Thursday, July 10, 2008

சூரியன் என்று சொல்லுங்கள்






"பூமிக்கு ஒரு நிலவு போதாதா? - ஏன்
இத்தனை நிலவுகள்!"


பெண்ணை வர்ணிக்கும்
கவிகளே!


நிலவு வளரும்; தேயும்;
வளர்பிறையை பார்க்க வேண்டும் என்பவர்கள்
தேய் பிறையைப் பார்க்க விரும்புவதில்லை


நிலவுப் பெண்களை எல்லாம்
விலங்கு மாட்டி சொந்தமாக்கி
தேயவைத்து விடுவீர்!
ஒருநாள்
அமாவாசை என்று
சாயமும் பூசி விடுவீர்!


வேண்டாம் இளங்கவிகளே!
நிலவென்ற வர்ணனையை நிறுத்தி விடுங்கள்.


நாம் நிலவல்ல!
சுட்டெரிக்கும் சூரியன்!


கதிர்கள் கொண்டு சாய்த்துக் கொள்வோம்
கண்ணசைவிலேயே சாதித்துக்கொள்வோம்
பகல்நேரச் சூரியன்போல் சுட்டெரிப்போம்
ஒரு நாள் சூரியன் உதிக்காவிட்டால்.....

சூரியன் என்று சொல்லுங்கள்
நிலவில் கூடக் கறைகள் உண்டு - ஆதலின்
சூரியன் என்று சொல்லுங்கள்!


மலரென்று சொல்லி
காயவைத்து உதிரவைத்து சருகாக்காதீர்
அழகென்றுகாட்டி
உயிருடனே புதைகுழியில் புதைக்காதீர்

இன்று பூத்து மாலை மடியும் பூவல்ல நாம்
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதை


விதைகள் ஒருபோதும்
ஒருநாளுடன் புதையாது!

இன்று அடிவேரால் சுவாசித்து
நாளை வெளியில் கிளைபரப்பும்
விருட்சம் நாம்.
நிலவல்ல நாம்..
அழகு மலரல்ல நாம்..

சுட்டெரிக்கும் சூரியனும்
விதைகளாகும் விருட்சங்களுமே

நாம்!

--
மீரா,
திருக்கோணமலை

1 comment:

Anonymous said...

உங்கள் கவிதை நன்றாக உள்ளது.
சூரியன் போல் உங்கள் எழுத்து அமைய வாழ்த்துக்கள்


வி.புருஷோத்மன்