Thursday, July 3, 2008

தசாவதாரம் - இன்டலெச்ஷுவல் மசிர்கள் - கொம்பிலும் கொஞ்சம் கறத்தல்


நீண்டநாளைக்குப்பிறகு சொந்தக்காசில தியேட்டருக்கு போய் படம் பார்த்தன். ‘தல’ (இப்ப தல வேற ஆளாயிரக்கலாம் எங்கட தல கமல்தான்) படம் என்றதாலதான் போனனான் தலைவரு படம்தான் தமிழில் கொஞ்சமாவது உருப்படியான படமாயிருக்கும் என்ற எண்ணம் இந்த பேப்பர்களில படிச்சு அந்த நாளிலேயே மனசில பதிஞ்சு போச்சு.

அப்பெல்லாம் தலையிட மந்தைகளில் நானும் ஒருத்தன் ‘நாயகன்’, ‘சத்யா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘ஹேராம்’, என்று தலபடங்கள் தமிழ் சினமாவின் உச்சம் எனக்கு.

பள்ளிக்கூடம் முடிஞ்சபின்னாடி ‘அன்பே சிவம்’ ‘வசூல்ராஜா MBBS’ இரண்டும் சமூகத்திற்கு மிகச்சிறந்த நல்லதுகள் சொன்னபடம் என்றபடி உளறித்திரிஞ்சன்.

பின்னாடி இந்த 'இன்டலெச்சுவல்களோட' சேர்ந்ததுக்குப்பிறகும் அதுகள்ட புத்தகங்களைப்படிச்ச பின்னாடியும் தமிழ்ப்படங்களைப் பார்ப்பதில்ல. மசாலாப்படம் எடுக்கிறவன்கள் எல்லாம் கள்ளன்கள் அதிலையும் தல தலட மருமவன் எல்லாம் பார்ப்பனிய பணியா கும்பல்ற கைக்கூலிகள் என்ட உண்மைகள் தெரிஞ்சபிறகு தமிழ்சினிமாப்பக்கம் தலைவைக்கிறதில்லை.

'இண்டலெக்சுவல் மகசின்கள்' சொல்ற 'சீரியஸ்' படங்கள் கிடைத்தால் பார்க்கிறனான். மாதம் மாதம் இப்படியான படங்களை போடறது. அதில ஒரு முப்பது படம் வரைக்கும் பார்த்திருப்பன். பொய்க்கில்ல சினிமா எண்டா என்ன என்பதை மனசால உணர அந்த படங்களைத்தான் பாக்கோணும்.


ஆனா உந்த ரெஸ்லிங்கையும் கொஞ்ச இங்கிலிஷ்படங்களையும் தவிர வேற இங்கிலிஷ் படங்களே கிடைக்காத சூழல்ல ஒரு பத்துப்பேரு கூடி சிரியஸ் சினிமா பற்றி கதைச்சு கதைச்சு அலுத்துப்போயிற்று. கதைக்கிறவர்களின் நோக்கம் மக்களின் ரசனையை மாத்திறது.

ஆனா புரியாத மொழியில தெரியாத நாட்டுக்கதையையும் பாத்திரங்களையும் எவன்வந்து பார்க்கப்போறான் குறைஞ்சபட்சம் தியட்டர்காட்டினாலாவது பார்க்கலாம். அதைவிட்டுட்டு புரெஜக்டரில காட்டிறீங்க என்ட கொமன்ட்ஸ்தான் வரும்.

இங்க சாப்பாட்டுக்கே டண்டணக்கா இதில நீங்க ஈரான் டண்டணக்காவையும் ருவாண்டா டண்டணக்காவையும் காட்டுறீங்க அட போடா என்டு வந்த பத்துப்பேர்ல பாதிப்பேர் ஓடிட்டான். இதில எங்கட இன்டலெக்சுவல் மசிர்கள் தண்ணியடிச்சிட்டு ஏதோ எழுதுதுகள் தன்ர ரசனைதான் உயர்ந்தது எண்டு சனங்களில தங்கட இன்டெலெச்சுவலை திணிக்குதுகள் ஏதோ இரெண்டுபேர் கொமன்ட்ஸ் சொன்னா குதிக்குதுகள்.

