Monday, December 21, 2009

அம்மா பகவான் = சும்மா பகவான்


"வித்தியாமாலை" என்ற சொல்தான் எனக்கு அம்மா பகவனை அறிமுகப்படுத்தியது. இது நடந்தது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு. "வித்தியாமாலை" பற்றி கட்டாயம் சொல்லத்தான் வேண்டும் . "வித்தியாமாலை" கள்ளச் சாமியார்களின் தந்திரங்களில் உச்சக்கட்டம் என்று சொலும் அளவிற்கு பலரையும் தன்பால் ஈர்த்து இருந்தது. ஐந்து மணிநேரம் படித்தால் எவனும் பரீட்சையில் சித்தியடையலாம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டார் அம்மா பகவான். அதுதான் இந்த வித்தியாமாலை என்ற தந்திரம். இந்த மாலையை அணிந்து 21 நாள் அம்மா பகவனை நோக்கி விரதமிருந்தால் பரீட்சையில் சிறந்த பெறுபேறு கிடைக்குமாம். இதற்கு அவர்கள் ஒரு விதிமுறை விதித்திருந்தனர். ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் படிக்க வேண்டும் என்பதுதான் அது.

இதைப்பற்றி கேள்விப்பட்டு என் நண்பர்கள் பலரும் அதை நம்பி மாலை அணிந்து கொண்டனர். அவர்கள் என்னையும் அந்த முட்டாள்தனத்தை செய்யுமாறு அழைத்தனர். நான் இந்த முட்டாள்தனம் பற்றி என் நண்பர்களுக்கு விளக்கமுயன்று தோற்றுப்போனேன்.

என் நண்பர்களுக்கு இதைப்பற்றி விளக்க வேண்டுமானால் அம்மா பகவான் பற்றி நான் ஆராயவேண்டும் என்று எனக்கு தோன்றியது. ஆராயத்தொடங்கினேன் அப்போது எனக்கு முதலில் தெரிந்தது சத்திய லோகம்(ONENESS CENTER) எனும் அவர்களது வசிப்பிடத்தின் பெறுமதிதான்.


பார்க்கும் போதே என்ன ஒரு பிரம்மாண்டம். பார்ப்பதற்கு இன்னுமொரு வெள்ளை மாளிகை போல உள்ளது இது. இதன் பெறுமதி என தெரியுமா?
சும்மா இல்லை 400 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியில் கட்டப்பட்டதாம் இந்த ONENESS CENTER.
அப்போதுதான் யோசித்தேன்.
இந்த காசு எல்லாம் எப்படி அவர்களுக்கு வந்தது?

இதன் பிறகு ஒரு நாள் "கள்" என்ற வலைப்பூவில் உலாவிக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் நான் "அம்மா பகவான் விபச்சாரம்" என்ற கட்டுரையை வாசித்தேன். அதன் பின் எனக்கு இந்த விடயத்தில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. சில நாட்களின் பின் சத்தியன் அண்ணாவிடம் ஒரு கேள்வியை கேட்டேன். "ஏன் அதிகமான போலிச்சாமியார்கள் எல்லாம் இந்தியாவில உருவாகின்றார்கள்?". அவர் ஒரு சிறிய பதில் சொன்னார்." இந்தியாவில சாமியார்கள் சொத்துக் கணக்கு காட்டத்தேவையில்லை வருமான வரியும் கட்டத் தேவையில்லை" என்ற பதில் என்னை சிறிது அதிர்ச்சி அடையச் செய்தது. ஆனாலும் அதுதான் உண்மை என்பதை உணர்ந்துகொண்டேன்.

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் வெளிநாடு வாழ் பக்திப்பழங்களின் காசுதான் அம்மா பகவானின் வங்கி வைப்பை இரட்டிப்பாக்கிக் கொண்டுள்ளது .ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவவேண்டிய பணத்தை ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கொண்டுபோய் கொட்டுகிறார்கள். இவர்கள் தங்கள் முட்டாள்தனத்தை உணருவதுமில்லை மற்றவர்களை உணரவிடுவதுமில்லை.

அவர்கள் தமது அறிவின்மையால் அம்மா பகவானை நாடுகின்றார்கள் அங்கு பணத்தைக் கொட்டுகிறார்கள் ஆனால் பல இந்தியப் பணக்காரர்களும் சில அரசியல்வாதிகளும் தமது சொத்துகளைப் பதுக்கவும் அரசியல் ஆதாயங்களுக்காகவும் அம்மா பகவானை நாடுகின்றார்கள்.


இது பரவாயில்லை தங்களை ஒரு கண்காட்சியாக எண்ணிக்கொண்டார்கள் அவர்கள். தம்மைப் பார்க்கவும் பேசவும் மக்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா பகவானைப் பார்க்க ரூ.10000 பார்க்க ரூ.20000 என்று கட்டுரையில் வி.புருசோத்தமன் அன்று குறிப்பிட்டதை சில நாள்களுக்கு முன் நான் ஆதரப்பூர்வமாய் அறிந்தேன். திருகோணமலையை சேர்ந்த ஒரு யுவதி அம்மா பகவானைச் சந்திக்க சென்று வந்துள்ளார். சென்றுவந்த அவர் தமது உறவினர்களிடையே கூறியதாவது " அம்மா பகவானை பார்க்க 10000ரூபா காசு கட்டி போனன் ஒரு பிரியோசனமும் இல்ல, அவங்களப் பார்க்க நான் நிறைய நேரம் காத்திருந்தன் அவங்களும் வந்தாங்க ஆனா ஒரு நிமிஷம் கூட அவங்கள என்னால பார்க்க முடியல்ல" என்று அழுதபடி கூறியிருக்கிறார்.



