என்னுயிரே நீ தான் என்று சொல்லுமளவுக்குக்
கூட வார்த்தைகள் இல்லாது போயின – நீ
உயிரோடு இல்லை
இதயக் கதவை தட்டி பார்த்தாய் - நான்
திறக்கவே இல்லை – நானாகவே
திறந்து வந்தேன் - இன்று
நீயுமில்லை
உன்னைப் பார்த்த முதல் நாளில்
என்னையே பறி கொடுத்தேன்
மனதிற்குள் உன் நினைவுகளை
சமுத்திரமாக்கி ஆரவாரமற்றிருந்தேன்
ஆனால் நீ தான் - என்னால்
உள்ளே எரிமலையாய் கனன்று கொண்டிருந்தாய்
இன்று உன்னால்
என் உயிர் வாயுவே என்னை எரித்துக் கொண்டிருக்கிறது
உனக்குமில்லை - இது எனக்குமில்லை
படைத்தவன் தானே எடுத்துக் கொள்வான்
என்ற மனம் என்னிடமுமில்லை
உன்னிடமுமில்லை - இனி
என்ன செய்திடுவேன்
நாம் சந்தித்து இரு வருடங்கள் தானிருக்கும்
அதற்குள் எனை விட்டு தொலைதூரம்
சென்றுவிட்டாய்………….
இருபதாம் வயதில் மரணத்தில் - நீ
பதினெட்டாம் வயதில் அமங்கலியாய் நான்
என் கனவுகள் எனும் நப்பாசைகள்
நனவாகுவது எப்போது?
என் பெற்றோருக்கு மகனாக இருக்கும் என்னை
உன் பெற்றோருக்கு மருமகனாக்குவது எப்போது?
என்ற உன் கேள்விகளெல்லாம்
இப்போது எங்கே?
மருமகளாக வலது கால் வைத்து
புகுந்த வீடு வருவேன் என்றிருந்தேன் - ஆனால்
மலர்வளையம் வைக்கத்தான் - உன்
வாசல் படி ஏறினேன்
உன்னை என்னோடு மணக்கோலத்தில்
கனவு கண்டேன் - இன்று
பிணக்கோலத்தில் நீ………….
மூன்று முடிச்சு போட்டு மெட்டியிட்டு
மஞ்சத்தில் சங்கமிப்போம் என்றிருந்தேன்
என்னைத் தனியே விட்டு கல்லறைக்குள்
நீ மட்டும் சென்றதென்ன?
நான் எங்க சென்றாலும்
நானிருக்கும் இடத்திற்கு உன்னை
அழைத்து வரும் நண்பர்களும்
இங்கில்லை – நீயுமில்லை
நாமிருவரும் மணல்மேடுகளில் சந்தித்ததுமில்லை
மலர்க் கொத்துகள் பரிமாறியதுமில்லை
அலை நீரில் கால் நனைத்ததுமில்லை – அந்திப்
பொழுதில் அதிரசத்தில் இணைந்ததுமில்லை
நந்தவனங்களில் சிந்துகள் பாடியதில்லை
கல்லறைக் காதல்கள் கதைத்ததுமில்லை - இன்று
என் ராகமெல்லாம் முகாரியாய்…….
நெஞ்சை ரணமாக்கும் உன் நினைவுகளுடன்
எத்தனை நாளடா வாழ்வது?
என்னைப் பின் தொடர்ந்த என் நிழலே
எங்கு பார்ப்பேன் உன்னை!
எப்போது பார்ப்பேன் உன்னை!
அடுத்தது உனக்கும் எனக்கும்
திருமணப் பத்திரிகை என்றிருந்தேன் - ஆனால்
இறுதியில் உனக்கு மரண அறிவித்தல்
எழுதியவளும் நானே………
அக்னி பிரகாரத்தை சுற்றி வலம் வர
வேண்டிய காலத்தில் - நீ மட்டும்
சிதைக்குள் சென்றதென்ன?
என்னுள் ஓராயிரம் வார்த்தைப்
பிரயோகங்கள் - நீ அருகில்
வந்தால் அனைத்தும் மௌன
யுத்தங்களாய்……..
அன்று உன்னிலுள்ள காதல்
என்னுள் மௌனமாய்
இன்று உயிரில்லாத நீ
எனக்குள் உயிராய்
உன் காதலை பகிரங்கப்படுத்தினாய் - நீ
நானோ அந்தரங்கமாக்கினேன் - இன்று
உன் மரணம் பகிரங்கமாய் பேசப்பட்டது
என் காதல் அந்தரங்கமாகவே
அறுத்தெறியப்பட்டது……………..
நீ மரணத்தை தழுவினாலும்
உன் நினைவுகளுடன்
ஆயுள் வரை உயிர்த்திருப்பேன்……….
--
மீரா,
திருக்கோணமலை
Saturday, June 28, 2008
Friday, June 20, 2008
அழியும் பேரினவாதம்!!!
பணத்தில் நாம் ஏழை
மனத்தில் நாம் ஒரு கோழை….
பெருகிவரும் பேரினவாதத்தின் முன்..
பெருகிவரும்
கொலைகளையும் தாக்குதலையும்
கண்டு மௌனிக்கும் மௌனிகள்
ஆனாலும்; நாமும் மனிதர்கள்;
என்றேனும் ஒரு நாள்
நாம் பூமியில் அழிவோம் என்று
யாரும் நினைத்தால் அவர்கள்
அழிந்து போவார்கள்…
நாம் மண்ணில் பாதம்
பதித்த போது பரவிய
யுத்தம் வேறு ஆனால் இன்று
பேரினவாதிகளின் அடக்கு முறை
அதிகாரம் யுத்தம் செய்கிறது
நாம் ஒவ்வொரு இறப்பிலும் கண்விழிப்போம்…
ஒவ்வொரு இறப்பும் எமக்கு ஒரு
பிறப்பு மண்ணில்…
அதுவும் தமிழன் என்பது தனிச் சிறப்பு…
மண்ணில் மனிதஇனம் அழிந்தாலும்
அழியாது நம் தமிழினம்
நாம் கோழை இனம் இல்லை
எப்போதும் “வாழை” இனம்…..
--
நதி,
சல்லி
Labels:
நதி
Friday, June 13, 2008
இயலாமை
தன் கூட்டினை
தொலைத்து நிற்கிறது அந்தப் பறவை...
புதிதாய் உதித்திருந்தன
பல பச்சைக் கூடாரங்கள்...
இரத்தமும் சீழுமாய்
சிதறிக்கிடக்கும்
அதன் இனச்சிதிலங்கள்...
கூடும்
தன்னுடன் கூடிய கூட்டமும்
சிதைந்த கவலை அதற்கு..
முடிந்தவரை கொத்திப்பார்த்தது
கூரைகளை...
உடைந்ததென்னவோ
அதனலகு மாத்திரம் தான்..
இருப்பு அற்றுப்போன பின்
இறகுகள் இனியெதற்கு...
ஒவ்வொன்றாய்
பிய்த்துப்போட ஆரம்பித்தது மெதுவாக...
--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு
Labels:
பிரம்மியா கிருபநாயகம்
Thursday, June 12, 2008
ஆசையின் ஆர்ப்பரிப்புகள்
பிய்த்துத் தின்று செரித்து ஊளையிடும் நரிகளென
ஊற்றெடுக்கும் உணர்வுகள்
ஓவ்வொரு கணத்தையும்
குதறுகின்றன
சுற்றி நெருக்கும் அச்சம்
அசைவுகளை அந்நியமாகக்குகின்றபோது
நிகழும் அனிச்சை செயலென
உள்ளெழும் ஆசைகள்
ஆர்ப்பரிக்கின்றன
சுடு குழல்களின் கண்களினூடாக
என்வீட்டு குளியலறையிலும்
எட்டிப்பார்த்து என் நிர்வாணத்தில்
தனது வெற்றியை எக்காளமிடுகிறது
பேரினவாதம்
உழை.. உழை… ஓய்வொழிச்சலன்றி உழை
உன் உயிர் பொருள் ஆவி எல்லாம் என்
சுயநல அரசியலின் செருப்புகளாக
உன்குடும்ப சிறகுகள் பறக்க அல்ல அவை
பத்திரமாக இருப்பதற்கேனும் உழை என
என் ஏழ்மையின் வலியில் காலூன்றி எம்
மூலாதரத்தை உறிஞ்சி தன் வல்லமை பறைசாற்றுகிறது
ஏகாதிபத்தியம்
கறைகளின் மத்தியில் பரிசுத்தம் அவமானம்
என்றபடிக்கு உருமாறி உயிர்களின்
இருப்பை மறுப்பதை நியாயமாக்கி வாலாட்டுகிறது
மனிதாபிமானம்
அதிகாரத்தின் அகோரத்தையும்
நய வஞ்சகத்தின் துரோகத்தையும்
துணைக்கழைத்து ஊடகங்களில்
உற்பத்தி செய்யும் பொய்களில் பளிச்சிடுகிறது
ஜனநாயகம்
எதிர்ப்புகளுக்கான பரிசுகளால்
உள்ளொடங்கி உள்ளொடுங்கி இருப்பொழிந்து - அச்சம்
அசைவுகளை அந்நியமாகக்குகின்றபோது
நிகழும் அனிச்சை செயலென
உள்ளெழும் ஆசைகள்
ஆர்ப்பரிக்கின்றன
தன் நம்பகத்தன்மையை துறந்த இரவுகளில்
வறுமைக்கும் வெறுமைக்கும் கொடுமைக்கும் நீதிக்குமாக
அதன் ஒவ்வொரு குரலும் வழிந்தோடி
வெளிகளின் தளத்தில் ஒவ்வொரு புள்ளியிலும்
தேடுகிறது தன் விடுதலையை….
--
எஸ். சத்யதேவன்
திருக்கோணமலை
Labels:
எஸ். சத்யதேவன்
Wednesday, June 11, 2008
அந்தக் கடிகாரம்..
சொட்டாய் விழுந்த மழைத்துளி
சகதியுடன் சங்கமித்துக்கொண்டது..
கிழிந்திருந்த ஒரு பொத்தல் துணி
அவனை உடுத்திக்கொண்டது...
மழை
அவனில் ஒதுங்கியது...
அவசரப்பாதணியொன்று
அவனை மிதித்துவிட்டுப் போனது...
அவனில் எந்த அசைவுமில்லை...
..
...
....
.....
இதுவரை மௌனம் காத்த
அந்தக் கடிகாரம்
இரண்டு நிமிடம் நிதானித்து
பின் அலறியது.......
--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு
Labels:
பிரம்மியா கிருபநாயகம்
இலங்கை அரசியல்: Top 10 சொற்களும் அவற்றின் பொருளும்
இன்றைய சூழ்நிலையில் இலங்கை இனப்பிரச்சினையில் அக்கறையுள்ளவர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்ற வார்த்தைகளாக தேசிய இனம், சிறுபான்மை இனம், சுயநிர்ணயம் போன்றவை உள்ளன. இவ்வார்த்தைகள் 2002 ற்குப்பின்னர் இலங்கையில் டொப் 10 வார்த்தைகளில் இருந்தன இப்போது அவை எந்த இடத்தில் என்பது தெரியவில்லை ஆயினும் என் தலைமுறையில் பலர் இவ்வார்த்தைகளோ இவைசொல்லும பொருளையோ இவற்றின் அரசியல்களையோ தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இன்று சூழல், போர், கிழக்கு தேர்தல் பேரினவாதத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் என்று நாம் பெரியளவில் பேசிக்கொண்டிருக்க அது பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் ஒரு தலைமுறை உருவாகிறது. இவை ஏற்படுத்தம் பாதிப்புக்கள் குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம். இவற்றைக்கருத்தில் கொண்டும் இவைபற்றிய என்புரிதலை ஆழப்படுத்தும் நோக்கிலும் இச்சொற்களுக்கான பொருள்களை எழுதுகிறேன்.
--
எஸ். சத்யதேவன்
திருக்கோணமலை
தேசிய இனமும் சிறுபான்மை இனமும்
தேசிய இனம் என்பதற்கும் சிறுபான்மை இனம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் தொடர்பான துணை ஆணையம் சிறுபான்மையினரைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகிறது. ‘இன, மொழி, கலாச்சார அல்லது சமய ரீதியாக சில தனி இயல்புகளைக் கொண்ட அல்லது தேசிய ரீதியாகத் தோன்றிய, ஆனாலும் பெரும்பான்மை அல்லது ஆதிக்கம் செலுத்துகின்றதாக தன்னைக் கருதிக்கொள்ளும் எஞ்சிய சனத்தொகையிலிருந்து, ஒரு வழியில் அல்லது பல வழிகளில் தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தாத ஒரு குழு’ என்று. சிறுபான்மை இனங்களுக்கு சிறுபான்மையினருக்கான உரிமைகளே உண்டு. சுயநிர்ணய உரிமைஇல்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
1992-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமையத்தின் பொதுச்சபை, தனது, 47/135 என்ற இலக்கத்தைக் கொண்ட பிரேரணையில், தேசிய அல்லது இன, சமய, மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய பிரகடனத்தை விடுத்தது.
சிறுபான்மை மக்களுக்கு இப்பிரகடனம் பின்வரும் உரிமைகளை வழங்குகிறது.
- அவர்களது உளதாம் தன்மையும் அடையாளமும் பேணப்படுதல்
- தமது சொந்தக் கலாசாரத்தை அனுபவித்தல் தமது சொந்த மதத்தை ஏற்றுக்கொண்டு அதை அனுஷ்டித்தல், தமது சொந்த மொழியைப் பயன்படுத்துதல்
- கலாசாரம், சமயம், சமூகம், பொருளாதாரம், பொதுவாழ்வு என்பவற்றில் பங்குபற்றுதல்
- தமது சொந்தக் கழகங்களை நிறுவிப் பேணுதல்
- தமது குழுவின் ஏனைய சிறுபான்மை மக்களுடனும் சமாதானமான தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றைப் பேணுதல்
- எவ்விதமான பாரபட்சத்திற்கும் ஆளாகாமல் தமது உரிமைகளைப் பயன்படுத்துதல்.
தேசிய அல்லது இன, சமய, மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் அமையத்தின் பிரகடனத்தின் முன்னுரிமையில்
‘தேசிய அல்லது இன, சமய, மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய பிரகடனம் தேசிய அல்லது இன, சமய,மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்துதலும் பாதுகாத்தலும், அவர்கள் வாழும் நாடுகளின் அரசியல், சமூக ஸ்திரப்பாட்டிற்கு பங்களிப்புச் செய்யும்’ எனக் குறிப்பிடுவதனுடன் இவர்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கங்களின் பாதுகாப்பது கடமையாகும் என வலிறுத்துகிறது.
தேசியம் என்பது ஜனநாயகம், பிறப்பால் அனைவரும் சமம், தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு, அபிவிருத்தி, தனிமனித உரிமை,கூட்டுரிமை ஆகிய அனைத்தையும் ஒன்று கலந்து திரட்டபட்ட ஒரு புதிய சமூக வடிவமமே. இது தான் சார்ந்த சூழலின் நிமித்தம் மொழி, மதம், இனம், பிரதேசம் என்பவற்றின் பெயரால் தன்னை அழைத்துக்கொள்கிறது.
தேசியம் தேசிய வாதத்தினூடாக கட்டியெழப்படகிறது.மன்னராட்சி ஏதேச்சாதிகார அரசுகள் மக்களாட்சி அரசுகளாக உருமாறத் தொடங்கிய ஒரு பெரும்போக்கின் மடையுடைப்பாய் தேசியவாதம் தோன்றியது. தேசிய வாதம் என்றால் என்ன?
இக்னாரிஃப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ஒர் அரசியல் கொள்கை என்ற வகையில் தேசிய வாதம் என்பது உலக மக்கள் தேசிய இனங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தேசிய அரசுகளுக்குள் சுய ஆட்சியலகுகளாக அல்லது தம்மளவில் தேசிய அரசுகளாக அமையும் சுயநிர்ணய உரிமை உண்டு என்றும் கருதும் ஒரு நம்பிக்கையாகும். ஒருகலாச்சார இலட்சியம் என்ற வகையில் தேசியவாதம் என்பத ஆண்களும் பெண்களும் பல்வேறு அடையாளங்களைக் கொண்டிருக்கும் போதிலும் தேசிய இனமே அவர்களுக்குரிய அடிப்படை அடையாள வடிவத்தை தருகின்றது. என்ற கண்ணோட்டத்தைக் குறிக்கின்றது.
ஒரு தார்மீக இலச்சியம் என்ற வகையில் தேசியவாதம் என்பது ஒரு வீரத்தியாக ஒழுக்கம் அக அல்லத புற எதிரிகளிடமிருந்து தன் தேசிய இனத்தைப்பாதுகாப்பதில் வன்முறையை பயன்படுத்தவதை நியாயப்படுத்துதல் என்பவற்றைக்குறிக்கும். ஆயினும் பல்வேறு அறிஞர்களின் கூற்றுப்படி தேசியவாதம் என்பது, பற்றும், அர்ப்பணிப்பும் கோருகின்ற வரலாறு, இனத்துவம் அடையாளம் காணக்கூடிய வாழ்புலம் என்பவற்றால் பினைப்புண்ட, அரசியல் ரீதியாக ஒன்றிணைந்த ஒரு சமூகத்தின் வரித்துக்கொள்ளப்பட்ட உறுப்புரிமையாகும். மக்களை அரசியலில் பங்காளிகளாகப் பிரவேசிக்கச் செய்தமை தேசிய வாதத்தின் சாதனையாகும். ஆக்கிரமிப்பு நோக்குடைய தேசிய வாதம் ஆதிக்க வெறி மிக்கதாகவும் பிற்போக்கானதாகவும் உள்ளது மக்களின் உரிமைக்காக எழும் போராட்டத்தை வழிநடத்தும் தேசிய வாதம்தேசப்பற்றாகவும் முற்போக்கானதாகவும் அமைகிறது.
இவற்றின் அடிப்படையிலே தேசியஇனம் என்பது வரையறுக்கப்படுகிறது.ஜோசப்ஸ்ராலின் தேசிய இனங்களுக்கு நான்கு வரையறைகளை கூறுகிறார். பொதுப்பிரதேசம், பொதுப்பொருளாதாரம், பொதுமொழி, பொது வரலாறும் அதனாலான பொது உளவியலுருவாக்கமும் என்பனவெ அவை. ஆயினும் தேசியம் அல்லது தேசியஇனம் என்பதற்கு ஸ்டாலின் (J.V.Stalin 1913) முதல் ஏர்னஸ்ட் ஜெல்னர் (Earnest Gellner 1983) வரை பலர் பல வரைவிலக்கணங்களை தொகுத்துப் பின்வருமாறு கூறலாம்
“Self – Identifying stable modern community of people, who share a sense of group identity and solidarity based on common language, common culture, and [in general] common territory”
பொதுவான மொழி, பொதுவான காலாச்சாரம், பொதுவான பிரதேசம் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமக்கிடையே குழும உணர்வையும் ஒருமைப்பாட்டையும் பகிர்ந்து கொள்ளும் சுய அடையாளமுடைய நிலையான நவீன மக்கள் சமூகமே தேசியமாகும்.
ஜனநாயகம் தற்போதுள்ள நாகரிகமான ஆட்சிக் கோட்பாடாகும். ஆயினும் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஆதிக்கத்திலுள்ள சமுதாய சக்திகள் அதன் தன்மையைத் தீர்மானிக்கின்றன சமுதாய மாற்றம் அவசியமாகும் சூழலில் அவை கேள்விக்குள்ளாகின்றன ஆதிக்கத்திலுள்ளோருக்கு பயன்தராத போது அவை மீறப்படுகின்றன. ஆயினும் சில அடிப்படையான பொதுப்பண்புகளை வைத்தே ஒரு சமுதாயம் ஜனநாயக சமுதாயமா?இல்லையா என நாம் முடிவு செய்கிறோம். ஒவ்வொரு தேசிய இனத்தினும் தேசிய இன உணர்வும் ஒவ்வொரு மொழி பேசுவோரதும் மொழி உரிமையையும் ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவரதும் மத நம்பிக்கைக்கான சுதந்திரமும் ஒவ்வொரு தேசத்தினதும் தேசியத் தன்மையும் மதிக்கப்பட வேண்டியன. ஒரு தேசிய இனத்தின் இருப்பும் அதன் தேசியத்தன்மையும் மிரட்டலுக்கு உள்ளாகும்போது அந்த இனம் அம்மிரட்டலை எதிர்த்து போரிடுவது நியாயமானது. இந்நிலையில்த்தான் சுயநிர்ணய உரிமைகான கோரிக்கை எழுகிறது. ஏனெனில் தேசிய இனத்திற்கே சுயநிர்ணய உரிமை உண்டு. ஒரு தேசிய இனத்தின் உரிமைகள் மறுக்கப்படுமாயின் அந்த தேசிய அந்த உரிமைக்காக மட்டுமின்றி பிரிவினையை செயற்படுத்தவும் போராடுகிறது.
சுயநிர்ணய உரிமை
சுயநிர்ணய உரிமை என்பது வரலாற்று ரீதியாக வளர்ந்த ஒன்றுதான். தேசிய ஒடுக்கு முறையிலிருந்து விடுபட்டு தனி அரசை அமைத்துக் கொண்டு வாழும் உரிமைக்கான போராட்டம் முதன் முதலாக ஐரிஸ் மக்களிடமிருந்தே வெடித்தது. அந்த ஐரிஷ் மக்களின் போராட்டம் தான் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தது. 1776- ல் பிரித்தானியாவிற்கெதிராக எழுற்சி பெற்ற அமெரிக்க சுதந்திரப்போர் ஒருதேசியம் தனது சொந்தப் போராட்டத்தின் மூலம் சுய நி;ணயஉரிமையைவென்றெடுக்க முடியும் பாடத்தை உலகத்திற்கு முதற்தடவையாகப் புகட்டியது. 1867-ல் கனடாவில் சமஷ்டி ஏற்படுத்தப்பட்டது. இதுவே உலகின் மிகப்பழமையான சமஷ்டி என கருதப்படுகிறது. இது சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதை மாத்திரமல்ல இவ்வாறு இணக்கமான முறைகளில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கிய ஒன்று என்ற உன்மையை உலகிற்கு முதல்தடைவையாக உணர்த்தியது.
