“கள்” சஞ்சிகைக் குழுமத்தின் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக பிரதேச எழுத்தாளர்களை அவர்களது சொந்த கிராமத்தில் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தல், நூல் வெளியீடுகளையும் அறிமுகத்தையும் குறிப்பிட்ட அரங்குகளிலிருந்து விடுவித்து கிராமங்களில் நடாத்துதல் ஆகியவை உள்ளது.
அதனுடைய முதல்நிகழ்வாக உவர்மலை வீ.எஸ்.குமாரினுடைய ‘அப்பா’ சிறுகதைத் தொகுதியினுடைய வெளியீடும்; அறிமுகமும் நிகழ்வு உவர்மலை இராஜவரோதயம் சனசமூக நிலையத்தில் கடந்த 04-01-2009 அன்று மாலை 3.45 மணியளவில் நடைபெற்றது.
இதில் விருந்தினர்களாக எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளர்களுமான கலாபூசணம். ச.அருளானந்தம், கலாபூசணம்.தம்பி தில்லை முகிலன், உவர்மலை கிராமசேவகர் திரு.ஆ.மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உவர்மலை கிராமத்தின் மத்தியிலும் குறித்த மண்டபத்திலும் நடந்த முதலாவது நூல்வெளியீட்டு நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியரின் சொந்த கிராமம் என்பதால் வழக்கமாக நூல்வெளியீடுகளுக்கு வரும் எண்ணிக்கையிலும் அதிகமானவர்கள் வருகை தந்திருந்தனர்.
அரங்கு நிறைந்து அரங்குக்கு வெளியிலும் சிலர் நின்றபடி நிகழ்வில் கலந்துகொண்ட முதல் நூல் வெளியீடு திருகோணமலையில் இதுதான். கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆசிரியரின் நண்பர்கள், உறிவினர்கள், எழுத்தாளர்கள், ஆகியோருடன் இளம்பருவத்தினரும் கணிசமான அளவு வந்திருந்தனர். குறிப்பிடத்தக்கவர்கள் கலந்துகொண்ட முதல் நூல்வெளியீடு என்பது இங்கே சுட்டவேண்டியது.
நிகழ்வின் தலைமை தொடக்கம் அறிமுகவுரை, கருத்துரை வழங்கிய அனைவரும் இளம்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடவேண்டியது.
முதல் நிகழ்வாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.
விருந்தினர்களுடன் சமூகசெயற்பாட்டாளர்களாக இருந்து தற்போது சிறிது ஒதுங்கிய எமக்கு நேர்மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் மங்கள விளக்கினை ஏற்றினார்கள்.
அடுத்து யுத்தத்தால் மரணமடைந்த மக்களையும் நினைவுகூர்நதும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் அனைவருக்காகவும் இரண்டுநிமிட மௌனபிரார்த்தனை இடம்பெற்றது.
தொடர்ந்து வரவேற்புரையை "கள்" குழும உறுப்பினர் ஸ்ரீ.தயாளன் நிகழ்த்தினார்.
நிகழ்வை தலைமைதாங்கி தலைமையுரையை "கள்" குழும உறுப்பினர் கு.சுரேஸ் நிகழ்த்தினார். தாம் எதிர்பார்த்ததைவிட அதிமானவர்கள் கலந்து கொண்டதால் மிகுந்த மகிழ்சி அடைவதாக திரும்ப திரும்ப கூறிய அவர் 5-6 வருட ஒதுங்கலுக்குப்பின்னர் தாம் இணைந்து செயற்படும் நிகழ்ச்சி இது என குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் எழுத்தாளர்கள் அறிவுஜீவிகள் என்பவர்கள் இளம்தலைமுறையினரை அலட்சியப்படுத்தியதையும் தத்தமக்குள் சுயபுராணச் சண்டைகள் போட்டதையும் சுட்டிக்காட்டினார்.
உவர்மலைகளில் வசித்து உவர்மலையிலே கல்வி கற்று தற்போது லண்டனில் இருக்கும் வி.எஸ்.குமாரின் கதைகள் தனது வாழ்கையையும் நினைவு படுத்துவதாக குறிப்பிட்ட அவர் வி.எஸ்.குமார் முழுக்க முழக்க வாழக்கையில் ஆசிரியர்பெற்ற அனுபவம் என்பதை தன்னால் உணரமுடிகிறது என்றார்.
நிகழ்வில் அதிகமானோர் கலந்து கொண்டது "கள்" குழுமத்திற்கு உற்சாகத்தையும் தொடர்ந்து செயற்பட உத்வேகத்தையும் தருவதாகவும் குறிப்பிட்டார்.
நூலின் அறிமுகவுரையை பெரிய ஐங்கரன் நிகழ்தினார். தாம் சார்ந்துள்ள கோட்பாடு இல்லாத படைப்புகளை படைப்புகள் அல்ல என கருதியும் பேசியும் திரிந்தவர்களை தமது உரையில் ஐங்கரன் காரமாக விமர்சித்தார். தொகுதியில் உள்ள கதைகளைப்பற்றி உரையாற்றிய ஐங்கரன் சிலகதைகளைப் படித்தபோது தான் நேரில் அனுபவித்தவற்றை நினைவு படுத்தியதையும் அதனால்தாம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதையும் குறிப்பிட்டார்.
நூலை கலாபூசணம்.ச.அருளானந்தம் வெளியிட உவர்மலையின் பிரமுகர் திரு.எஸ்.சத்தியசீலராஜா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப்பிரதிகளை நேர்மூத்ததலைமுறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து கருத்துரைவழங்கிய எஸ்.சத்யதேவன் ‘ஆசிரியர் எழுதிய ஊடகம் மற்றும் அதன் வாசகர் குழு ஆகியவற்றை கருத்தில் கொள்வதாக குறிப்பிட்டதுடன் ஒவ்வொருபடைப்பாளியும் தான் வாசகருக்கு சொல்லவிரும்பிய முக்கிய செய்தியை தனது படைப்பில் வெளிப்படுத்திருப்பான் என்ற அடிப்படையில் வி.எஸ்.குமாரின் கதைகள் முற்போற்கான பெண்களை கொண்ட சமுதாயத்தை கோருவதையே செய்தியாக கொண்டுள்ளன’ என்று குறிப்பிட்டார்.
இரண்டாவதாக கருத்துரையை நிகழ்திய வி.புருஷோத்மன் வி.எஸ்குமாரின் கதைகள் சில இடங்களில் தமிழ்சினிமாத்தனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
விருந்தினரும் கலைஞருமான தம்பி தில்லை முகிலன் மற்றும் எழுத்தாளர் ச.அருளானந்தம் , கிராமசேவகர் ஆ.மகேஸ்வரன் ஆகியோர் கள் குழுமத்தின் செய்ற்பாடுகளை வரவேற்பதோடு இவ்வாறன செய்றபாடுகளுக்கு தாமும் ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டனர்.
கலந்து கொண்டவர்களிலிருந்து கருத்துத் தெரிவிக்க விருப்பம் தெரிவித்து உரையாற்றிய ஓவியரும் நாடகக் கலைஞருமான திரு.ஜீவானந்தன் இந்த நிகழ்வு தம்மை மிகுந்த உற்சாகப்படுத்துவதாகவும் இது ஆரம்பம் மட்டுமே திருகோணமலையில் நீண்டகாலமாக நிலவும் கலை, இலக்கிய செயற்பாட்டு வறுமையினை "கள்" போன்ற குழுமங்களின் தொடர் செயற்பாடுகள் நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நூலாசிரியனின் சகோதரி வே.மைதிலியின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது
Wednesday, January 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment