Thursday, July 23, 2009

மானமில்லாமல் ஒரு கடிதம்


கடித்தின் வரலாறு
திருகோணமலையில இருக்கிற சத்தியன் என்கிற நான் .
2006கள்ற ஆரம்பத்தில சுனாமிக்குப்பி்ன்னர் எல்லோரையும் போலவே தொழில் முறை சமூகப்பணியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலம். சக நிறுவனம் ஒழுங்கு செய்த பால்நிலை சமத்துவ கிராமிய நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.

நிகழ்வு கிராம சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வுகள் திறந்த நிலையில் நடைபெற்றன. எல்லா நிகழ்ச்சியையும் பெண்களே செய்து கொண்டிருந்தார்கள் . ஒரு ஆண்களும் எந்த நிகழ்ச்சியும் செய்யேல்ல.
நிகழ்வை ஒழுங்கு செய்த சக நண்பி மீண்டும் ஆம்பிளையல அழைத்துக் கொண்டிருந்தார். யாரும் அசையிற மாரி இல்லை. (நாங்க எல்லாம் பள்ளிக் கூடத்தில எழுப்பிவிட்டாலே கூட்டத்திற்கு முன்னாடி கூச்சமே இல்லாமல கல்லுளி மங்கன் மாதிரி ஸ்டைலா நிப்பம். சுண்டைக்கா இவ எம்மாத்திரம் என்ட கனக்கா) எதுவுமே புரியாத மாதிரி இருந்தோம் . நிகழ்ச்சி முடிவடைகிற நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.


ஜென்டர் பலன்ஸ் இல்லாமல் நிகழ்வு முடியப் போகுதே என்ட கவலையில நண்பி கடுப்பாயிட்டாள் ' இங்க இருக்கிற ஆம்பிளைகளுக்கு மானமில்லையா. மானமுள்ள ஆண்களே எழுந்து வாருங்கள்.' என்றுவாறு கூப்பிடத்தொடங்கிவிட்டாள். என் பிரெண்ஸ்சுக்கு சங்கடமா போயிட்டுது. போதாதுக்கு நிகழ்வில இருந்த 2, 3 பெண்கள் வேற அவள் சொன்னத ரிப்பீட்டு அடிக்க ஆம்பிளஎல்லோரும் கடுப்பாயிட்டாங்கள். (பின்ன மானமுள்ள மறத் தமிழன்களெல்லா.)

ஆனாலும் ஒருத்தரும் அசையிற மாதிரி இல்லை. (எங்கள எல்லாம வாயல அசைக்க முடியுமா? அம்மா அப்பா சித்தப்பா பெரியப்பா இன்னும் சுத்தி சுத்தி சுப்பர்ர கொல்லைல இருக்கிறவன் எல்லாம் சொல்லி முடிஞ்சு பள்ளிக்கூடத்திலயும் பல பேர் சொல்லியும் கேட்காதவங்க நாங்க ) நண்பியோ விடுற மாதிரி ஆம்பிளையிட மானத்த இழுத்து சந்தியில விட்டாவது நிகழ்வில் ஒரு ஆணைப் பங்குபற்ற வைப்பது எண்டு முடிவுகட்டிட்டாள். (இல்லாட்டி நிகழ்வில பால்நிலை சமத்துவம் இல்லை எண்டு ரிப்போட்ட பார்த்திட்டு சொல்லிடுவாங்களே )

கடைசியா ஒரு தன்மான சிங்கம் எழும்பிச்சு. எங்களுக்கு பயங்கர குசி கைத்தட்டல்ல பின்னி எடுத்துட்டோமில்ல(அதுல மட்டும் எங்கள மிஞ்சேலாது ). அந்தாளு போயி கலாச்சாரம் அது இது என்டு பேச நண்பிக்கு ஏண்டா இவங்கள கூப்பிட்டம் என்டு போச்சு.

ஒரு வழியா நிகழ்சி முடிஞ்சு நண்பி கிட்ட கதைக்கப் போனா 'நீயெல்லாம் மானங் கெட்டவன் நான் அவ்வளவு கூப்பிட்டும் நீ கூட வரேலேயே' என்டு அறிக்கை விடுறாள். 'நான் மானமில்லாதவன் தான் என்டு சொல்லிட்டு' பிறகு ஒன்டும் கதைக்காம ஒப்பீசுக்கு போய் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன் அதை தான் நீங்க வாசிக்கப் போறீங்க. இதுக்கு ஒரு விரிவான பதில் எழுதிறன் என்டு சொன்னாள் இன்னும் எழுதவில்லை . இவ்வாறாக இந்தக்கடித்தின் கதை முடிகிறது.