ஆனா எவ்வளவுதான் பட்டாலும் புத்திவராத அவர் இறுதியாக பின்வருமாறு கூறியிருக்கிறார் "எனக்கு காசு போனது கூட கவலை இல்ல ஆனா அம்மா பகவானின் அருள் கிடைக்காதததுதான் எனக்கு கவலையா இருக்கு" இந்த இடத்திலதான் என் மனசில ஒரு கேள்வி தோன்றுகிறது. காசு கட்டித்தான் அருள் வாங்குவதனால் அம்மா பகவான் கடவுளின் அவதாரம் என்று சொல்லாம வியாபாரி படத்தில s.j.சூர்யா சொல்லுரத போல "100% Business Man" எண்டே சொல்லலாமே? அப்புறம் எதுக்கு இந்த அவதார வேடம். வழக்கமான இந்தியச் சீட்டுக் கம்பனி முதலாளிங்க போல ஒரு கம்பனி திறந்துட்டு இழுத்துமூடிட்டு போகலாமே.

ஐந்து ஆறு வருடத்துக்கு முன் இவர்களுக்கு ஒரு சைடு பிசினஸ் வேற இருந்தது. வேற என்ன எல்லா பணக்காரங்கள செய்றத போல சினிமா எடுக்கிறதுதான் அதுவும் பினாமி பேர்லதான். இப்படி இவங்க தயாரித்த படங்களில் ஒன்று முரளி சிம்ரன் நடித்த 'கனவே கலையாதே'.

சாமியார்கள் சினிமா எடுக்கிறதப் பற்றி என்னக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது, ஆனாலும் சமுதாய அழுக்குகளை சுத்தப்படுத்தி ஒரு பரிசுத்த உலகத்தை உருவாக்குவதே என் அவதார நோக்கம் என்று கூறும் இந்த கலியுக கல்கி அவதாரங்கள் சமூகத்துக்கு கருத்தைச் சொல்லும் படங்களை ஏன் எடுக்கவில்லை என்பது என் மனதில் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்திஉள்ளது.

இது தொடர்பாக எனது நண்பனான ஒரு அம்மா பகவான் பக்தனிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது அவன் எனக்கு கூறிய பதில் என்மனதில் இன்னும் ஒரு கேள்வியை எழுப்பியது. அவன் பதிலானது " அடேய் லூசா அந்த படங்களை அம்மா பகவான் தயாரிக்கவில்லை, அந்த படங்களை தயாரித்தது அம்மா பகவானின் பக்தர் ஒருவர்தான் அந்த பக்தர் படங்களை தயாரிக்கும் முன் அம்மா பகவானிடம் அந்தப்படம் வர்த்தகரீதியில் வெற்றி பெற வேண்டுமென்று ஆசீர்வாதம் பெற்றுத்தான் படத்தை தயரித்தாராம், அம்மா பகவானும் அவருக்கு அருள் புரிந்தார் ".

ஆனால் நான் அறிந்தவரையில் அந்த திரைப்படம் வர்த்தகரீதியில் தயாரிப்பாளரை திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இந்த இடத்தில்தான் எனக்குக் கேள்வி எழுந்தது, கடவுளின் (கள்ளக் கடவுள்)அருளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை என்றால் அவருக்குச் சக்தி எதுவும் இல்லையா? அப்படியானால் சக்தியில்லாதவர்களை ஏன் மக்கள் வணங்குகிறார்கள்? "சாணக்யா" படத்தில சரத்குமார் சொல்லுரதப்போல எல்லாம் "பப்ளிசிட்டி" தான்.

இதுக்கிடையில சில மதத்துக்கு முதல் அம்மா பகவான் ஒரு பெரிய கூத்தையே நடத்தயிருந்தாங்க. ஆனா பினிஷிங் டச்சிலத்தான் கோட்டவிடுட்டாங்க. அதுதான் கொழும்பு வாழ் பக்தர்களின் கனவில் வந்த அம்மா பகவானின் கதைதான், அகதி முகாம்களில் வாழும் வன்னி மக்களுக்கு உதவுங்க என்று பக்தர்கள் கனவில சொன்னாங்களாம் அம்மா பகவான். நல்ல விடயந்தான். ஆனா அது பேச்சோட சரி, நடந்ததா தெரியல்ல. கனவில வந்து சொன்ன அம்மா பகவான் ஏன் அவங்க சொன்னத செய்யாத பகதர்களுக்கு புத்தி புகட்டவில்லை. அப்படி என்றால் சாமி (கள்ளச் சாமி) வார்த்தைக்கு மரியாதையை இல்லையா? இப்படி இருக்கும் பொது அவங்கள எப்படி அவதாரமென்று சொல்லமுடியும்...........

தங்கள் பக்தர்கள் கனவில வந்ததுக்கு பதிலாக போர் நடவடிக்கைகளுக்கு முன் நின்றவர்களின் மனதை மாற்றி வன்னி மக்களுக்கு உதவியிருக்கலாமே? அது வேற எதுவும் இல்ல, இப்ப தமிழ்நாட்டிலயும் இலங்கையிலயும் அம்மா பகவானுக்கு மார்க்கெட் கொஞ்சம் கீழபோயிடிச்சு, மார்க்கெட்ட உயர்துரதுக்கு வர்த்தக நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் போலத்தான் இதுவும். அம்மா பகவானுக்கு நல்ல மனசு என்று சொல்லும் உங்கள் நண்பர்களை இயலுமானவரை விழிப்படையச் செய்யுங்கள்.

