Sunday, December 28, 2008

அம்மா பகவான் விபசாரம்


இப்போது அதிகமாகப் பேசப்படும் பாபா அல்லது நட்சத்திரம் ‘அம்மா பகவான்’.



இந்த அம்மா பகவான் கலாச்சாரம் எங்கு பார்த்தாலும் சூடு கிளப்பபுகிறது. யாரிந்த அம்மா பகாவன் என்பதை தெரிந்து கொள்ள என் நண்பனொருவனை அணுகினேன். அவனிடம் விசாரித்தபோது அவன் சொன்னான் ‘அம்மா பகவான் கல்கி அவதாரம்’ என்றும் , பல அற்புதங்கள் செய்துள்ளார் என்றும் அவருக்குப் பல்லாயிரம் பக்தர்கள் உள்ளார்கள் என்றும் பக்தி ததும்பச் சொன்னான். நானும் ஏதோ வியந்தது போல் முகத்தை வைத்துக்கொண்டு ‘ஆ! அப்படியா…..!’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன்.அவன் சொன்னபின் எனக்கிருந்த குழப்பமெல்லாம் அம்மா பகவானை நம்பலாமா நம்பக்ககூடாதா என்பதல்ல, ஒரு தனிமனிதன் பல்லாயிரக்கணக்கான மக்களை எப்படி ஏமாற்றுகிறான் என்பதுதான். பின் இந்த விடயத்தை மூளையில் புதைத்துவிட்டேன்.


பின்பு ‘இந்த கடவுள் (பம்மாத்து) ஜோடிகளின் கள்ள வேலைகள் பற்றி சத்தியண்ணா எடுத்துச் சொன்னார். அண்மையில் ‘கள்” குழுமத்தின் சந்திப்பில் அம்மா பகவான் முடியும் இழுக்கப்பட்டது. அப்போதுதான் இந்த அம்மா பகவானால் ஏற்படும் பாரதூர விளைவுகளை என்னால் அறிய முடிந்தது. இறுதியாக அங்கு என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காக ‘கள்” நண்பர்கள் சிலருடன் திருகோணமலை உவர்மலையில் அம்மா பகவான் பஜனை நடக்கும் இடத்துக்குச் சென்றேன்.


மாலை 5 மணி இருக்கும் நானும் நண்பர் பிரசாந்தனும் முதலில் சென்றோம். சிறிது நேரத்தின் பின் தோழர்கள் சத்தியன், மு. மயூரன் இருவரும் வந்தார்கள். அங்கு சுமார் 15-20 வரையான நடுத்தர வயதுப் பெண்களும், சில இளைஞர் யுவதிகளும் இருந்தார்கள். நாம் கடைசி வரிசையில் உட்கார வைக்கப்பட்டோம். பின் அவர்கள் தங்கள் செயல்களைத் தொடங்கினார்கள். அவர்களின் இம்சையான செயல்களைப் பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்து நகையாகச் சிரித்துக்கொண்டோம். ஏதோ சில மந்திரங்களையும் (ஒலிவடிவம்), மனதைச் சாந்தப்படுத்தும் யோகாக்களையும் சொல்லித்தந்தனர்.


இந்த யோகாக்களினாலும் மந்திரங்களினாலும் சிலவேளை மனது சாந்தப்படலாம். ஆனால் இதன்பின் அம்மா பகவான் இல்லை விஞ்ஞானம் உள்ளதை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.அதில் பெரிய பகிடி என்னவென்றால் அங்கே பஜனை நடக்கும்போது மின் துண்டிக்கப்பட்டிருந்தது. மெல்லிருட்டிலேயே பஜனை நடந்தது. பின் பஜனை முடியும் தறுவாயில் ஒரு தலைமையம்மா “அம்மா பகவானிட்ட வரம் கேக்கிறவங்க அமைதியா கேளுங்க” என்றதும் அனைத்து பக்தர்களும் (சுயநலவாதிகளும்) கேட்கத்தொடங்கினர். அப்போதுதான் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சரிசெய்யப்பட்டு வந்தது. அப்போது அந்த தலைமையம்மா “பார்த்தீங்களா அம்மா பகவான் அருளை” என்று சொன்னதும் எனக்கு சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது இருந்தாலும் முயற்சி எடுத்து அடக்கிக்கொண்டேன்.ஆனால் மின் துண்டிக்கப் பட்டதிலும் பின் இணைப்பு வந்ததிலும் இது விதியா? அல்லது சதியா? என்பதில் எனக்கு மலையளவு சந்தேகம்.