(இந்தக் கடிதம் எழுதிய அன்றைய வடிவத்திலேயே இருக்கு. இதை இன்று எழுதியிருந்தால் சொல்லாடல் முறை மாறியிருக்க வாய்பிருக்கும் சில கருத்துக்கள், வசனங்கள், மேற்கோள்கள், உதாரணங்களுடன் இன்று முரண்பாடு உண்டு நான் வளந்திட்டேனே ......ஹையோ!...ஹையோ!.... எப்பூபூபூடிடிடிடிடிடி...... ஆயினும் இக்கடிதத்தின் அடிப்டையான கருத்துடன் இன்றும் மாறுபாடு கிடையாது)


மானமில்லாமை ஒரு விடுதலை உணர்வு

இனிய நண்பிக்கு,

எல்லா வளங்களும் உங்களுக்கு கிட்டட்டும். சமூகவிடுதலை நோக்கிய உங்கள் பணி தொடர என்வாழ்த்துக்கள். உங்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.

கடிதம் என்பது ஒரு அற்புதமான ஊடகம். அதில் பொது விடயங்களைப் பற்றி எழுதலாம். முகம் முறியாதபடி பல கருத்து முரண்பாடுகளை பறிமாறலாம். மனம் விட்டுப்பேசலாம். நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம். அதன்மூலமாக அன்றாட வாழ்வில் ஏற்படும் ஆதங்கங்களையும், சஞ்சலங்களையும் அதன் விவரங்களையும் பதிவு செய்யலாம். ஆயினும் எம் துரதிஷ்டம் விஞ்ஞான வளர்ச்சி அந்த அற்புதமான ஊடகத்தை எம்மிடமிருந்து அகற்றிவருகிறது.

சமூகவிடுதலையில் இன்றியமையாததொன்றாக பெண்விடுதலை அமைவதால் அதைபற்றி அக்கறை செலுத்துவது அவசியம்.

இதில் விடுதலை என்ற சொல் குறிப்பது என்ன. பல்வேறு விளக்கங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றின் ஊடுபொருள் எமக்கு வசதியற்ற அல்லது எம்மால் சகிக்க முடியாத ஒரு கட்டுக்கோப்பான அமைப்பை உடைத்து எமக்கு ஏற்றபடியான ஒரு கட்டுக்கோப்பான அமைப்புக்குச் செல்லுதல் ஆகும்.

இதில் நாம் விடுதலை என்ற சொல்லால் குறிக்கும் பொருளை முழுமையாக அடையமுடியாது. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் விடுதலை என்பது இயல்பாக இருத்தல். இப்பொருளை தெளிவாக உணர்த்தும் ஒரு சொல் எம்மிடையே ஒரு கௌரவமான செயலை குறிப்பதில்லை. ( இதில் கௌரவம் என்பதன் அரசியலை வேறொருமுறை) “கட்டாக்காலி” என்பதே அச்சொல்.

பொதுவாக தம்மியல்பில் திரியும் நாய்களையும் ஆடுமாடுகளையும் குறிக்க பயன்படும் இச்சொல், விடுதலை என்பதன் முழு அர்த்தத்தையும் ஓரளவுக்கு தரும் என்பது என்கருத்து.

கட்டாக்காலி அல்லது விடுதலை என்ற உணர்வின் அடிப்படை 'அடங்காமை 'அல்லது 'பணியமறுத்தல்' ஆகும். ஆகவே விடுதலை உணர்வு கொண்டவர்கள் 'பணிய மறுக்கும் பண்பாட்டைக்' கொண்டவராக இருத்தல் அவசியம். அடங்காமையை அடக்குதல், பணியமறுக்கும் பண்பாட்டை இல்லாமல் செய்தல் என்பதே அடக்குமுறை.

அடக்குமுறையினூடாகவே ஆதிக்கம் செலுத்தப்படும். ஆதிக்கம் செய்பவர்கள் ஆதிக்க வர்க்கம் எனப்படுவார்கள். ஆதிக்கவர்க்கத்தினர் சமூகத்தில் சிறுபான்மையினாரவும் நுண்மதிபடைத்தவராகவும் இருப்பர். தம்மீது அடக்குமுறை உள்ளது என பெரும்பான்மை அல்லது பெரும்பான்மைப் பலமுள்ள வர்க்கத்தினருக்கு தெரியும் இடத்து எதிர்ப்பு கிளம்பும். எனவே ஆதிக்க வர்க்கம் தம் ஆதிக்கத்தை நுண்தளங்களில் பலமாக ஊன்றி அதை ஒரு இயல்பானதாக மாற்றி தொடர்ந்து தம் ஆதிக்கத்தை /அதிகாரத்தை நிலைநிறுத்தும் வேலையைச் செய்வார்கள்.

அந்நிய ஏகாதிபத்தியம் என்றால் பொருளாதார பண்பாட்டுத்தளங்ளில் இது அதிமாகமாக செயற்படும். தம் சமூகத்தில் என்றால் இது பண்பாட்டுத்தளத்தில் நிலைநிறுத்தப்பட்டதாக இருக்கும். இங்கு சில பழக்கமுறைகளாக, உணர்வுகளாக அது இருக்கும். மானம் என்ற சொல்லால் குறிக்கப்படுவது அதுதான்.