அப்பதான் நண்பர் மயூரன் ‘தமிழ் சினிமாவின் ஜனநாயகப் பண்புதான் அதிட வெற்றிக்குக் காரணம்’ என்று சிவத்தம்பி சேரிட வார்த்தைகளச் சொன்னது ஞாபகம் வந்தது. 100% உண்மைபாருங்கோ சீரியஸ் சினமாவில இந்த ஜனநாயகப்பண்பு இல்ல. அதனால அதை மக்கள் விரும்பல்ல. சீரியஸ் சினிமா கிடைக்கிறதோ 30 இல்லாட்டி 40 தான் அதுவும் ஒரு இடத்தில இல்லாட்டி இரெண்டு இடத்தில இருக்கும் அதை எடுக்கிறதென்டா கொஞ்சமாவது 'இண்டலெக்சுவல்களோட' பழக்கமிருக்கோணும். தனிய இல்லாம பத்துபேர் சேர்ந்து பாக்க ஏற்பாடுசெய்யோணும். அதுக்கு இன்விட்டேசன் அடிச்சு ஊர்முழுக்க குடுத்து கேனயன் என்ற பேர்வாங்கோணும்.

அப்படிக்கஸ்டப்பட்டு எடுத்து படத்தைப்பார்த்தாலும் சொல்ற கதையை விளங்க அந்த கதைபற்றிய குறிப்புகளை முன்னமே வாசிச்சிருக்கோணும். இப்படி கனக்க லோலாய்ப்பட்டு சீரியஸ் சினிமா எவன் பார்ப்பான். அப்படிப்பார்த்தாலும் அசின நயன்தாராவப் பார்க்கிற சந்தோசம் கிடைக்குமே? வெள்ளைக்காரியள் வெள்ளை என்டாலும் எங்கட ஆக்கள்தான் வடிவுபாருங்கோ அவையைப் பார்க்கிறதிலதான் எங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு.

நம்மட இசை தெரிஞ்ச கதை புரியிர மொழி விரும்பினா தியேட்டரிலயும் பார்க்கலாம் இல்லாட்டி CDயிலையும் பார்க்கலாம் எந்தக்கிராமத்திலையும் கிடைக்கும் எவனையும் தெரிஞ்சிருக்கத் தேவையில்ல கொஞ்சக் காசு இருந்தாப் போதும் இப்படி தமிழ் சினிமா சீரியஸ் சினிமாட எந்த லோலாய்களையும் தாறதில்லை. சனத்தைகூட நாம கஸ்ரப்பட்டு இன்விட்டேசன் அடிச்சு காசுகுடுத்தெல்லாம் கூப்பிடத்தேவையில்லை சனமே காசுகொடுத்துவந்து பாக்கும். கூட்டம் அலைமோதும்.

அப்பதான் யோசிச்சன் நாம சீரியஸ் படம்மூலம் கஸ்ரப்பட்டு முழுக்க நல்ல கருத்த சொன்னாலும மிஞ்சிமிஞ்சிப்போனா ஒரு பத்துபேருக்கு போகுதில்ல மிச்ச சனத்துக்கு அதைப்பற்றியே தெரியாது. அதைவிட சனங்கள் எல்லோரும் பார்க்கிற தமிழ் சினிமாவில நல்லதுகள் கொஞ்சம் சொன்னாலும் ஊர்முழுக்கப்போவுதே அதை ஏன் புறக்கணிக்கவேணும் எண்டு. அதிலையும் தமிழ் சினிமாவில நல்லதுகள் காட்டறது பேசிறது கொம்பில பால்கறக்கிற கதைதான் அதில நம்மட தல கெட்டிக்காரர் பாருங்கோ அதான் காசில்லாட்டியும் கஸ்ரப்பட்டுப் பொறுக்கி தியேட்டருக்குப் போனான். அதிலையும் தசாவதாரத்தைப்பற்றி பேசாத பேப்பர், வலைப்பதிவு இல்ல. பார்த்த பொடியன்களும் பிளந்து கட்டினாங்கள் பழைய தலயெல்லோ என்ன சொல்லியிருக்கார் என்டு பார்க்கப்போனனான்.


சும்மா சொல்லக்கூடாது கூட்டம் பிய்க்குது இருக்க சீட் தேடப்பட்டபாடு. விசில், தூசணம், கூச்சல் கூப்பாடென்று ஒரே அமர்க்களம் ஆயிரம் சொல்லுங்க காதுகிழிஞ்சசு வேர்த்துக்கொட்டினாலும் இந்த சுகம் வேறஎங்கேயும் கிடைக்காது. இதெல்லாம தமிழன்ற தனிக்குணம் படத்தில கதைக்கிறது பெரிசாக்கேக்கேல்ல கஸ்ரப்பட்டு விளங்கினதை கொண்டு மிச்சத்த எழுதுறன்.



இந்துக்குள்ள சைவம் வைணவம்


படத்தில முதற்காட்சி. 12ம் நூற்றாண்டு சைவ வைணவ மோதல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். வைதீக மதம் சனாதன மதம் போன்ற கதைகள கிளப்பி இப்ப தூள் கிளப்பும் இந்துத்துவக் காரர்களுக்கு கழுவில ஏற்றியும் தூக்குக்காவடியில கொழுவி சாட்டையால அடிச்சும்தான் வைதீக மதம் திணிக்கப்பட்டது என்ற உண்மையைச் சொல்லுது முதற்காட்சி.

இதை இன்னும் விரிவாக்கினா இந்துமதம் என்ற மதமே இல்லே அது வெள்ளக்காரனுக்கு பின்னால வந்த கற்பிதம் என்டது தெரியும் பாருங்க. எனக்குத் தெரிஞ்சு பத்துக்கும் மேற்பட்ட பெரும்மதங்கள் தம்மை நிலைநிறுத்த அந்தகாலத்தில போட்டிபோட்டவை.

சைவத்தோட சமணம் பௌத்தம் போட்ட போட்டி ரொம்பப்பிரபலம் திருஞானசம்பந்தர் 60000 சமணரை கழுவில ஏற்றினத (அது என்னண்டா பின்னால கம்பிய அடிச்சு உச்சந்தலையால வெளியவரப்பண்ணி ஆக்களைக் கொல்லுறது. சில கிராமக்கோயிலில கோழிகுத்துவினம் அப்படித்தான் ) பெருமையா 5ம் 6ம் வகுப்பு சமயப்புத்தகத்தில போட்டிருக்கிறான். இதைப்படிக்கிறவன் மற்றமதக்காரனை கொல்லாம என்ன செய்வான். மற்றமதம் தேவேல்ல சைவத்துக்குள்ளேயே சுத்தசைவம் வீரசைவம் கபாலீகம் என்று போட்டிபோட்டான்கள். எல்லாம் அகிம்சையில்ல எல்லாம் கொலையும் கொலைமுயற்சியும்தான். சைவம் எண்டில்ல வைணவத்துக்குள்ளேயும் போட்டி இருக்கு இப்பவும் திருவரங்கத்தில (ஸ்ரீரங்கம்தான்) வடகலை தென்கலை பாகுபாடு இருக்கு.


இதெல்லாத்தையும் மறைச்சுத்தான் இப்ப இந்து என்ற புனிதமதத்தை சொல்றாங்கள் படத்தில பழசு ஞாபகப்படுத்தப்பட்டது பாருங்க அது இந்துத்துவாக்கு ஒரு சறுகக்கல்தான். சரி அப்ப இந்து என்ற அடையாளம் எப்ப வந்தது. அதையும் பாத்திட்டு அங்கால போவம் என்ன. வரலாற்றறிஞர் பொ.ரகுபதி சொல்லுறார் ‘ஒருமைத்தன்மையான சமய சிந்தனைக்குப் (Monotheism ) பழக்கப்பட்ட மேற்கத்தையார், அதே கண்களோடு தென்னாசிய சமய ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்து, அதற்கு ஒற்றைத் தன்மையான ஒரு பொதுச் சொல் கொடுக்க முனைந்தபோது வசதியாக அகப்பட்டது, ஆதிசங்கருடைய வைதிகம் அவைதிகம் என்ற பிரிப்பு.

வேதத்தை முன்னிறுத்தி, அதற்கூடாகப் பிராமணியத்தை முன்னிறுத்திய சமய சிந்தனையே இந்து சமயத்தின் மூலம் என்ற கருத்தை, மேற்கத்தேய கீழைத்தேய வாதிகள் சொல்லப்போக, அவர்கள் கண்களுக்கூடாக எம்மை நாம் பார்ப்பதுதான் நாகரிகம் என்று நினைத்த எமது தேசியவாதிகளும் சேர்ந்து செய்த கற்பிதம் தான் இந்து சமயம் என்ற இன்றைய கருத்து.

வேதத்தையும் வேதியரையும் எமது பக்தி இலக்கியங்கள் முன்னிறுத்தவில்லையா என்று கேட்போருக்கான பதில் அந்தப் பக்திஇலக்கியங்களிலேயே இருக்கிறது. சந்தேகம் இருப்போர் மாணிக்கவாசகருடைய போற்றித் திருவகவலை ஒரு தடைவ படிக்கவும் இப்ப விளங்கும் இந்து என்ற கருத்து. சுமார் 200 ஆண்டுகால இந்த இந்துசமய கருத்தோட்டம் சைவ வைணவ சண்டையை இல்லாமல் செய்திருக்கலாம். இப்போது அது ஒரு பாசிசமாக உருவெடுக்கையில் பழைய வராலற்றை பேசுவதனூடகத்தான் ஒடுக்கப்பட்ட தலித்துக்கள், ஆதிவாசிகள், மற்றும் சூத்திரர் பார்ப்பனிய இந்துத்தவத்துக்குள் சிக்காமல் காப்பாற்ற வழி இதை பார்ப்பனியம் ஆதிக்கம் செய்யிற நாட்டில ஒரு பார்ப்பான் அதை வெகுசன சினிமாவில காட்டறது எப்படிச் சொல்லுறது.

திருவரங்கநாதர் உலா

அது மட்டுமில்ல வைணவ கோயில்ல விதவைகள் கோயிலுக்குள்ளே போறது இப்பவும் குறைவு அதிலயும் அவர்கள் சாமிய தொடுவது நடக்காத காரியம் ஆனா படத்தில விதவை மூதாட்டி உலாவரும் உற்சவ மூர்த்திய தொட்டு அதுக்குள்ள கிருமி குண்டைப் போடுறா.

இந்துக்கடவுள்மார் தலித்துக்கள்ற ஏரியாப்பக்கமே போமாட்டினம் ஆனா படத்தில திருவரங்கர் தலித்துகள்ர சுடலைக்கு போறது மட்டுமல்லாம சுடலைக்குள்ளேயும் தாட்டுவைக்கப்படுகிறார்.

பிறகு முஸ்லிம்களோட வானில போகிறார் சீக்கியர் மருந்துபெட்டிக்குள்ள போகிறார் கடசியா வேதக்கார சேர்ச்சில நிற்கிறார். கடவுளை பயபக்தியோடு தூக்கிறதுதான் இந்துசமய வழக்கம் ஆனா படத்தில பொம்மையமாதிரி எறிஞ்சு விளையாடப்படுகிறார். கடசியா முதலமைச்சர் பிரதமர் எண்டு ஆட்சிபீடத்தின்ர உச்ச ஆக்கள் பேசுற மேடையில நடுநாயகமாக நிற்கிறார் ஆட்சிசெய்யிறது ஆரா இருந்தாலும் அவை இந்துப் பார்ப்பனிய சொல்படிதான் நடப்பினம் என்றத எப்படி காட்டியிருக்கினம் பாருங்க. இப்படி புனிதமானதை கிண்டலடிக்கிறது தமிழ் சீரியஸ் படங்களில கூட கிடையாது மசாலாப்படத்தில இதெல்லாம் சாத்தியமாகியிருக்கு என்னண்டு சொல்லுறது.

அமெரிக்காவும் புஷ்ஷும்

படத்தில அமெரிக்கக்காரன் தன்ர ஆதிக்க வெறிக்காக உயிர்கொல்லி கிருமிகளை உற்பத்தி செய்யிறதும் அதை அழியாமல் காப்பாத்த CIA செய்யிற பிரயத்தனங்களும் அதிகளவாச் சொல்லப்பட்டிருக்கு. அதிலையும் CIA ஏஜென்ட கமல்ர விசயம் இந்தியாவில காரில வார புஷ்ஷுக்கு சொல்லுறது மூலம் அமெரிக்கா எந்த நாட்டில போய் என்னத்தை கக்கினாலும் தன்ர கொள்கையை மாத்தாது என்டதும் விளங்கியிருக்கும். எல்லாத்துக்கும மேல அமெரிக்காவுக்கு போற பாப்பான்கள் தான் இப்படியாக கொடிய ஆயுதங்களுக்கு கைக்கூலி வேலைசெய்யிறதையும் காட்டியிருக்கினம். CIA செய்யிற கொலைகளில சிலதை காட்டியிருக்கினம் பாருங்க இப்படி படத்தில அமெரிக்க எகாதிபத்தியத்தின் உண்மைமுகம் மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கு


தலித்துக்கள்

‘உங்கள்ள எவண்டா படிச்சவன் இருக்கான்’ என்டு மணல்க்கொள்ளைக்காரன் கேக்க ‘இப்ப எங்களில படிக்காதவன் இல்ல’ எண்டு தலித் இளைஞர்கள் சொல்லிற மாதிரிகாட்சி தலித்மக்களை இனியும் எமாத்த ஏலாது என்றதை காட்டுது. ஆறுகளில் மணல்கொள்ளை போன்றவற்றை தலித்துக்கள்தான் தடுத்து சூழலியல் கேடுகள் வராம எதிர்க்கினம் இதில சாதி மசிர் ஒன்டும் இல்ல எண்டதும் காட்டப்படுகிறது. கடசியா மணல் முதலாளி தலித்தலைவர்ர காலை தொட்டுக்கும்பிடுற காட்சி என்ன சொல்லுது.

கிளைமாக்ஸ்ல ஒரு வசனத்தை சொல்வாரு கமல் ‘கடவுள் இல்லையெண்டு நான் சொல்லேல்லே. இருந்தா நல்லது எண்டுதானே சொல்லுறன்’ இதைத்தான நானும் சொல்ல விரும்பினான் இப்படி படத்தில கொம்பில கறக்க தல நிறைய முயற்சிசெஞ்சிருக்கிறார் ஆனால் பாவம் அவர்ர கைதான் நொந்துபோயிருக்கும். நம்மட சனத்துக்கு உது விளங்கியிருக்குமா?



--
எஸ். சத்தியதேவன்,

திருக்கோணமலை

4 comments:

Anonymous said...

எழுதின விதத்தையும் நகைச்சுவையையும் ரொம்ப ரசித்தேன். திருக்கோணமலையிலும் 'உது' எண்ட பாவனை உண்டா ?!
--------------------------
***அது மட்டுமில்ல வைணவ கோயில்ல விதவைகள் கோயிலுக்குள்ளே போறது இப்பவும் குறைவு அதிலயும் அவர்கள் சாமிய தொடுவது நடக்காத காரியம் ஆனா படத்தில விதவை மூதாட்டி உலாவரும் உற்சவ மூர்த்திய தொட்டு அதுக்குள்ள கிருமி குண்டைப் போடுறா.

***இந்துக்கடவுள்மார் தலித்துக்கள்ற ஏரியாப்பக்கமே போமாட்டினம் ஆனா படத்தில திருவரங்கர் தலித்துகள்ர சுடலைக்கு போறது மட்டுமல்லாம சுடலைக்குள்ளேயும் தாட்டுவைக்கப்படுகிறார்.