1896-ம் ஆண்டு கார்ல் கவுஸ்ட்கி தலமையில் லண்டனில் கூடிய சர்வதேச காங்கிரஸ் தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியது. 1906-ல் சுவீடனிலிருந்து நோர்வே சர்வசன வாக்கெடுப்பின் மூலம் பிரிந்தது. சமாதான முறையிலே இருநாடுகள் சுயநிர்ணய உரிமையைக் கையாண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும். இதனால் சுய நிர்ணய உரிமை என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத ஒரு ஆயுதமாக பரவலாகக் கருதும் மனப்பாங்கு வளர்ந்தது. 1917-ல் ரஸ்யாவில் இடம்பெற்ற ஒக்டோபர் புரட்சி மனித குல வரலாற்றில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. முதற்தடையாக தொழிலாளர் தலைமையில் சோஷலிசப் புரட்சி ஒன்று வெற்றி பெற்றது. ஆட்சிக்கு வந்த லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கொலனிய மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் சுயநிர்ணய உரிமையையும் ஆதரித்துக் குரல் கொடுத்தது.
தொடர்ந்து முதலாம் உலக யுத்த முடிவிலே தோல்வியடைந்த நாடுகளின் பிடியில் இருந்த பல நாடுகள் விடுதலையைப் பெற்றன. இந்நாடுகளின் விடுதலையை துரிதப்படுத்தக் கூடியவிதத்திலும் போருக்கு பிந்திய நிலைமையை நெறிப்படுத்தும் வகையிலும் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வ+ட்ரோ வில்சன் 1918-ம் ஆண்டு தேசியங்களின் சுயநிர்ணய உரிமை உள்ளடங்கிய தனது 14 அம்ச திட்டத்தை முன் வைத்தார். இத்திட்டம் ஆசிய ஆபிரிக்க மக்களின் ஆதரவைப்பெற்றது. யுத்தத்தின் முடிவில் 1919-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட வார்செயில் ஒப்பந்தத்திலும் சுயநிர்ணய உரிமை பிரகடனப்படுத்தப்பட்டது. இக்காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட தேசங்களின் லீக் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தது. 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை சுயநிர்ணய உரிமைக்கு சட்ட வரையறைக்கு உள்ளடக்கப்பட்ட நிறுவனப் படுத்தப்பட்ட அந்தஸ்த்தை வழங்கியது.
சுயநிர்ணயம் என்பதற்கு பலர்பலவிதமாக வரைவிலக்கணம் கூறியுள்ளார்கள். அவற்றின் முக்கியத்தவம் கருதி அவைகளை நோக்குவோம். ருசியப் புரட்சியை தலமை தாங்கி நடத்திய லெனினே சுயநிர்ணய உரிமை என்பதற்கு முதலில் திட்டவட்டமான வரைவிலக்கணத்தை கொடுத்தவர்;.அவர் சுயநிர்ணயத்தை ‘தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பது அரசியல் ரீதியில் சுதந்திரத்தை குறிக்கும். அடக்கியொடுக்கப்படும் தேசிய இனத்திடமிருந்து அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் உரிமையைக் குறிக்கும். குறிப்பாக அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் உரிமையைக் குறிக்கிறது. குறிப்பாக அரசியல் சனநாயகத்திற்கான இக்கோரிக்கை பிரிந்து செல்வதற்கான ப+ரண உரிமையையும் இவ்வாறு பிரிந்து செல்வதற்கு பிரிந்து செல்லும் தேசிய இனத்தின் கருத்தை அறிவதற்கான வாக்கெடுப்பை நடாத்துவதற்கான உரிமையையும் குறிக்கும்’ ஆயினும் சுயநிர்ணயம் என்பது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தன் சமுதாய அமைப்பைத்தீர்மானிக்கவும் பேணவுமான உரிமையைக் குறிக்கிறது. ஒரு அரசமைப்பின் கீழ் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இணைந்து ஒரே நாடாக வாழ்வதா அல்லது தனித்தனி நாடுகளாகப் பிரிவதா என்று தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உண்டு. எனப் பொதுவாக சுயநிர்ணயத்திற்கு விளக்கம் கூறுவர். ஏலிசபெத் ஜமீலா கோன் என்பவர் விளக்கியவாறு சுயநிர்ணய உரிமை என்பதனை சுயம் - நிர்ணயம் - உரிமை (Right – Self – Determination) என மூன்று தனித் தனிச் சொற்களாகப் பிரித்தால் அதன் அர்த்தம் விளங்கும்.
சுயம் - என்பது ஒரு தேசிய சமூகம் சுயமாக தனது தலைவிதி எதுவாக இருக்காலாம், தான் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியல் வடிவம் எதுவாக இருக்கலாம் என்பதைப் பற்றி தானே சுயமாக முடிவெடுப்பது மட்டுமல்ல, அம்முடிவுகளில் தலையிடும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது என்பதையும் குறிக்கிறது.
நிர்ணயம் - என்பது அதனை நிர்ணயிப்பது வேறு யாருமல்ல அந்தந்தத் தேசிய சமூகங்களே என்பதைக்குறிக்கிறது
உரிமை - என்பது இது ஒவ்வொரு தேசியத்திற்கும் உள்ள பிற்ப்புரிமையே தவிர சலுகை அல்ல என்பதைக் குறிக்கிறது.
ஆகவே சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய சமூகமும் தனது அரசியல் தலைவிதியை, தான் சுதந்நிரமாக வாழும் அரசியல் வடிவத்தை தானே தீர்மானிக்கும் உரிமை உடையது என்பதைக்குறிக்கிறது. இது பிரிந்து போகும் உரிமையை உள்ளடக்கியதாகும்.
உள்ளக சுயநிர்ணய உரிமையும் வெளியக சுயநிர்ணய உரிமையும்
முன்னர் ஐரோப்பிய கவுன்ஸிலின் சித்திரவதை தடுப்புக் குழுவின் தலைவராகவும், பின்னர் யூகோஸ்லோவியாவில் இடம்பெற்ற குற்றச்செயல்களை விசாரிப்பதற்கு ஐ.நாவினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தின் (International Criminal Tribunal for the Former Yugoslavia) தலைவராகவும் இருந்த புளோரன்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் அண்டனியோ கெசாசி (Antonio Cassese) தனது மக்களின் சுயநிர்ணய உரிமை (Self Determination of people) என்ற நூலில் சுயநிர்ணயஉரிமையை உள்ளக சுயநிர்ணய உரிமை, வெளியக சுயநிர்ணய உரிமை என இரு வகையாகப் பிரித்தார். உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லாமல் அரசுக்குள்ளேயே அதில் வாழும் சமூகங்களின் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் உரிமையைக் குறிக்கின்றது. உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற சொற்பதத்தை பிரயோகிக்காமல் பல நாடுகள் இக்கருத்தையே இதுவரை வலியுறுத்தி வந்திருக்கின்றன. சீனா ஒற்றையாட்சியின் கீழ் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தை 1950களிலிருந்தே முன்வைத்து வருகிறது.
நெல்சன் பீரி (Newlson Peery) தேசியங்களின் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தக்கூடிய சாத்தியப்பாட்டின் அளவைக்கொண்டு ஒவ்வொரு தேசியத்தினதும் எதார்த்த தன்மைக்கேற்ப அதனை மூன்று பிரிவாகப் பிரித்து அவற்றின் உரிமைகளை வரையறுத்திருக்கின்றார்.