என் இனிய அறிவுமிக்கத் தோழர்களே! மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.


தோழர்களே! இந்த அம்மா பகவான் தன்னை கல்கி அவதாரம் என்கிறார் (பலர் தம்மை கல்கி அவதாரம் என்கிறார்கள் அது வேறுகதை) எங்கேயாவது கடவுள் தன்னைத்தானே சுயபிரகடனம் செய்வார்களா? அவர் தானே கடவள் என்று சுயப்பிரகடனம் செய்து கொண்டு மிக அதிகமான சொத்துகளைச் சேர்த்துக்கொள்கிறார். மக்களின் பணத்தை பறித்துக்கொள்கிறார். அம்மா பகவானைப் பார்ப்பதற்கு 10000 ரூபா பேசுவதற்கு 20000ரூபாவாம் அப்படியானால் படுப்பதற்கு………………..

அம்மா பகவானை காசுகட்டிப் பார்த்தவர்களினதும் பார்க்கப்போகிறவர்களினதும் வாதம் என்னவென்றால் அம்மா பகவானுக்கு காசுகொடுத்துப் பார்த்தால் அந்த காசு பலமடங்கு திரும்பக்கிடைத்துவிடும் என்பதுதான். காசு காசு என்று அலையும் சுயநலாவதிகளே இயலுமானவரை அறிவுள்ள சுயநலவாதிகளாக இருங்கள்.

பகவான் அன்பானவர்தானே. அப்படியானால் பகவானுக்குத்தேவை அன்புதானே ஒழிய காசில்லையல்லவா?. பகவானுக்கு அன்பிருந்தால் காசைக் கொடுக்கவேண்டியது தானே அதேன் முதலில் காசை வேண்டி பின்பு பல மடங்காகத்தருவது. கடவுள் என்ன சீட்டுக் கம்பனியா நடத்துகிறார். அங்கேயாவது நமக்கு குறிப்பிட்டகாலத்தில் எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியும். ஆனால் இங்கே நாம் காசு கொடுப்பது தெரியும் ஆனால் அது எப்போது பலமடங்காகக் கிடைக்கும் என்பது தெரியாது. இந்த 10000ரூபாவை அல்லது 20000ரூபா வங்கியில் வைப்புசெய்தால் சிறிதளவு வட்டியாவது குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்கும். வங்கி அம்மாபகவான் போல ஏமாற்றவும் மாட்டாது. அங்கே ரசீது கொடுப்பார்கள் கண்காய்வு செய்வார்கள் சட்டப்பாதுகாப்பாவது இருக்கும்.


நல்வாழ்வை விரும்பும் நண்பர்களே! எந்தக் கடவுளாவது தன்னை பார்ப்பதற்கோ பேசுவதற்கோ காசு கேட்குமா?