விளக்கமாக ஒரு 'ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் அந்த ஒழங்கைப் பின்பற்றுதலே' மானமுள்ள செயலாக கருதப்படும். அந்த ஒழுங்கை மீறுதல் அவமானத்துக்குரிய செயலாக கருதப்படும். அதைச்செய்தவன் மானமிழந்தவானாக, அவமானப்பட்டவனாக ஆக்கப்படுவான். அவன் அதை விரும்பாமல் தான் மானுமுள்ளவன் என்பதை காட்டுவதற்காக அந்த பொது ஒழங்கை விருப்பமில்லாவிட்டாலும் பின்பற்றுவான் / பின்பற்றத் தொடங்குவான். இதே காரணத்தால் அவனை ஒத்த உணர்வுள்ளவர்களும் அப்பொது ஒழுங்கைப் பின்பற்றுவார்கள் / பின்பற்றத் தொடங்குவார்கள்.


இங்கு ஒழுக்கம் என்பதற்கு கீழே அனைவரும் அடக்கப்படுகின்றனர். இதில் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும் பொதுவாக இந்த பொது ஒழுங்குகளை ஆதிக்கவர்க்கத்தினரும் அவர்களோடு இணைந்த அறிவுலக அதிகார வர்க்கமும்தான் தீர்மானிக்கிறது. அவர்கள் தம் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு ஏற்றவகையில்தான் இந்த ஒழுக்கங்களை கட்டமைக்கிறார்கள். அது அவசியம் என்றும் மிக முக்கியமான தென்றும் அது மீற்ப்படக்கூடாததென்றும் நம்பவைக்கின்றனர். இதுதான் கௌரவம் என்று கட்டமைக்கின்றனர். இதன் மூலம் விடுதலையை,விடுதலை உணர்வை ல்லாமல் செய்கின்றனர்.

இந்த கட்டமைப்புகளை நிராகரிக்க, அதன் நுண்தள அதிகாரங்களைத்தாண்டி செயற்பட 'மானம்' இருக்கக்கூடாது. ''மானம் இல்லாதிருத்தல் ஒரு விடுதலை உணர்வு''. மானத்தை இல்லாமல் செய்வதானலேயே பூரண விடுதலையை, எல்லோருடைய பங்கு பற்றலை நாம் சாத்தியமாக்க முடியும்.

தான் பின்பற்றும் மானமுள்ள ஒழுக்கம் அநீதியானது எனக்கருதும் ஒருவன் அதை மறுத்து செயற்பட்டால் அவன் மானமிழந்தவானாக்கப்படுவான். இந்நிலையில் அவனுக்குக்கான ஆதரவுத்தளமாக, அவனது இயங்குதளமாக விடுதலையை நோக்கி செயற்படும் அமைப்புக்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் முழுவிடுதலை என்பது சாத்தியமாகும்.

இதை நீங்கள் ஏற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆயினும் ஒன்று ''ஒருவிடுதலை இயக்கமானது ஒரு பிரச்சனைக் குவியத்துக்குள் ஒடுங்கியதாக இல்லாமல் தன்னை பல வகையிலும் விரவுபடுத்திகொண்டால்தான் அதன் செயற்பாடுகள் நிலைத்து நிற்கும்.''

இதில் சில மேற்குறிகாட்டல்களை மட்டுமே செய்துள்ளேன். இது பற்றி தங்களுக்கு நேரம் இருந்தால் மேலும் கலந்துரையாடலாம். இக்கருத்துக்களுக்கான தங்களுடைய உடன்பாடின்மையை தயவுசெய்து அறியத்தாருங்கள்.

“தன்னிலை தாளாமையும் அந்நிலை தாண்டற்கால் உயிர் வாழாமையும் மானமெனப்படும்”
உங்கள் பார்வை எப்போதும் உயரத்தை நோக்கியே இருக்கட்டும்
என்றும் அன்புடன்,
எஸ்.சத்யதேவன்




--
எஸ். சத்யதேவன்

Thursday, July 9, 2009

அப்பா





கர்ப்பப்பை ஏதும் அங்கில்லை
பால் சுரக்கும் உறுப்புகள் தானுமில்லை
தாலாட்டுகள் ஏதும் தெரியவில்லை
ஆனாலும் தெரிந்தவரை
அன்பென்றால் அப்பாதான்

தவழும் வயதில் இடறி விழுந்தால் தூக்கி விட்டதில்லை
ஓடி விளையாடும் போது, கூட இருந்ததில்லை
தக்க தருணத்தில் என்னை தரணியில் உயர்த்திவிட்டார்
அன்பென்றால் அப்பாதான்

படிப்பு, விளையாட்டு
துக்கம் சந்தோஷம்
அன்பு அதிகாரம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன்
அப்பா என்ற உறவின் மூலம் ஆண்களை நேசிக்க கற்றுக் கொண்டேன்

அப்பா எனும் ஒற்றை சொல்லில்
என் விடியல்கள் புலர்ந்து நிற்கிறது
அப்பா எனும் இந்த சொல்லில்
என் வாழ்க்கை வசந்தத்துக்குள்ளேயே உழல்கிறது - இருப்பினும்

தவமொன்று செய்திடுவேன்
காலமெல்லாம் கூடிவாழ
மாண்டு போயின் மீண்டும்
மாறிப் பிறந்திருக்க!