Showing posts with label பிரம்மியா கிருபநாயகம். Show all posts
Showing posts with label பிரம்மியா கிருபநாயகம். Show all posts

Saturday, August 9, 2008

என் உணர்வுகள் தொடாத் தூரத்தில்






என் உணர்வுகள் தொடாத் தூரத்தில்
ஒளிந்துகொள்கிறாய் நீ…
இமைகளை மூடிக்கொண்டு
நிஜங்களுக்கு இருட்டடிப்பு செய்கிறாய்…
பகலில் புன்னகையையும்
இரவில் கண்ணீரையும்
என்னுள் விதைக்கிறாய்…
முகாரியை மட்டுமே நேசிக்கின்றன
உன் வீணை நரம்புகள்…
உன்னால் எப்படித்தான் முடிகிறதோ
சுகமாய் வருடும் தென்றலைக்கூட சபிக்க….
உன் கோபங்களின் பெறுபேறு
வெறுமை மட்டுமே…
எனக்காக கொஞ்சம் திறந்து வை
உன் இதயத்தை…
அந்த வெறுமையை வென்றிடும் வீரியம்
என் அன்பிற்கு உண்டு…


--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு

Friday, June 13, 2008

இயலாமை



தன் கூட்டினை
தொலைத்து நிற்கிறது அந்தப் பறவை...
புதிதாய் உதித்திருந்தன
பல பச்சைக் கூடாரங்கள்...
இரத்தமும் சீழுமாய்
சிதறிக்கிடக்கும்
அதன் இனச்சிதிலங்கள்...
கூடும்
தன்னுடன் கூடிய கூட்டமும்
சிதைந்த கவலை அதற்கு..
முடிந்தவரை கொத்திப்பார்த்தது
கூரைகளை...
உடைந்ததென்னவோ
அதனலகு மாத்திரம் தான்..
இருப்பு அற்றுப்போன பின்
இறகுகள் இனியெதற்கு...
ஒவ்வொன்றாய்
பிய்த்துப்போட ஆரம்பித்தது மெதுவாக...

--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு

Wednesday, June 11, 2008

அந்தக் கடிகாரம்..




சொட்டாய் விழுந்த மழைத்துளி
சகதியுடன் சங்கமித்துக்கொண்டது..
கிழிந்திருந்த ஒரு பொத்தல் துணி
அவனை உடுத்திக்கொண்டது...
மழை
அவனில் ஒதுங்கியது...
அவசரப்பாதணியொன்று
அவனை மிதித்துவிட்டுப் போனது...
அவனில் எந்த அசைவுமில்லை...
..
...
....
.....
இதுவரை மௌனம் காத்த
அந்தக் கடிகாரம்
இரண்டு நிமிடம் நிதானித்து
பின் அலறியது.......

--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு

Saturday, June 7, 2008

என் சாளரத்தைப் பிரித்துக்கொண்டு இங்குமங்கும் தாவுகிறது அந்தப் பூனை...





















என் சாளரத்தைப் பிரித்துக்கொண்டு
இங்குமங்கும் தாவுகிறது
அந்தப் பூனை...
நோக்கமற்ற முயற்சிகளின் முடிவு
மீண்டும் தரையோடு...
விரல்களைக் கீறும்போது
ச்ச்சூ... சொல்லவில்லை நான்...
மீண்டும் மீண்டும் கீறிவிட்டு
என் முகம் பார்கிறது...
பின்
என் சுவாசக்கோளத்தைத் தட்டிக்கொண்டு
சுவருடன் முட்டி நிற்கிறது...
சில நிகழ்தல்களிற்கு
காரணங்களுமில்லை...
கற்பிதங்களுமில்லை...
விதைக்கப்பட்டவை அறுக்கப்படுகின்றன
சில வேளைகளில்
பதர்களுடன் கதிர்களும்...

--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு