என்னுயிரே நீ தான் என்று சொல்லுமளவுக்குக்
கூட வார்த்தைகள் இல்லாது போயின – நீ
உயிரோடு இல்லை
இதயக் கதவை தட்டி பார்த்தாய் - நான்
திறக்கவே இல்லை – நானாகவே
திறந்து வந்தேன் - இன்று
நீயுமில்லை
உன்னைப் பார்த்த முதல் நாளில்
என்னையே பறி கொடுத்தேன்
மனதிற்குள் உன் நினைவுகளை
சமுத்திரமாக்கி ஆரவாரமற்றிருந்தேன்
ஆனால் நீ தான் - என்னால்
உள்ளே எரிமலையாய் கனன்று கொண்டிருந்தாய்
இன்று உன்னால்
என் உயிர் வாயுவே என்னை எரித்துக் கொண்டிருக்கிறது
உனக்குமில்லை - இது எனக்குமில்லை
படைத்தவன் தானே எடுத்துக் கொள்வான்
என்ற மனம் என்னிடமுமில்லை
உன்னிடமுமில்லை - இனி
என்ன செய்திடுவேன்
நாம் சந்தித்து இரு வருடங்கள் தானிருக்கும்
அதற்குள் எனை விட்டு தொலைதூரம்
சென்றுவிட்டாய்………….
இருபதாம் வயதில் மரணத்தில் - நீ
பதினெட்டாம் வயதில் அமங்கலியாய் நான்
என் கனவுகள் எனும் நப்பாசைகள்
நனவாகுவது எப்போது?
என் பெற்றோருக்கு மகனாக இருக்கும் என்னை
உன் பெற்றோருக்கு மருமகனாக்குவது எப்போது?
என்ற உன் கேள்விகளெல்லாம்
இப்போது எங்கே?
மருமகளாக வலது கால் வைத்து
புகுந்த வீடு வருவேன் என்றிருந்தேன் - ஆனால்
மலர்வளையம் வைக்கத்தான் - உன்
வாசல் படி ஏறினேன்
உன்னை என்னோடு மணக்கோலத்தில்
கனவு கண்டேன் - இன்று
பிணக்கோலத்தில் நீ………….
மூன்று முடிச்சு போட்டு மெட்டியிட்டு
மஞ்சத்தில் சங்கமிப்போம் என்றிருந்தேன்
என்னைத் தனியே விட்டு கல்லறைக்குள்
நீ மட்டும் சென்றதென்ன?
நான் எங்க சென்றாலும்
நானிருக்கும் இடத்திற்கு உன்னை
அழைத்து வரும் நண்பர்களும்
இங்கில்லை – நீயுமில்லை
நாமிருவரும் மணல்மேடுகளில் சந்தித்ததுமில்லை
மலர்க் கொத்துகள் பரிமாறியதுமில்லை
அலை நீரில் கால் நனைத்ததுமில்லை – அந்திப்
பொழுதில் அதிரசத்தில் இணைந்ததுமில்லை
நந்தவனங்களில் சிந்துகள் பாடியதில்லை
கல்லறைக் காதல்கள் கதைத்ததுமில்லை - இன்று
என் ராகமெல்லாம் முகாரியாய்…….
நெஞ்சை ரணமாக்கும் உன் நினைவுகளுடன்
எத்தனை நாளடா வாழ்வது?
என்னைப் பின் தொடர்ந்த என் நிழலே
எங்கு பார்ப்பேன் உன்னை!
எப்போது பார்ப்பேன் உன்னை!
அடுத்தது உனக்கும் எனக்கும்
திருமணப் பத்திரிகை என்றிருந்தேன் - ஆனால்
இறுதியில் உனக்கு மரண அறிவித்தல்
எழுதியவளும் நானே………
அக்னி பிரகாரத்தை சுற்றி வலம் வர
வேண்டிய காலத்தில் - நீ மட்டும்
சிதைக்குள் சென்றதென்ன?
என்னுள் ஓராயிரம் வார்த்தைப்
பிரயோகங்கள் - நீ அருகில்
வந்தால் அனைத்தும் மௌன
யுத்தங்களாய்……..
அன்று உன்னிலுள்ள காதல்
என்னுள் மௌனமாய்
இன்று உயிரில்லாத நீ
எனக்குள் உயிராய்
உன் காதலை பகிரங்கப்படுத்தினாய் - நீ
நானோ அந்தரங்கமாக்கினேன் - இன்று
உன் மரணம் பகிரங்கமாய் பேசப்பட்டது
என் காதல் அந்தரங்கமாகவே
அறுத்தெறியப்பட்டது……………..
நீ மரணத்தை தழுவினாலும்
உன் நினைவுகளுடன்
ஆயுள் வரை உயிர்த்திருப்பேன்……….
--
மீரா,
திருக்கோணமலை
Saturday, June 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ரொம்ப கஷ்டமான நிலமை.... கவிதை சூப்பர்....
நன்றி ச்சின்னப்பையன்,
உண்மையிலிருந்து வரும் எழுத்துக்கள் எப்போதும் உயிர்ப்பானவை அல்லவா?
மனதிற்குள் உன் நினைவுகளை
சமுத்திரமாக்கி ஆரவாரமற்றிருந்தேன்
நான் எங்க சென்றாலும்
நானிருக்கும் இடத்திற்கு உன்னை
அழைத்து வரும் நண்பர்களும்
இங்கில்லை – நீயுமில்லை
உன் மரணம் பகிரங்கமாய் பேசப்பட்டது
என் காதல் அந்தரங்கமாகவே
அறுத்தெறியப்பட்டது……………..
எனும் வரிகளில் நல்ல கவிதையும் சுடும் கண்ணீரும் உள்ளது
Post a Comment