முதலில் தேசியங்களை Nation என்றே அவர் குறிப்பிடுகிறார். பிரிந்து செல்லக்கூடிய பிரதேச அடித்தளத்தைக்கொண்ட சமூகங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு என்கிறார். (உதாரணம் இலங்கையின் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள்)
இரண்டாவதாக பிரிந்து செல்லக் கூடிய சூழுல் இல்லாத ஆனால் ஒரு பிரதேசத்திலாவது அடர்த்தியாக வாழுகின்ற எண்ணிக்கையில் குறைவான தேசியங்களே சிறுபான்மை தேசிய இனம்(Minority Nationality) எனக் குறிப்பிட்டுள்ளார். (உதாரணம்:- மலையகத் தமிழ் மக்கள்) இவர்களுக்கு பிரிந்து செல்லும் வாய்ப்பு இல்லாத போதும் தாம் வாழும் பிரதேசத்தில் சுய ஆட்சி அல்லது சுய நிர்வாகம் போன்ற ஏற்பாடுகளை அமைத்துக்கொன்டு வாழும் சுயநிர்ணய உரிமை உண்டு என விபரிக்கின்றார்.
மூன்றாவதாக, எந்த ஒரு பிரதேசத்திலும் அடர்த்தியாக வாழாமல் ஆங்காங்கே பரந்து வாழும்தனித்துவமான தேசியங்களையும் (உதாரணம் இலங்கையில் வாழும் பறங்கியர்) ஒரு பிரதேசத்தில் செறிவாக வாழ்ந்து சுயாட்சி அல்லது சுய நிhவாக ஏற்பாட்டின் கீழ் வாழ்ந்தாலும் அதற்கு வெளியே பரந்து வாழ்கின்ற மக்களையும் (வடக்கு- கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற ஈழத்தமிழர்) தேசிய சிறுபான்மையினர் (National minority) எனக்குறிப்பிட்டு இவர்களுக்கு சம உரிமையை உறுதிப்படுத்தும் சிறப்புச் சட்டங்களும் ஏற்பாடுகளும் வழங்கப்பட வேண்டும் என்றும். அவற்றைப் பெறும் சுயநிர்ணய உரிமை இவர்களுக்கு உண்டு எனவும் இவர் குறிப்பிடுகிறார்.
பிரிந்து போகும் உரிமை என்றால் பிரிவினையையே குறிக்கும் என்ற தவறான எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. விவாகரத்துக்கான உரிமை விவாகரத்துச் செய்யுமாறு எவரையும் வற்புறுத்துவதில்லை. அந்த உரிமை இருப்பதனால் பெண்களுக்குச் சமுதாயத்தில் கூடிய பாதுகாப்பு ஏற்படுகிறது. தாங்க முடியாத துன்பமிக்க தாம்பத்தினின்று விவாகரத்து ஆணுக்கும் பெண்ணுக்கும் விடுதலையைத் தருகின்றது. விவாகரத்துச் செய்வதற்கான உரிமை ஒரு சமத்துவமான நியாயமான உறவுக்கு உதவுகிறது. கள்ள உறவுகளும், தற்கொலைகளும், கொலைகளும், வன்முறைகளும் நிகழாது தடுக்க உதவுகிறது. விவாகரத்துச் சாத்தியம் என்ற காரணத்திற்காக மட்டுமே யாரும் அதை நாடுவதில்லை. அது போன்றே பிரிந்து போகும் உரிமை இருப்பதால் மட்டுமே ஒரு தேசிய இனம் பிரிந்து போய்விடாது. அந்த உரிமை இல்லாதவிடத்து ஒரு தேசிய இனத்தின் உரிமைகள் மறுக்கப்படுமாயின் அந்த தேசிய அந்த உரிமைக்காக மட்டுமின்றி பிரிவினையை செயற்படுத்தவும் போராடுகிறது. தனக்கு மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையை அது போராடி வென்றெடுப்பதோடு மட்டுமல்லாது பய்னபடுத்தியும் விடுகிறது. சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் மூலம் பிரிவினையைத்தடுக்க முனைவோர் இதை உணரவேண்டும்.
ஒரு தேசிய சமூகம் பிரிந்து செல்ல விரும்பும் போது அதற்கான அவசியம் அங்கு நிச்சயமாக இருக்குமானால் அதற்கான வாய்ப்பும் அதற்கான அகப் புறச்சூழலும் சாதகமாக அமையுமானால் அது சாத்தியமாகும். ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் இரண்டு தேசியங்கள் ஒன்றாக வாழ்ந்து ஜனநாயக முறையில் பிரிந்து சென்றதை உலக வரலாறு கன்டிருக்கிறது. சுவீடனில் இருந்து நோர்வே பிரிந்தமை இதற்கான பழைய உதாரணமாகும். செக்கும் ஸ்லோவாகியாவும் ஜனநாயக முறையில் பிரிந்து சென்றது அண்மைக்கால உதாரணமாகும். ஒடுக்கும் ஒரு தேசியத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிகரமாக பிரிந்து சென்று தனியரசை அமைத்துக் கொண்ட பல தேசிய சமூகங்கள் உண்டு. பிரித்தானிய ஆட்சியிலிருந்து அமெரிக்கா பிரிந்தது முதல் அண்மைக் காலத்தில் எரிதிரியாவும், கிழுக்குத்தீமோரும் பிரிந்து தனி நாடுகள் அமைந்தமை வரையிலான பல உதாரணங்கள் இதற்குண்டு.
இதைத்தவிர சமஸ்டி முறையில் தேசியங்கள் தேசிய ஒடுக்குமுறைக்கு தீர்வு கண்ட பல உதாரணங்களை உலகம் கண்டிருக்கிறது. கனடாவின் சமஸ்டி முறை (இங்கு கியூபெக் மாநிலத்தின் பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை) இந்தியாவின் மாநில ஆட்சி முறை (இங்கும் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுகளுக்கும் மாநில அரசுகளுக்குமிடையிலான உறவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல இன்னுமுள்ளன) போன்றவை இதற்கு சல உதாரணங்கள். சுவிட்சர்லாந்திலுள்ள கன்டன் முறை அந்நாட்டுக்கே உரிய முறையில் இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமைந்துள்ளது. அதே போல் செயற்கையாகப் பிரிக்கப்பட்ட சில தேசியங்க்கள் மீண்டும் இணைந்துள்ளன கிழக்கு ஜேர்மனி மேற்கு ஜேர்மனி என பிரிக்கப்பட்டிருந்த ஜேர்மனி மீண்டும் ஒன்றிணைந்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இதில் உள்ள அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால், சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவது என்பது ஓர் ஒற்றை வழிப்பாதை அல்ல என்பதுதான். ஒரு தேசிய சமூகம் மாத்திரம் தீர்மானித்து அதனை அமுல்படுத்தும் நிலைமை பொதுவாக இருப்பதில்லை. ஒடுக்கப்படும் ஒரு தேசியம் அதற்கெதிரான போராட்டத்தைத் தொடங்கும் பொழுது அல்லது பிரிவினைக் கோரிக்கையை முன் வைக்கும் பொழுது அல்லது பிரிவினைக் கோரிக்கையை முன் வைக்கும் பொழுது ஒடுக்கும் தேசியத்தின் மத்தியிலிருந்து பெரும் தேசிய வாதம் வெறித்தனமாக கிளம்புகிறது. தேசிய ஒடுக்குமுறை மேலும் அதிகரிக்கிறது. இந்நிலைமைகளின் போது ஒடுக்கப்படும் தேசியங்களுக்கு நியாயம் வழங்கக்கூடிய திட்டவட்டமான ஏற்பாடு சாவதேச அரங்கில் இன்று வரைகிடையாது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் கூட சுயநிர்ணய உரிமையைப் பிரிவினைக்குச் சாதமாகப் பயன்படுத்தக்கூடிய சட்ட வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளன. சாராம்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசுகளையே பிரநிதித்துவப்படுத்துகிறது. ஓவ்வொரு நாட்டிலும் எந்தெந்தத் தேசியம் மேலாதிக்கம் செலுத்துகிறதோ அந்தந்தத் தேசியங்களின் கருத்தே ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலிக்கிறது.