அம்மா பகவான் இப்போது நமது சமூகத்தில் வேர்விட்டுக்கொண்டிருக்கும் களைத்தான். ஆனால் அது ஒரு பூச்செடியின் தோற்றத்தில் உள்ளது. கண்ணுக்கு தெரியாத முட்களையும் அழகிய வாசனையான விஷப் பூக்களையும் கொண்டுள்ளது அதுதான் வித்தியாசம். வாசம் வருகிறதே என்று விஷத்தின் பக்கம் சென்றுவிடவேண்டாம். அழகிற்கும் அமைதிக்கும் பின்னால் எப்போதும் ஆபத்துதான் இருக்கும். வயலில் வளரும் களையை களை எடுப்பது விவசாயிகளில் கடமை என்பதுபோல சமூகத்தில் வளரும் களையை கிள்ளி எறிவது நமது கடமைதான்.

நண்பர்களே கடமையை செய்யுங்கள் பலனை எதிர்பாராதீர்கள்.நாளைய சந்ததி கள்ளச் சாமியார்கள் பிடியில் சிக்கக்கூடாது.

--
தி. அனோஜன்

Friday, December 18, 2009

மேரிமாதா படத்தில் தோன்றிய அற்புதத் திருக் கை! - திருகோணமலையில்.


அண்மையில் திருகோணமலையையே ஸ்தம்பிதம் செய்த ஒரு நிகழ்வு...


திருகோணமலையில் உள்ள பத்தாம் நம்பர் எனும் இடத்தில் (பத்தாம் குறிச்சி) உள்ள நடுத்தர வீடொன்றில் அன்னை மாதாவின் உருவப்படம் ஒன்று இருந்திருக்கிறது.


கடந்த 14.12.2009 (திங்கள் இரவு) அன்று திருகோணமலையில் பெய்த கடும் மின்னல், இடி, காற்று என்பவற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக ஏற்பட்ட மின்னல் ஒன்றின் போது தோன்றிய ஒளிக்கீற்று தமது வீடிற்குள் வந்ததாகவும் அதன் பின்னர் மாதாவின் உருவப்படத்தைத்தாங்கியவாறு இரண்டு ஒளி பொருந்திய கைகள் படத்திற்குள் வந்ததாகவும் வீட்டு உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.





இதில் என்ன ஒரு வியப்பு எனக்கு என்றால் இந்த சம்பவத்தின் பின்னர் தான் திருகோணமலையில் எத்தனை வேலையற்ற மக்கள் உள்ளார்கள் என்று கணக்கிட்டுக்கொண்டேன். நான் உள்ளடங்கலாக.

மற்றும் எனக்கு என்ன வருத்தம் அல்லது ஆதங்கம் என்றால் இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்பதை மக்கள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான்.

நான் ஓர் இந்து அதற்காகப் பிள்ளையார் பால் குடிக்கிறார் அல்லது தலையில் இருந்து திருநீறு வருகிறது, காளியின் முடி வளர்கிறது என்றாலோ நம்புகின்றவன் அல்ல.

மனிதன் விலங்குகளுக்குள் உள்ளங்டகினாலும் இயற்கையில் அவனுக்கு மேலதிகமாக ஆறாவது அறிவொன்று உள்ளது என்பது எம்மில் எத்தனை பேருக்குத்தெரியுமோ தெரியாது.


என் கருத்துக்கள் முழுக்க முழுக்க இதனை ஒரு அற்புதம் என்று நம்பி வதந்தி பரப்பித்திரிபவர்களுக்கே குறியானது.


தயவுசெய்து 6வது அறிவாக பகுத்தறிக்வைகொண்ட மனிதர்களாக செயற்படுங்கள்.


சில கருத்துக்கள்:


இது மேற்குலக நாடுகளின் ஒரு திட்டமிட்ட செயல்.

ஏனெனில் இது ஏலவே இவ்வாறு மழையின் போது தோன்றத்தக்கதாக சில இரசாயனக்கலவைகளைப்பயன்படுத்தித்தயாரிக்கப்பட்டதொரு ஓவியம்.


இது போன்று ஈராக் யுத்தத்தின் போது வானில் இருந்து விழும் குண்டுகளைத்த்தாங்கியவண்ணம் யேசுநாதர் வானில் தோன்றுவதாக ஒரு செயற்கைத்திட்டம் தீட்டப்பட்டத்தையும் மக்கள் அதனை நம்பி ஏமாந்ததையும் ஒருவர் எனக்கு ஞாபப்படுத்தினார்.


அதுமட்டுமல்லாது அண்மையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் நடராஜர் மலையின் மேல் கோபத்தாண்டபம் ஆடுவதாக சித்தரிக்கப்பட்டதையும் நினைவுபடுத்தினார்.


குட்டிச்செய்தி :

இந்தப் புகைப்படம் மடுமாதா திருத்தலத்தில் வாங்கப்பட்டதாம்.

மேலும் திருகோணமலையில் இதற்கு முன்னர் பிள்ளையார் பால் குடித்த்ததும் இந்த வீட்டில் தானாம்.