***பிறகு முஸ்லிம்களோட வானில போகிறார் சீக்கியர் மருந்துபெட்டிக்குள்ள போகிறார் கடசியா வேதக்கார சேர்ச்சில நிற்கிறார். கடவுளை பயபக்தியோடு தூக்கிறதுதான் இந்துசமய வழக்கம் ஆனா படத்தில பொம்மையமாதிரி எறிஞ்சு விளையாடப்படுகிறார். கடசியா முதலமைச்சர் பிரதமர் எண்டு ஆட்சிபீடத்தின்ர உச்ச ஆக்கள் பேசுற மேடையில நடுநாயகமாக நிற்கிறார் ஆட்சிசெய்யிறது ஆரா இருந்தாலும் அவை இந்துப் பார்ப்பனிய சொல்படிதான் நடப்பினம் என்றத எப்படி காட்டியிருக்கினம் பாருங்க. இப்படி புனிதமானதை கிண்டலடிக்கிறது தமிழ் சீரியஸ் படங்களில கூட கிடையாது மசாலாப்படத்தில இதெல்லாம் சாத்தியமாகியிருக்கு என்னண்டு சொல்லுறது.

***படத்தில அமெரிக்கக்காரன் தன்ர ஆதிக்க வெறிக்காக உயிர்கொல்லி கிருமிகளை உற்பத்தி செய்யிறதும் அதை அழியாமல் காப்பாத்த CIA செய்யிற பிரயத்தனங்களும் அதிகளவாச் சொல்லப்பட்டிருக்கு. அதிலையும் CIA ஏஜென்ட கமல்ர விசயம் இந்தியாவில காரில வார புஷ்ஷுக்கு சொல்லுறது மூலம் அமெரிக்கா எந்த நாட்டில போய் என்னத்தை கக்கினாலும் தன்ர கொள்கையை மாத்தாது என்டதும் விளங்கியிருக்கும். எல்லாத்துக்கும மேல அமெரிக்காவுக்கு போற பாப்பான்கள் தான் இப்படியாக கொடிய ஆயுதங்களுக்கு கைக்கூலி வேலைசெய்யிறதையும் காட்டியிருக்கினம். CIA செய்யிற கொலைகளில சிலதை காட்டியிருக்கினம் பாருங்க இப்படி படத்தில அமெரிக்க எகாதிபத்தியத்தின் உண்மைமுகம் மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கு
*************************
இதெல்லாம் கூட இன்ரலெக்சுவல் interpretation (வாசிப்பு?)தானே நண்பரே ?

இதன் பின்னணிகள் (அமெரிக்கா, சீ.ஐ.ஏ இத்தியாதி) தெரியாத 'சனத்துக்கு' இது ஒரு பொழுதுபோக்கு 'ஆங்கிலம் படம் போன்ற' எஃபெக்றைத் தருகிற ஒரு படம் தானே ? !
*******************
//கிளைமாக்ஸ்ல ஒரு வசனத்தை சொல்வாரு கமல் ‘கடவுள் இல்லையெண்டு நான் சொல்லேல்லே. இருந்தா நல்லது எண்டுதானே சொல்லுறன்’ இதைத்தான நானும் சொல்ல விரும்பினான் இப்படி படத்தில கொம்பில கறக்க தல நிறைய முயற்சிசெஞ்சிருக்கிறார் ஆனால் பாவம் அவர்ர கைதான் நொந்துபோயிருக்கும். நம்மட சனத்துக்கு உது விளங்கியிருக்குமா?//
கமல் 10 வேடங்களில (வலுக்கட்டாயமா) நடிக்கிறத மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தில, அவர் 'தன்னோட' கருத்துகள 'காட்ட' வேண்டிய தேவை அவரது ஈகோக்கு இருக்கலாம். அத திருப்திப்படுத்த அவர் வசனம் எழுதீற்றுப் போறார் (கடவுள் இருந்தா நல்லம் இத்தியாதி எண்டு). வெகுசன சினிமாவில நீங்க சொல்ற மாதிரியும் 'சில நல்ல விசயங்கள' தன்ர படத்தப் பாதிக்காத மாதிரி சொல்லீற்று போறார். அது அவற்ற திருப்திக்கு.
இதில
சனத்துக்கு 'விளங்கிற' படம் எண்டா வேற மாதிரித்தான் எடுக்கோணும்.. அப்பிடி எடுக்கேக்க நம்மட சனத்துக்கு இல்ல எல்லாச் சனத்துக்கும் அது விளங்கும்.

இன்ரலெக்சுவல்ஸ் இட பெரும் பிரச்சினையே உந்த சின்ன சின்னச் சின்ன விசயங்கள் கூட - தங்களுக்கு விளங்கிற மாதிரி - சனத்துக்கு விளங்கிற இல்லை எண்டிறதுதான்.. அவங்களோ சேந்ததால உங்களிட்டையும் அது வந்திற்றுதோ என்னவோ!