பிரிவினைக் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையாகும் இயல்பானவையாகவும் இருப்பதில்லை.
சுயநிர்ணய உரிமைபற்றிய ஐக்கியநாடுகள் சபை மற்றும் உலகளாவிய கருத்தும், விமர்சனங்களும்.
1960-ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நிறைவேற்றிய 1514(XV) இலக்க தீர்மானம் அதாவது ‘காலனிய நாடுகளுக்கும் மக்களுக்கும் சுதந்திரம் வழங்குவதற்கான பிரகடனம் | சுயநிர்ணய உரிமையின் ஜீவத்துடிப்புக்கு பலத்த அடியைக்கொடுத்துள்ளது. இப்பிரகடனத்தின் இரண்டாம் அலகு ‘தேசியங்கள் தமது அரசியல் அந்தஸ்த்து பொருளாதார சமூக கலாச்சார அபிவருத்தி தொடர்பாக சுதந்திரமாக தீர்மானம் எடுப்பத்கான சுயநிர்ணய உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு’ எனக்கூறுகிறது. ஆனால் பிரதேச உரிமையும் பிரிந்து சென்று அரசை அமைக்கும் உரிமையும் அதில் கைவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அதன் 6ம் அலகு ‘தேசிய ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பதற்காகச் செய்யப்படும் எந்த ஒரு முயற்சியும் ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு முரணானது’ என பிரகடனப்படுத்துகிறது. இதன் மூலம் பிரிந்து செல்லும் உரிiமையை முற்றாகவே அது நிராகரித்துள்ளது.
நாடுகள் கூட தத்தம் தேசிய நலனை முன்வைத்தே சுயநிர்ணய உரிமைக் கொள்கையை சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்தி வருகின்றன. முதலாம் உலக மகா யுத்தத்தின் போது சுயநிர்ணய உரிமையை முய்வைப்பதில் முனைப்பாக நின்ற முதலாவது நாடு என்ற பெருமை அமெரிக்காவுக்கு உண்டு. அமெரிக்க ஜனாதிபதி வில்சன் இவ்விடையத்தில் ஆற்றிய வரலாற்றுப்பங்களிப்பு இன்றும் நினைவுகூறப்படுகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா தனக்கு சாதகமான சமயங்களில் மாத்திரமே இவ்வுரிமையை அங்கீகரிக்கிறது. பல தேசியங்கள் வாழும் ஒரு நாட்டில் எந்த ஒரு தேசியமும் பிரிந்து செல்லக்கூடாது என்ற கொள்கையை வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் சீனாவுக்கெதிராக தைவானுக்கு ஆதரவு நல்கி வருகிறது. கொலனித்துவ அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளுக்கு மாத்திரமே சுயநிர்ணய உரிமை உண்டு எனவும் ஒருநாட்டுக்குள் வாழும் தேசியங்களுக்கு அவ்வுரிமை கிடையாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பிடிவாதமாக கூறிவரும் இந்தியா, திபெத் பௌத்த மதத் தலைவரான தலாய்லாமாவை வைத்துக் கொண்டு திபெத் சீனாவிலிருந்து பிரிவதை ஆதரிப்பதாக கூறிவருகிறது. சீனாவில் வாழும் மொத்த சிறுபான்மை மக்களின் தொகை ஐந்து சதவீதத்திற்கும் குறைவானதாகும். இதில் பெரும்பாலான தேசியங்கள் பிரிந்து செல்லக்கூடிய சூழலில் வாழவில்லை. ஆயினும் அங்கு வாழும் சின்னஞ்சிறிய தேசியங்களுக்குக் கூட சுய நிர்வாக அலகுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உலகின் மிகச்சிறிய தேசியம் எனக் கருதப்படும் ஹோசே (Hoche)மக்களுக்கு (இவர்களது தொகை 2000 பேர் மாத்திரமே) கூட நிர்வாக அலகு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் பிரிந்து செல்லக்கூடிய சூழலில் உள்ள திபெத்திய மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை சீனா அங்கீகரிக்க மறுக்கிறது.
ஆயினும் யூகோஸ்லோவியா பிரச்சினையில் அடிப்படை மனித உரிமைப் பிரச்சினையை சுயநிர்ணய உரிமையுடன் இணைத்து அவற்றின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்தன. முன்னைய யூகோஸ்லாவியாவில் இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சர்வதேச நீதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த அன்டனியோ கசாசி ~மக்களின் சுயநிர்ணய உரிமை| என்ற பெயரிலே 1995-ல் வெளியிட்டட நூலில் கொலனிகளுக்கு மாத்திரமே பிரிந்து செல்லும் உரிமை உண்டு. அதே வேளை ஒரு நாட்டுக்குள் வாழுகின்ற தேசியங்கள் பிரிந்து செல்லாமல் தமது கலாச்சார, பொருளாதார, அரசியல் நிலமைகளை தமது சுய விருப்பத்தின் பேரில் அமைத்துக்கொண்டு வாழும் உள்ளக சுயநிர்ணய உரிமை மாத்திரமே உண்டு எனவும் வரையறுத்துள்ளார். இதன் மூலம் பிரிந்து செல்லும் உரிமை உட்பட தமது தலைவிதியை தாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமையை அந்த தேசியங்களுக்கு மறுத்துள்ளார். இவரது இந்தக் கோட்பாட்டையே ஐக்கிய நாடுகள் சபை இன்று ஏற்றுக்கொள்கிறது. இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே மோலோங்கியிருக்கும் சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்தானது விடுதலை கோரும் கொலனிகளுக்கும் அரசுகளுக்கும் உரிய ஒன்றே தவிர தேசிய சமூகங்களுக்கு உரியது அல்ல என்பாதாகும். பல சமூக ஆய்வாளர்களும் கூட இக்கருத்தைத்தான் இப்போது முனைப்பாக முன்வத்து வருகிறார்கள். 1987 ல் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இக்கருத்தை பகிரங்கமாக முன் வைத்தது.
இதுவரை காலமும் சயநிர்ணய உரிமையின் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத அம்சமாகவே உள்ளக - வெளியக உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல கரதப்பட்டன. சாராம்சத்தில் பிரிந்து செல்லக்கூடிய சூழலைக் கொண்டுள்ள தேசியங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையும் பிரிந்து செல்ல இயலாத சூழலில் உள்ள மக்ளுக்கு பிரிந்து செல்லாமல் தனக்குரிய அரசாங்க வடிவத்தை தேர்ந்தெடுக்கும் சுயநிர்ணய உரிமையும் உண்டு என்பதையுமே அது குறித்தது. ஆனால் 1960களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதன் அர்த்தத்தை மாற்றியமைத்துள்ளது. ஒரு அரசுக்குள் வாழும் எந்தத் தேசிய சமூகமும் அது பிரிந்து செல்லும் சூழுலில் வாழ்ந்தாலும் கூட அதற்கு பிரிந்து செல்லும் உரிமை கிடையாது என திட்டவட்டமாக வரையறுக்கிறது. இதன் மூலம் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் ஆத்மா கொலை செய்யப்பட்டிருக்கிறது.