இது நாத்திகவாதிகளுக்கு நான் போடும் தீனி.

மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தாரளமாக எதிர்ப்புக்களைத்தெரிவிக்கலாம்.

உடனுக்குடன் பதிலளிக்க நான் காத்திருக்கிறேன்.

தயவுசெய்து வதந்திகளைப்பரப்பாதீர்கள்.


--
கோணேஸ்வரன் தனுகாந்த்




நண்பர்களே நான் வட்டமிட்டிருக்கும் இடத்தை நன்கு கவனியுங்கள்

இது ஒரு சந்தேகம் மட்டும் தான்
இந்த சந்தேகம் எனக்கு வரக்காரணம் என் நண்பன்தான்



சந்தேகம்:


உருவில் தோன்றிய கைகள் மாதாவின் படத்தில் கீழ்ப்பகுதியை மறைத்து 3D effect இல் இருந்தும் கீழே மூலையில் இருந்த logo வை ( அது கண்ணாடி மேல் பொறிக்கப் படவில்லை ) மறைக்கவில்லை. இது என்... சிந்தனை தான் நண்பர்களே நீங்கள் இந்தக் கோணத்திலும் வேறு கோணத்திலும் யோசியுங்கள்



பிந்திக்கிடைத்த தகவல்:

நண்பர்களே ஒரு நல்ல செய்தி

பாலையூற்றில் தோன்றிய இந்த மாதா உருவம் ஒரு திட்டமிட்ட சதி என்பதை பளையூட்ட்றை சேர்ந்த ஒரு பாதிரியார் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மக்களுக்கு அது ஒரு பொய் என்று உரைத்துள்ளார்


--
தி. அனோஜன்

Thursday, July 23, 2009

மானமில்லாமல் ஒரு கடிதம்


கடித்தின் வரலாறு
திருகோணமலையில இருக்கிற சத்தியன் என்கிற நான் .
2006கள்ற ஆரம்பத்தில சுனாமிக்குப்பி்ன்னர் எல்லோரையும் போலவே தொழில் முறை சமூகப்பணியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலம். சக நிறுவனம் ஒழுங்கு செய்த பால்நிலை சமத்துவ கிராமிய நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.

நிகழ்வு கிராம சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வுகள் திறந்த நிலையில் நடைபெற்றன. எல்லா நிகழ்ச்சியையும் பெண்களே செய்து கொண்டிருந்தார்கள் . ஒரு ஆண்களும் எந்த நிகழ்ச்சியும் செய்யேல்ல.
நிகழ்வை ஒழுங்கு செய்த சக நண்பி மீண்டும் ஆம்பிளையல அழைத்துக் கொண்டிருந்தார். யாரும் அசையிற மாரி இல்லை. (நாங்க எல்லாம் பள்ளிக் கூடத்தில எழுப்பிவிட்டாலே கூட்டத்திற்கு முன்னாடி கூச்சமே இல்லாமல கல்லுளி மங்கன் மாதிரி ஸ்டைலா நிப்பம். சுண்டைக்கா இவ எம்மாத்திரம் என்ட கனக்கா) எதுவுமே புரியாத மாதிரி இருந்தோம் . நிகழ்ச்சி முடிவடைகிற நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.


ஜென்டர் பலன்ஸ் இல்லாமல் நிகழ்வு முடியப் போகுதே என்ட கவலையில நண்பி கடுப்பாயிட்டாள் ' இங்க இருக்கிற ஆம்பிளைகளுக்கு மானமில்லையா. மானமுள்ள ஆண்களே எழுந்து வாருங்கள்.' என்றுவாறு கூப்பிடத்தொடங்கிவிட்டாள். என் பிரெண்ஸ்சுக்கு சங்கடமா போயிட்டுது. போதாதுக்கு நிகழ்வில இருந்த 2, 3 பெண்கள் வேற அவள் சொன்னத ரிப்பீட்டு அடிக்க ஆம்பிளஎல்லோரும் கடுப்பாயிட்டாங்கள். (பின்ன மானமுள்ள மறத் தமிழன்களெல்லா.)

ஆனாலும் ஒருத்தரும் அசையிற மாதிரி இல்லை. (எங்கள எல்லாம வாயல அசைக்க முடியுமா? அம்மா அப்பா சித்தப்பா பெரியப்பா இன்னும் சுத்தி சுத்தி சுப்பர்ர கொல்லைல இருக்கிறவன் எல்லாம் சொல்லி முடிஞ்சு பள்ளிக்கூடத்திலயும் பல பேர் சொல்லியும் கேட்காதவங்க நாங்க ) நண்பியோ விடுற மாதிரி ஆம்பிளையிட மானத்த இழுத்து சந்தியில விட்டாவது நிகழ்வில் ஒரு ஆணைப் பங்குபற்ற வைப்பது எண்டு முடிவுகட்டிட்டாள். (இல்லாட்டி நிகழ்வில பால்நிலை சமத்துவம் இல்லை எண்டு ரிப்போட்ட பார்த்திட்டு சொல்லிடுவாங்களே )

கடைசியா ஒரு தன்மான சிங்கம் எழும்பிச்சு. எங்களுக்கு பயங்கர குசி கைத்தட்டல்ல பின்னி எடுத்துட்டோமில்ல(அதுல மட்டும் எங்கள மிஞ்சேலாது ). அந்தாளு போயி கலாச்சாரம் அது இது என்டு பேச நண்பிக்கு ஏண்டா இவங்கள கூப்பிட்டம் என்டு போச்சு.

