஞ்சிருக்கிறார் ஆனால் பாவம் அவர்ர கைதான் நொந்துபோயிருக்கும். நம்மட சனத்துக்கு உது விளங்கியிருக்குமா?



--
எஸ். சத்தியதேவன்,

திருக்கோணமலை

Wednesday, July 2, 2008

செல்பேசிக் கண்களால் ஏழு ஒளிப்படங்கள்


படங்களின் மேற் சொடுக்கி உண்மையான அளவில் பார்க்கலாம்.





Sony Ericsson K800i | மாநகரத்தெருவோரம் - பாசிப்பயற்றுக்கஞ்சி | ஆமர்வீதி





nokia 7600 | கத்தரிப்பூ நீலத்தில் எங்கும் கடல் விரியும் | திருக்கோணமலைக் கடற்கரை





nokia N70






Sony Ericsson K800i






Sony Ericsson K800i | தனிமை






Sony Ericsson K800i | நகரத்தின் பின்புறத்தில் மழை பெய்யக்கூடும்






Sony Ericsson K800i

Creative Commons License
This work by V. Prashanthan is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 United States License.


--
வி. பிரஷாந்தன்,
திருக்கோணமலை