போன ஜென்மத்தில சங்கரரோட கடலுக்க கணவன் கமலப் போட்ட பிறகு, தலையை மோதிக் கொண்ட அதே இடத்தில பல ஜென்மங்களுக்குப் பிறகு அசின் 'தடக்கிறா' மற்றக் கமலோட வரேக்க.. (தலித் பூவராகவன்(?) வாற அந்த மண்ணள்ளிற இடம்) எண்டு ஒரு நண்பர் படம் பாத்திற்றுச் சொன்னார்.. ஆஹா! அதெல்லாம் எங்கள மாதிரி ஆக்களுக்கு விளங்கேல்ல (உங்களுக்கு விளங்கினதா?)அப்ப நாங்க உந்தப்
பிராமணர்கள் தான் விஞ்ஞானிகளா (அமெரிக்காவில) இருந்து மனுசற்ற கழுத்துறுக்கிறாங்கள் எண்டிற லெவலுக்கு எப்பிடி யோசிப்பம் ???

அதாவது அத்தைகைய புரிதலோட நாங்க இருக்கேக்க நாங்க அந்த 'அர்த்தத்த' (படத்தில) கண்டடையிறது இலகுவா இருக்கும்; அல்லாத போது கிடையாது. அப்படியான புரிதல்களோட இருக்கிற ஆக்களயும் 'சராசரி' ரசிகப் பெருமக்களையும் திருப்திப் படுத்தவே கமல் இப்பிடி முயலுறார்.
எனக்கது பொழுதுபோக்குப் படம் மட்டுமே.
தலித் யாரும் இந்தப் படத்தை வேற மாதிரி விமர்சிக்கக் கூடும். அப்படியான சிறுபான்மையோட அபிப்பிராயங்கள் தெரியறவரை 'சில நல்ல விசயங்கள்' வெகுசனத் திரையில வாறது தொடர்பா சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.

Anonymous said...

தசாவதாராம் : Outsourcing Hollywood : இராஜேஸ் பாலா அம்மாவுக்கு ஒரு பதில். : நட்சத்திரன் செவ்விந்தியன்.

Unknown said...

நன்றி பொடிச்சி திருகோணமலையில் உது என்ற பாவனையை சிலபேரிடம் கண்டிருக்கிறன். மற்றது உங்கட நடையை வாசித்தபோது அது எனக்கு மிகவம பிடித்திருந்தது அதன் பாதிப்pல் இது அமைந்ததோ தெரியாது.

//அவங்களோ சேந்ததால உங்களிட்டையும் அது வந்திற்றுதோ என்னவோ!//


சந்தேகமே வேண்டாம் அந்த அறுவார்களோட சேர்நதுதாலதான் இது வந்தது. ஆனா ஒரு திருத்தம் இங்கெ இருக்கிறவர்கள் இனி;டெலுக்சுவலா என்டது தெரியாது அப்படித்தான் சொல்லினம்
மற்றது எனக்குள்ளள் இருந்த மேட்டிமைத்தன்மையான பார்வைகளையும் கருத்துக்களை எழுத்தக்களை பொடிச்சி சட்டிக்காட்டினதற்கு மீண்டுமு; அவவுக்கு நன்றி திருத்திக்கொள்ள முயற்சிபண்ணுறன் உங்கட கருததோட மறுப்பில்ல

எஸ்.சத்யன்

Unknown said...

நட்சத்திரன் செவ்விந்தியன் பதிலை அறியத்தந்தவருக்கு நன்றிகள்
மற்றது நானொண்டம் கமலை பெரிய பருப்பு என்டு சொல்லல்ல கமலப்பற்றி நீங்க எழுதின கருத்தை எத்தனையோ முறை கனபேருக்கு சொனன்னான் எனக்கு அதுபற்றியும் எந்த மறுப்பும் இலல் ஆனா கனக்க சந்தேகம் இருக்கு பிறகு ஆறுதலா கேட்கிறன்

எஸ்.சத்யன்