ஒரு வழியா நிகழ்சி முடிஞ்சு நண்பி கிட்ட கதைக்கப் போனா 'நீயெல்லாம் மானங் கெட்டவன் நான் அவ்வளவு கூப்பிட்டும் நீ கூட வரேலேயே' என்டு அறிக்கை விடுறாள். 'நான் மானமில்லாதவன் தான் என்டு சொல்லிட்டு' பிறகு ஒன்டும் கதைக்காம ஒப்பீசுக்கு போய் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன் அதை தான் நீங்க வாசிக்கப் போறீங்க. இதுக்கு ஒரு விரிவான பதில் எழுதிறன் என்டு சொன்னாள் இன்னும் எழுதவில்லை . இவ்வாறாக இந்தக்கடித்தின் கதை முடிகிறது.


(இந்தக் கடிதம் எழுதிய அன்றைய வடிவத்திலேயே இருக்கு. இதை இன்று எழுதியிருந்தால் சொல்லாடல் முறை மாறியிருக்க வாய்பிருக்கும் சில கருத்துக்கள், வசனங்கள், மேற்கோள்கள், உதாரணங்களுடன் இன்று முரண்பாடு உண்டு நான் வளந்திட்டேனே ......ஹையோ!...ஹையோ!.... எப்பூபூபூடிடிடிடிடிடி...... ஆயினும் இக்கடிதத்தின் அடிப்டையான கருத்துடன் இன்றும் மாறுபாடு கிடையாது)


மானமில்லாமை ஒரு விடுதலை உணர்வு

இனிய நண்பிக்கு,

எல்லா வளங்களும் உங்களுக்கு கிட்டட்டும். சமூகவிடுதலை நோக்கிய உங்கள் பணி தொடர என்வாழ்த்துக்கள். உங்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.

கடிதம் என்பது ஒரு அற்புதமான ஊடகம். அதில் பொது விடயங்களைப் பற்றி எழுதலாம். முகம் முறியாதபடி பல கருத்து முரண்பாடுகளை பறிமாறலாம். மனம் விட்டுப்பேசலாம். நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம். அதன்மூலமாக அன்றாட வாழ்வில் ஏற்படும் ஆதங்கங்களையும், சஞ்சலங்களையும் அதன் விவரங்களையும் பதிவு செய்யலாம். ஆயினும் எம் துரதிஷ்டம் விஞ்ஞான வளர்ச்சி அந்த அற்புதமான ஊடகத்தை எம்மிடமிருந்து அகற்றிவருகிறது.

சமூகவிடுதலையில் இன்றியமையாததொன்றாக பெண்விடுதலை அமைவதால் அதைபற்றி அக்கறை செலுத்துவது அவசியம்.

இதில் விடுதலை என்ற சொல் குறிப்பது என்ன. பல்வேறு விளக்கங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றின் ஊடுபொருள் எமக்கு வசதியற்ற அல்லது எம்மால் சகிக்க முடியாத ஒரு கட்டுக்கோப்பான அமைப்பை உடைத்து எமக்கு ஏற்றபடியான ஒரு கட்டுக்கோப்பான அமைப்புக்குச் செல்லுதல் ஆகும்.

இதில் நாம் விடுதலை என்ற சொல்லால் குறிக்கும் பொருளை முழுமையாக அடையமுடியாது. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் விடுதலை என்பது இயல்பாக இருத்தல். இப்பொருளை தெளிவாக உணர்த்தும் ஒரு சொல் எம்மிடையே ஒரு கௌரவமான செயலை குறிப்பதில்லை. ( இதில் கௌரவம் என்பதன் அரசியலை வேறொருமுறை) “கட்டாக்காலி” என்பதே அச்சொல்.

பொதுவாக தம்மியல்பில் திரியும் நாய்களையும் ஆடுமாடுகளையும் குறிக்க பயன்படும் இச்சொல், விடுதலை என்பதன் முழு அர்த்தத்தையும் ஓரளவுக்கு தரும் என்பது என்கருத்து.

கட்டாக்காலி அல்லது விடுதலை என்ற உணர்வின் அடிப்படை 'அடங்காமை 'அல்லது 'பணியமறுத்தல்' ஆகும். ஆகவே விடுதலை உணர்வு கொண்டவர்கள் 'பணிய மறுக்கும் பண்பாட்டைக்' கொண்டவராக இருத்தல் அவசியம். அடங்காமையை அடக்குதல், பணியமறுக்கும் பண்பாட்டை இல்லாமல் செய்தல் என்பதே அடக்குமுறை.

அடக்குமுறையினூடாகவே ஆதிக்கம் செலுத்தப்படும். ஆதிக்கம் செய்பவர்கள் ஆதிக்க வர்க்கம் எனப்படுவார்கள். ஆதிக்கவர்க்கத்தினர் சமூகத்தில் சிறுபான்மையினாரவும் நுண்மதிபடைத்தவராகவும் இருப்பர். தம்மீது அடக்குமுறை உள்ளது என பெரும்பான்மை அல்லது பெரும்பான்மைப் பலமுள்ள வர்க்கத்தினருக்கு தெரியும் இடத்து எதிர்ப்பு கிளம்பும். எனவே ஆதிக்க வர்க்கம் தம் ஆதிக்கத்தை நுண்தளங்களில் பலமாக ஊன்றி அதை ஒரு இயல்பானதாக மாற்றி தொடர்ந்து தம் ஆதிக்கத்தை /அதிகாரத்தை நிலைநிறுத்தும் வேலையைச் செய்வார்கள்.