ஏனெனில் தேசியங்களின் சுயநிர்ணய உரிமை என்பது அரசின் சுயநிர்ணய உரிமையாக அர்த்தப் படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இறைமை பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றில் தலையிடுவதற்கு பிற சக்திகளுக்கு உரிமை கிடையாது எனவும் தேசிய ஒருமைப்பாட்டைச் சீர்குலைப்பதற்கு எந்த ஒரு தேசியத்திற்கும் உரிமை கிடையாது எனவும் ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியதன் மூலம் நாடுகளுக்கிடையிலான உறவுகளைச் சமநிலைப்படுத்துவதில் ஒரு புதிய ஏற்பாட்டை அறிமுகப் படுத்தியுள்ளது.
ஆனால் அதற்கேற்ப ஒரு நாட்டுக்குள் வாழும் பல்வேறு தேசியங்களுக்கிடையிலான உறவை சமநிலைப்படுத்தக்கூடியதான எந்த ஏற்பாட்டையும் முன்வைக்கத்தவறியுள்ளது. உதாரணமாக ஒரு தேசியம் தனது அரசினால் தனக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாகவோ தனக்கு காட்டப்படும் பாரபட்சம் தொடர்பாகவோ தன்மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமறைக்கு எதிராகவோ முறையீடு செய்வதற்கும் நிவாரணம் பெறுவதற்கும் எந்த ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட ஏற்பாட்டையும் ஐக்கியநாடுகள் சபை கொண்டிருக்கவில்லை. இதனால் அரசுகள் மேற்கொள்ளும் தேசிய ஒடுக்கு மறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு எந்த ஒர ஏற்பாடும் இல்லாதிரப்பதுடன் ஒடுக்கும் தேசியங்களின் கரங்கள் பலப்படுத்தப்படுகின்றன. சாராம்சத்தில் ஒடுக்கப்படும் தேசியங்கள் தம்மை ஒடுக்கும் தேசியங்களில் தங்கி வாழும் நிலையே ஏற்பட்டுள்ளது.
சுயநிர்ணய உரிமையானது தன்னகத்தே புரட்சிகளையும் போராட்டங்களையும் தோற்றுவிக்கக் கூடிய ஆற்றல் மிக்க வித்துக்களைக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை மறைக்க இயலாது. அதற்காக அதனை உரு பயங்கரவாதக் கோரிக்கையாக எவரும் முத்திரை குத்திவிட முடியாது. சிறு தேசிய சுமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது குரலுக்கு வலிமை சேர்க்கும் ஓர் அடிப்படையை இவ்வுரிமை வழங்குகிறது. மறுபுறத்தில் ஒர தேசிய சமூகத்தின் உரிமையை மற்றொன்று மீறாமல் பரஸ்பர நல்லெண்ணம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேசியங்களுக்கிடைமயில் உளப்ப+ர்வமான ஐக்கியம் ஏற்படுவதற்கு இவ்வுரிமை மாத்திரமே வழிகோலுகிறது.
இதனால் தான் 1998 நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 27ந் திகதி வரை யுனஸ்க்கோவினால் பாசிலோனா (Barcelona – Spain) நகரில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக நடத்தப்பட்ட சர்வதேச நிபுணர்களின் மாநாடு விரிவான விவாதத்தின் பின்னர் சுயநிர்ணய உரிமை தேசியங்களைப் பிளவுபடுத்துவதற்கு பதிலாக தேசியங்களுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்பதற்கான ஓர் அடிப்டையை நல்கி சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது என்ற முடிவுக்கு வந்தது. (UNESCO CENTRE 1999) சமூக விஞஞானக் கண்ணோட்டத்தின் படி ஒவ்வொரு மனிதனுக்கும் சில அடிப்படை மனித உரிமைகள் உள்ளன. தான் என்ன ஆடை உடுத்த வேண்டும், தான் என்ன உண்ண வேண்டும் என்பதையும் அதைவிட பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, சுயவிருப்பத்தின் பேரில் திருமணம் செய்யும் உரிமை, தனக்கு விருப்பமான மதத்தை தேர்ந்தெடுக்கவும் கைவிடவும் உள்ள உரிமை போன்ற பல உரிமைகளைக் கொண்டிருக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அதே சமயம் ஒருவர் மற்றவர் உரிமையை மீறாமல் இருக்க வேண்டும். ஆனால் சமூகத்தின் கூட்டுரிமை தனிமனித உரிமையைவிட மேலானது. சமூகத்தின் நலன்பாதுகாக்கப் பட்டால் தான் தனிமனிதனின் நலனும் பாதுகாக்கப்படும். சமூகத்தின் கூட்டுமுயற்சியின் மூலமே தனி நபர்களது பல ஜீவாதார உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். தேசியவெறி, தேசியகாழ்ப்புணர்வு, மதவெறி, சாதிவெறி போன்ற வெறிகள் ஒரு சமூகத்திடையே ஊட்டப்பட்டு அவை மற்றொரு சமூகத்தை அழிக்கும் பொழுது தனிநபர் உரிமைகள் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை. நாஸிச பேரினவெறிக்கு எதிராக தனி;த்தனியாக யூதர்கள் எதைத்தான் சாதித்தார்கள்? பல தேசியங்கள் கூட்டுச் சேர்ந்தே அதனை முறியடிக்க முடிந்தது. தேசியத்தின் அடையாளங்களையும் தேசிய உரிமைகளையும் தேசியமாக ஒன்றுபட்டுத்தான் வெற்றி கொள்ள முடியும்.
பின்னிணைப்புக்கள்
1) லண்டன் சர்வதேச காங்கிரஸின் தீர்மானம், 1896.
இந்தத் தீர்மானம் கூறுவதாவது :
எல்லாத்தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமைக்கான சகல உரிமைகளும் உண்டு என்று இந்தக் காங்கிரஸ் பிரகடணப் படுத்துகிறது. மற்றும் இராணுவ, தேசிய அடக்குமுறைகளால் துன்பப்படும் சகல நாட்டுத்தொழிளாளர்கள் மீது அனுதாபம் தெரிவிக்கும் உரிமையும் அவைகளுக்கு உண்டு. சாவதெச சமூக ஜனநாயகத்தை அடைவதற்காகவும் சர்வதேச முதலாளித்துவத்தை தொற்கடிப்பதற்காகவும் இந்த நாடுகளின் தொழிளாளர்களை வர்க்க உணர்வு அடிப்படையில் ஒன்றிணையுமாறு இந்தக் காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது.
2) ஐக்கியநாடுகள் :
காலனித்துவ நாடுகளுக்கும் மக்களுக்கும் சுதந்திரத்தை வழங்குமாறு கோரும் பிரகடணம், 1960.
பொதுச்சபைத் தீர்மானம் 1514 (XV), டிச 14 1960.
பொதுச்சபை,
மனிதனின் ஆளுமை, பெறுதிகளின் பிரகாரமும் ஆண் பெண் சமத்துவத்தின் பிரகாரமும் அடிப்படை மனித உரிமைகளின் பிரகாரமும் பெரிய நாடுகளும் சிறிய நாடுகளும் சமூக முன்னேற்றத்தையும் வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் கோருதல்.