பக்தனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு விபச்சாரிக்கும் உறவாளருக்கும் உள்ள தொடர்பா? பக்தி ஒன்றும் விபச்சாரவிடயம் இல்லை என்பதை தோழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


ம்…சரி உங்கள் வாதப்படியே வைத்துக் கொள்வோம். அவர் கடவுள்தான்… அப்படியானால் சுனாமிப்பேரலை வருவதற்கு முன் சுனாமி வருகிறது என்று சொல்லி பல இலட்சம் உயிர்களைக் காத்திருக்கலாம் தானே. சுனாமி வருவது அமெரிக்க விஞ்ஞானிகளுக்குத் தெரிந்தளவு ஏன் அம்மா பகவானுக்குத் தெரியவில்லை. பக்தர்களிடமிருந்து கோடிகோடியாகப் பணத்தை எடுக்கும் அம்மா பகவான் ஏன் நிவாரணம் கொடுக்கவில்லை. சுவாமி சுனாமி நிவாரணம் கொடுக்கக் கூடாது என்பது சட்டமா?


சரி உங்கள் அம்மா பகவான் ‘கல்கி’ அவதாரமோ ‘கல்கண்டு’ அவதாரமோ ‘ஆனந்த விகடன்’ அவதாரமோ சக்தியுள்ள அவதாரம் என்றால் எமது உள்நாட்டு பிரச்சினையும் உள்நாட்டு யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து துன்பப்படும் மக்களை ரட்சிக்கட்டுமே. அவ்வாறு நடந்தால் நானே அம்மாபகவானுக்கு பலகோடி பக்தர்களை சேர்க்கப்பாடுபடுவேன்.



இந்த அம்மா பகவான் பின்னணியில் மாபெரும் உளவுத்துறை செய்றபடுவதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த அம்மா பகவான் பின்னணியில் ஒரு உளவுத்தறை பின்னிருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு பாரதூரமானவை. இந்த உளவு நிறுவனங்கள் அம்மா பகவானூடாக எமது மக்களைச் சிந்திக்கவிடாமல் பக்தி என்ற பத்தடி வளவுக்குள் எம் மக்களின் மூளையை புதைக்க முற்படுகின்றனர். எமது மக்களைச் சுயநலவாதிகளாக்குகின்றனர்.மற்றும் இந்த உளவு நிறுவனங்கள் அம்மா பகவான் மூலமாக எமது மக்களின் தேவை என்ன? அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து எம்மீது ஆதிக்கம் செலுத்தி தம் நிகழ்ச்சிநிரல்களை எம்மூடாக நகர்த்துவார்கள். அன்பானவர்களே! அம்மா பகவானை வணங்கி அந்நிய ஆதிக்கத்தை உட்செலுத்திவிடாதீர்கள்.


வாருங்கள் தோழர்களே அம்மா பகவான் அழுக்குகளைக் கழுவுவதற்கு
--
வி. புருஷோத்மன்

Monday, December 15, 2008

விலைமகள்


வெட்கச் சிவப்புகள் ஏதுமில்லை
சின்னச் சிணுங்கல்கள் துளியுமில்லை
கன்னக் குழி அழகுகள் காணவில்லை
கட்டை விரல் கோலங்களும் இல்லாமல்
அமைதியாய் நான்!

தாலிகயிறு இன்னும் ஏறவில்லை
தொப்புள் கொடியும் அறுபடவில்லை
மெட்டி போட்டுவிட ஒருவனில்லை
சடங்கு சம்பிரதாயத்துக்கு வாய்ப்பில்லாமல்
அமைதியாய் நான்!

சாளரத்தை சாத்திவிட்டு
கதவெல்லாம் பூட்டிவைத்து
ஆடைகளை அவிழ்த்து போட்டு
மனசை மட்டும் இரும்பாக்கி
அமைதியாய் நான்!

தொட்டுபார்க்க ஒருவன்
சுவைத்துப் பார்க்க ஒருவன்
நோய்கள் காவிவரும் ஒருவன்
கர்ப்பத் தடைகளோடு அவர்களுடன்
அமைதியாய் நான்!

இன்றைய முகம் நாளை காண்பதற்கில்லை
எனக்கும்தான் முகவரியும்
முகங்களும் நிரந்தரமில்லை! - ஆனாலும்
அமைதியாய் நான்!



--
மீரா,
திருக்கோணமலை