அந்நிய ஏகாதிபத்தியம் என்றால் பொருளாதார பண்பாட்டுத்தளங்ளில் இது அதிமாகமாக செயற்படும். தம் சமூகத்தில் என்றால் இது பண்பாட்டுத்தளத்தில் நிலைநிறுத்தப்பட்டதாக இருக்கும். இங்கு சில பழக்கமுறைகளாக, உணர்வுகளாக அது இருக்கும். மானம் என்ற சொல்லால் குறிக்கப்படுவது அதுதான்.

விளக்கமாக ஒரு 'ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் அந்த ஒழங்கைப் பின்பற்றுதலே' மானமுள்ள செயலாக கருதப்படும். அந்த ஒழுங்கை மீறுதல் அவமானத்துக்குரிய செயலாக கருதப்படும். அதைச்செய்தவன் மானமிழந்தவானாக, அவமானப்பட்டவனாக ஆக்கப்படுவான். அவன் அதை விரும்பாமல் தான் மானுமுள்ளவன் என்பதை காட்டுவதற்காக அந்த பொது ஒழங்கை விருப்பமில்லாவிட்டாலும் பின்பற்றுவான் / பின்பற்றத் தொடங்குவான். இதே காரணத்தால் அவனை ஒத்த உணர்வுள்ளவர்களும் அப்பொது ஒழுங்கைப் பின்பற்றுவார்கள் / பின்பற்றத் தொடங்குவார்கள்.


இங்கு ஒழுக்கம் என்பதற்கு கீழே அனைவரும் அடக்கப்படுகின்றனர். இதில் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும் பொதுவாக இந்த பொது ஒழுங்குகளை ஆதிக்கவர்க்கத்தினரும் அவர்களோடு இணைந்த அறிவுலக அதிகார வர்க்கமும்தான் தீர்மானிக்கிறது. அவர்கள் தம் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு ஏற்றவகையில்தான் இந்த ஒழுக்கங்களை கட்டமைக்கிறார்கள். அது அவசியம் என்றும் மிக முக்கியமான தென்றும் அது மீற்ப்படக்கூடாததென்றும் நம்பவைக்கின்றனர். இதுதான் கௌரவம் என்று கட்டமைக்கின்றனர். இதன் மூலம் விடுதலையை,விடுதலை உணர்வை ல்லாமல் செய்கின்றனர்.

இந்த கட்டமைப்புகளை நிராகரிக்க, அதன் நுண்தள அதிகாரங்களைத்தாண்டி செயற்பட 'மானம்' இருக்கக்கூடாது. ''மானம் இல்லாதிருத்தல் ஒரு விடுதலை உணர்வு''. மானத்தை இல்லாமல் செய்வதானலேயே பூரண விடுதலையை, எல்லோருடைய பங்கு பற்றலை நாம் சாத்தியமாக்க முடியும்.

தான் பின்பற்றும் மானமுள்ள ஒழுக்கம் அநீதியானது எனக்கருதும் ஒருவன் அதை மறுத்து செயற்பட்டால் அவன் மானமிழந்தவானாக்கப்படுவான். இந்நிலையில் அவனுக்குக்கான ஆதரவுத்தளமாக, அவனது இயங்குதளமாக விடுதலையை நோக்கி செயற்படும் அமைப்புக்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் முழுவிடுதலை என்பது சாத்தியமாகும்.

இதை நீங்கள் ஏற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆயினும் ஒன்று ''ஒருவிடுதலை இயக்கமானது ஒரு பிரச்சனைக் குவியத்துக்குள் ஒடுங்கியதாக இல்லாமல் தன்னை பல வகையிலும் விரவுபடுத்திகொண்டால்தான் அதன் செயற்பாடுகள் நிலைத்து நிற்கும்.''

இதில் சில மேற்குறிகாட்டல்களை மட்டுமே செய்துள்ளேன். இது பற்றி தங்களுக்கு நேரம் இருந்தால் மேலும் கலந்துரையாடலாம். இக்கருத்துக்களுக்கான தங்களுடைய உடன்பாடின்மையை தயவுசெய்து அறியத்தாருங்கள்.

“தன்னிலை தாளாமையும் அந்நிலை தாண்டற்கால் உயிர் வாழாமையும் மானமெனப்படும்”
உங்கள் பார்வை எப்போதும் உயரத்தை நோக்கியே இருக்கட்டும்
என்றும் அன்புடன்,
எஸ்.சத்யதேவன்




--
எஸ். சத்யதேவன்

Thursday, July 9, 2009

அப்பா





கர்ப்பப்பை ஏதும் அங்கில்லை
பால் சுரக்கும் உறுப்புகள் தானுமில்லை
தாலாட்டுகள் ஏதும் தெரியவில்லை
ஆனாலும் தெரிந்தவரை
அன்பென்றால் அப்பாதான்

தவழும் வயதில் இடறி விழுந்தால் தூக்கி விட்டதில்லை
ஓடி விளையாடும் போது, கூட இருந்ததில்லை
தக்க தருணத்தில் என்னை தரணியில் உயர்த்திவிட்டார்
அன்பென்றால் அப்பாதான்

படிப்பு, விளையாட்டு
துக்கம் சந்தோஷம்
அன்பு அதிகாரம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன்
அப்பா என்ற உறவின் மூலம் ஆண்களை நேசிக்க கற்றுக் கொண்டேன்

அப்பா எனும் ஒற்றை சொல்லில்
என் விடியல்கள் புலர்ந்து நிற்கிறது
அப்பா எனும் இந்த சொல்லில்
என் வாழ்க்கை வசந்தத்துக்குள்ளேயே உழல்கிறது - இருப்பினும்

தவமொன்று செய்திடுவேன்
காலமெல்லாம் கூடிவாழ
மாண்டு போயின் மீண்டும்
மாறிப் பிறந்திருக்க!