சமத்துவ உரிமைகளின் படியும் சகலமக்களுக்குமுரிய சுயநிர்ணய உரிமைகளின் படியும் இனம், பால், மொழி வேறுபாடு கருதாத அடிப்படை மனித உரிமைகளை கனம் பண்ணும் வகையிலும் உறுப்பாடும், சமூக நலனும், சமாதானமும் நட்புறவும் உருவாக உணர்வு கொள்ளுதல்,
எல்லாவற்றிலும் சார்ந்து நிற்கிற மக்களின் விடுதலை உணர்வை ஏற்று, அதற்கான சுயமான பங்களிப்பை அடையாளம் காணுதல்,
அத்தகைய விடுதலைக்கான மறுப்பு அல்லது தடை உலக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதை அறிதல்,
நம்பிக்கை மற்றும் சுய ஆளகைக்குட்படாத பிரதேசங்களின் சுதந்திரத்துக்கான இயக்களுக்கு உதவும் பொருட்டான ஐக்கிய நாடுகளின் முயற்சிகளை கருத்தில் கொள்ளுதல்,
எல்லாவகையிலும் காலனித்துவத்தை முடிவுக்கு கொண்டுவரும் உலகமக்களின் வேணவாவினை உணர்தல்,
சர்வதேச பொருளாதார அபிவிருத்தி காலனித்துவத்தால்தான் தடுக்கப்படுகிறது என்பதை அறிதல்,
மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்திக்கு மற்றும் சர்வதேச சமாதானத்திற்கு சார்பான ஐக்கிய நாடுகளின் இலட்சியங்கள் ஆகியவை காலனித்துவத்தால் தடுக்கப்படுகிறது என்பதைப் புரிதல்,
சர்வதேச சட்டம், பரஸ்பர நலன்சார்ந்து மக்கள், அவர்களின் வளம், இயற்கைச் செல்வங்கள் என்பனவற்றை பகிர்ந்து கொள்ளவும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பைபுக்கு மாறாக உழம் உந்தவிதமான நிபந்தனைகளுக்கு உட்படாமல் இருக்கவும்,
பாகுபாடு, சகல நடவடிக்ககைளிலிருந்தும் தனிமைப்படுதல், காலனித்தவத்தை முடிவுக்கு கொண்டவருதல், சிக்கலான பிரச்சினைகளைத் தவிர்த்தல் போன்றவற்றுக்கான விடுதலை தவிர்க்க முடியாததும் மீளமுடியாததுமானது என்று நம்பிக்கை கொள்ளல்,ஆகிய இவைகள் அனைத்தும் ஐக்கியநாடுகள் பட்டயத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என்பது மனத்தில் இருத்தத் தக்கதாகும்.
பேருதவி செய்தவை
1.தமிழ்த் தேசியம் -தேவநேசன் நேசையா. மார்க்கா நிறுவனம
2.இனமுரண்பாடும் வரலாற்றியலும் - கலாநிதி.ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தன, சமூக விஞ்ஞானிகள் சங்கம், கொழும்பு.
3.முஸ்லிம் சாஹியத்தின் பன்முக அடையாளங்களும் அரசியல் தேர்ந்தெடுப்புக்களும்.
4.சுயம் நிர்ணம் உரிமை - பி.ஏ. காதர், அப்பால் தமிழ்
5.சர்வதேச இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள் -பி.ஏ.காதர், அப்பால் தமிழ்
Labels:
எஸ். சத்யதேவன்
Monday, June 9, 2008
மனிதன்
இறந்துபோன அதை
இறக்காத எல்லோரும்
சுமந்தனர்
தடாகம் பாராட்டியது
தண்ணீர் பாராட்டியது
தாமரை பாராட்டியது
மனிதனின் வாய் மட்டும்
இறந்துபோன அதை விட
இழிந்தே கிடந்தது
பாராட்ட மனம் இன்மையால்
--
பெரிய ஐங்கரன்
புலோலி தெற்கு
Labels:
பெரிய ஐங்கரன்
தேசத்தின் வரைபு
முகத்திலறையும் காற்று
அழுகிய பிணங்களின்
அடையாளங்களைக்
கூவிச் செல்கிறது.
பலதடவை அது ஏக்கங்களின்
சுடுமூச்சையும்
காவி வருகிறது.
அவ்வப்பொழுதுகளில்
மரணத்தின் அழைப்புகளையும்
அழுகைகளையும்
அருகிலும் தொலைவிலிருந்துமாக
கொணர்ந்து தொலைகிறது
அடையாளப்படுத்தலற்ற
சாவுகளின் தரவுகளை
சேமக் காலைச் செய்திகளாக
வானொலிகள் உச்சரிக்கின்றன
நல்லிணக்கம் பற்றிய
பாடல்களின் இடையிடையே...
தினசரி தொலைக்காட்சி
திரைகளின் முகங்கள்
குருதி வடியும் சம்பவங்களையே
மீண்டும் மீண்டும்
மேலெழுப்புகின்றன.
காகித முகங்களையும்
விடுதலை வேண்டுதல்களையும்
கைகளால்
உயர்த்திப்பிடித்தபடியுள்ள
பெண்களதும் முதியவர்களதும்
கவலை தோய்ந்த முகங்களாக
அவை திரையிடப்படுகின்றன.
பெரியவர்கள் தொலைவதும்
சிறியவர்கள் தேடுவதுமாக
நடைமுறை மாறிவிட்டது
தெருவில் நடக்கையிலும் -பலர்
அழைத்துப் போனவர்களாலும்
தொலைக்கப்பட்டதாக வாக்களிக்கிறார்கள்
வாழ்வதற்கானவர்களையும்
வாழ வைக்கும் எல்லாவற்றையும்
சிதைத்து
புதைவுகளின் மேடுகளில்
கோபுரங்களைக்
கட்டியெழுப்புவதாக உளது
தேசத்தின் வரைபு
--
சம்பூர் எம். வதனரூபன்
Labels:
சம்பூர் எம். வதனரூபன்
Saturday, June 7, 2008
என் சாளரத்தைப் பிரித்துக்கொண்டு இங்குமங்கும் தாவுகிறது அந்தப் பூனை...
என் சாளரத்தைப் பிரித்துக்கொண்டு
இங்குமங்கும் தாவுகிறது
அந்தப் பூனை...
நோக்கமற்ற முயற்சிகளின் முடிவு
மீண்டும் தரையோடு...
விரல்களைக் கீறும்போது
ச்ச்சூ... சொல்லவில்லை நான்...
மீண்டும் மீண்டும் கீறிவிட்டு
என் முகம் பார்கிறது...
பின்
என் சுவாசக்கோளத்தைத் தட்டிக்கொண்டு
சுவருடன் முட்டி நிற்கிறது...
சில நிகழ்தல்களிற்கு
காரணங்களுமில்லை...
கற்பிதங்களுமில்லை...
விதைக்கப்பட்டவை அறுக்கப்படுகின்றன
சில வேளைகளில்
பதர்களுடன் கதிர்களும்...
--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு
இங்குமங்கும் தாவுகிறது
அந்தப் பூனை...
நோக்கமற்ற முயற்சிகளின் முடிவு
மீண்டும் தரையோடு...
விரல்களைக் கீறும்போது
ச்ச்சூ... சொல்லவில்லை நான்...
மீண்டும் மீண்டும் கீறிவிட்டு
என் முகம் பார்கிறது...
பின்
என் சுவாசக்கோளத்தைத் தட்டிக்கொண்டு
சுவருடன் முட்டி நிற்கிறது...
சில நிகழ்தல்களிற்கு
காரணங்களுமில்லை...
கற்பிதங்களுமில்லை...
விதைக்கப்பட்டவை அறுக்கப்படுகின்றன
சில வேளைகளில்
பதர்களுடன் கதிர்களும்...
--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு
Labels:
பிரம்மியா கிருபநாயகம்
Subscribe to:
Posts (Atom)