Monday, June 9, 2008

தேசத்தின் வரைபு




முகத்திலறையும் காற்று
அழுகிய பிணங்களின்
அடையாளங்களைக்
கூவிச் செல்கிறது.
பலதடவை அது ஏக்கங்களின்
சுடுமூச்சையும்
காவி வருகிறது.

அவ்வப்பொழுதுகளில்
மரணத்தின் அழைப்புகளையும்
அழுகைகளையும்
அருகிலும் தொலைவிலிருந்துமாக
கொணர்ந்து தொலைகிறது

அடையாளப்படுத்தலற்ற
சாவுகளின் தரவுகளை
சேமக் காலைச் செய்திகளாக
வானொலிகள் உச்சரிக்கின்றன
நல்லிணக்கம் பற்றிய
பாடல்களின் இடையிடையே...
தினசரி தொலைக்காட்சி
திரைகளின் முகங்கள்
குருதி வடியும் சம்பவங்களையே
மீண்டும் மீண்டும்
மேலெழுப்புகின்றன.
காகித முகங்களையும்
விடுதலை வேண்டுதல்களையும்
கைகளால்
உயர்த்திப்பிடித்தபடியுள்ள
பெண்களதும் முதியவர்களதும்
கவலை தோய்ந்த முகங்களாக
அவை திரையிடப்படுகின்றன.
பெரியவர்கள் தொலைவதும்
சிறியவர்கள் தேடுவதுமாக
நடைமுறை மாறிவிட்டது

தெருவில் நடக்கையிலும் -பலர்
அழைத்துப் போனவர்களாலும்
தொலைக்கப்பட்டதாக வாக்களிக்கிறார்கள்

வாழ்வதற்கானவர்களையும்
வாழ வைக்கும் எல்லாவற்றையும்
சிதைத்து
புதைவுகளின் மேடுகளில்
கோபுரங்களைக்
கட்டியெழுப்புவதாக உளது
தேசத்தின் வரைபு

--
சம்பூர் எம். வதனரூபன்

1 comment:

மு. மயூரன் said...
This comment has been removed by the author.