Wednesday, April 8, 2009

கலங்காதே...




கண்மணிநின்றது கல்லூரிவாசலிலே
கயவர்கள் நின்றது
கல்லூரி அருகினிலே
பழக்கப்பட்ட பரதேசியும்
பணத்தாசை பிடித்தவனும்
இரக்கமுகத்தோடும்
அரக்க குணத்தோடும்
அழைத்தான் உன்னை
கணனி சொல்லித்தந்தார் என்று
கண்மணியே கண்டவுடன்நீ சென்றாய்
கதிகலங்கவைத்து விட்டான்
கல்லூரி அனைத்தையும்
விதி விட்ட விடுமுறையோ
விண்ணுலகம் நீ சென்றாய்
மதி கெட்ட மானுடர்கள்
மண்ணுக்குள் செல்வார்கள்
மலரே நீ கலங்காதே…


-- த.சயந்தன்

Wednesday, January 28, 2009

உவர்மலை வீ.எஸ்.குமாரினுடைய ‘அப்பா’ சிறுகதைத் தொகுதி வெளியீடும்; அறிமுகமும்.


“கள்” சஞ்சிகைக் குழுமத்தின் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக பிரதேச எழுத்தாளர்களை அவர்களது சொந்த கிராமத்தில் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தல், நூல் வெளியீடுகளையும் அறிமுகத்தையும் குறிப்பிட்ட அரங்குகளிலிருந்து விடுவித்து கிராமங்களில் நடாத்துதல் ஆகியவை உள்ளது.

அதனுடைய முதல்நிகழ்வாக உவர்மலை வீ.எஸ்.குமாரினுடைய ‘அப்பா’ சிறுகதைத் தொகுதியினுடைய வெளியீடும்; அறிமுகமும் நிகழ்வு உவர்மலை இராஜவரோதயம் சனசமூக நிலையத்தில் கடந்த 04-01-2009 அன்று மாலை 3.45 மணியளவில் நடைபெற்றது.



இதில் விருந்தினர்களாக எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளர்களுமான கலாபூசணம். ச.அருளானந்தம், கலாபூசணம்.தம்பி தில்லை முகிலன், உவர்மலை கிராமசேவகர் திரு.ஆ.மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


உவர்மலை கிராமத்தின் மத்தியிலும் குறித்த மண்டபத்திலும் நடந்த முதலாவது நூல்வெளியீட்டு நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியரின் சொந்த கிராமம் என்பதால் வழக்கமாக நூல்வெளியீடுகளுக்கு வரும் எண்ணிக்கையிலும் அதிகமானவர்கள் வருகை தந்திருந்தனர்.


அரங்கு நிறைந்து அரங்குக்கு வெளியிலும் சிலர் நின்றபடி நிகழ்வில் கலந்துகொண்ட முதல் நூல் வெளியீடு திருகோணமலையில் இதுதான். கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆசிரியரின் நண்பர்கள், உறிவினர்கள், எழுத்தாளர்கள், ஆகியோருடன் இளம்பருவத்தினரும் கணிசமான அளவு வந்திருந்தனர். குறிப்பிடத்தக்கவர்கள் கலந்துகொண்ட முதல் நூல்வெளியீடு என்பது இங்கே சுட்டவேண்டியது.


நிகழ்வின் தலைமை தொடக்கம் அறிமுகவுரை, கருத்துரை வழங்கிய அனைவரும் இளம்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடவேண்டியது.

முதல் நிகழ்வாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.


விருந்தினர்களுடன் சமூகசெயற்பாட்டாளர்களாக இருந்து தற்போது சிறிது ஒதுங்கிய எமக்கு நேர்மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் மங்கள விளக்கினை ஏற்றினார்கள்.


அடுத்து யுத்தத்தால் மரணமடைந்த மக்களையும் நினைவுகூர்நதும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் அனைவருக்காகவும் இரண்டுநிமிட மௌனபிரார்த்தனை இடம்பெற்றது.
தொடர்ந்து வரவேற்புரையை "கள்" குழும உறுப்பினர் ஸ்ரீ.தயாளன் நிகழ்த்தினார்.


நிகழ்வை தலைமைதாங்கி தலைமையுரையை "கள்" குழும உறுப்பினர் கு.சுரேஸ் நிகழ்த்தினார். தாம் எதிர்பார்த்ததைவிட அதிமானவர்கள் கலந்து கொண்டதால் மிகுந்த மகிழ்சி அடைவதாக திரும்ப திரும்ப கூறிய அவர் 5-6 வருட ஒதுங்கலுக்குப்பின்னர் தாம் இணைந்து செயற்படும் நிகழ்ச்சி இது என குறிப்பிட்டார்.


கடந்த காலத்தில் எழுத்தாளர்கள் அறிவுஜீவிகள் என்பவர்கள் இளம்தலைமுறையினரை அலட்சியப்படுத்தியதையும் தத்தமக்குள் சுயபுராணச் சண்டைகள் போட்டதையும் சுட்டிக்காட்டினார்.

உவர்மலைகளில் வசித்து உவர்மலையிலே கல்வி கற்று தற்போது லண்டனில் இருக்கும் வி.எஸ்.குமாரின் கதைகள் தனது வாழ்கையையும் நினைவு படுத்துவதாக குறிப்பிட்ட அவர் வி.எஸ்.குமார் முழுக்க முழக்க வாழக்கையில் ஆசிரியர்பெற்ற அனுபவம் என்பதை தன்னால் உணரமுடிகிறது என்றார்.

நிகழ்வில் அதிகமானோர் கலந்து கொண்டது "கள்" குழுமத்திற்கு உற்சாகத்தையும் தொடர்ந்து செயற்பட உத்வேகத்தையும் தருவதாகவும் குறிப்பிட்டார்.


நூலின் அறிமுகவுரையை பெரிய ஐங்கரன் நிகழ்தினார். தாம் சார்ந்துள்ள கோட்பாடு இல்லாத படைப்புகளை படைப்புகள் அல்ல என கருதியும் பேசியும் திரிந்தவர்களை தமது உரையில் ஐங்கரன் காரமாக விமர்சித்தார். தொகுதியில் உள்ள கதைகளைப்பற்றி உரையாற்றிய ஐங்கரன் சிலகதைகளைப் படித்தபோது தான் நேரில் அனுபவித்தவற்றை நினைவு படுத்தியதையும் அதனால்தாம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதையும் குறிப்பிட்டார்.


நூலை கலாபூசணம்.ச.அருளானந்தம் வெளியிட உவர்மலையின் பிரமுகர் திரு.எஸ்.சத்தியசீலராஜா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப்பிரதிகளை நேர்மூத்ததலைமுறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பெற்றுக்கொண்டனர்.






தொடர்ந்து கருத்துரைவழங்கிய எஸ்.சத்யதேவன் ‘ஆசிரியர் எழுதிய ஊடகம் மற்றும் அதன் வாசகர் குழு ஆகியவற்றை கருத்தில் கொள்வதாக குறிப்பிட்டதுடன் ஒவ்வொருபடைப்பாளியும் தான் வாசகருக்கு சொல்லவிரும்பிய முக்கிய செய்தியை தனது படைப்பில் வெளிப்படுத்திருப்பான் என்ற அடிப்படையில் வி.எஸ்.குமாரின் கதைகள் முற்போற்கான பெண்களை கொண்ட சமுதாயத்தை கோருவதையே செய்தியாக கொண்டுள்ளன’ என்று குறிப்பிட்டார்.


இரண்டாவதாக கருத்துரையை நிகழ்திய வி.புருஷோத்மன் வி.எஸ்குமாரின் கதைகள் சில இடங்களில் தமிழ்சினிமாத்தனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.


விருந்தினரும் கலைஞருமான தம்பி தில்லை முகிலன் மற்றும் எழுத்தாளர் ச.அருளானந்தம் , கிராமசேவகர் ஆ.மகேஸ்வரன் ஆகியோர் கள் குழுமத்தின் செய்ற்பாடுகளை வரவேற்பதோடு இவ்வாறன செய்றபாடுகளுக்கு தாமும் ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டனர்.




கலந்து கொண்டவர்களிலிருந்து கருத்துத் தெரிவிக்க விருப்பம் தெரிவித்து உரையாற்றிய ஓவியரும் நாடகக் கலைஞருமான திரு.ஜீவானந்தன் இந்த நிகழ்வு தம்மை மிகுந்த உற்சாகப்படுத்துவதாகவும் இது ஆரம்பம் மட்டுமே திருகோணமலையில் நீண்டகாலமாக நிலவும் கலை, இலக்கிய செயற்பாட்டு வறுமையினை "கள்" போன்ற குழுமங்களின் தொடர் செயற்பாடுகள் நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.



நூலாசிரியனின் சகோதரி வே.மைதிலியின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது

Monday, January 19, 2009

என் வீட்டில் ஒரு பூனைக்குட்டி


கறுப்பும் வெள்ளையுமாய் நீண்ட
புஷ்டியான அழகிய
வாலுடன்

என் வீட்டில் ஒரு பூனைக்குட்டி
அது
கண்மூடிப் படுத்திருக்கும் அழகே தனி.

ஏதோ ஒரு 'ஞானி' போல...
எப்போதும் நித்திரைதான்.

உலக நடப்புகளில் தனக்கு
'சம்பந்தம்' இல்லாததுபோல
எப்போதும் 'அமைதி'தான்.

ஆக்ரோஷமாய் கத்தி பயனில்லை என்பதுபோல
என் வீட்டில் ஒரு பூனைக்குட்டி.

தன் முன்னே பாய்ந்துவரும் எலியைக்கூட
தீண்டாது.

'மனிதாபிமானத்' தன்மையோடு
நாயைக்கண்டால்
ஓடி ஒளிந்துகொள்ளும்.

'பயங்கரவாதம்' கூட
புரிந்ததுபோல

என் வீட்டில் ஒரு பூனைக்குட்டி.


--
மீரா