Thursday, June 12, 2008

ஆசையின் ஆர்ப்பரிப்புகள்





பிய்த்துத் தின்று செரித்து ஊளையிடும் நரிகளென
ஊற்றெடுக்கும் உணர்வுகள்
ஓவ்வொரு கணத்தையும்
குதறுகின்றன

சுற்றி நெருக்கும் அச்சம்
அசைவுகளை அந்நியமாகக்குகின்றபோது
நிகழும் அனிச்சை செயலென
உள்ளெழும் ஆசைகள்
ஆர்ப்பரிக்கின்றன

சுடு குழல்களின் கண்களினூடாக
என்வீட்டு குளியலறையிலும்
எட்டிப்பார்த்து என் நிர்வாணத்தில்
தனது வெற்றியை எக்காளமிடுகிறது
பேரினவாதம்

உழை.. உழை… ஓய்வொழிச்சலன்றி உழை
உன் உயிர் பொருள் ஆவி எல்லாம் என்
சுயநல அரசியலின் செருப்புகளாக
உன்குடும்ப சிறகுகள் பறக்க அல்ல அவை
பத்திரமாக இருப்பதற்கேனும் உழை என
என் ஏழ்மையின் வலியில் காலூன்றி எம்
மூலாதரத்தை உறிஞ்சி தன் வல்லமை பறைசாற்றுகிறது
ஏகாதிபத்தியம்

கறைகளின் மத்தியில் பரிசுத்தம் அவமானம்
என்றபடிக்கு உருமாறி உயிர்களின்
இருப்பை மறுப்பதை நியாயமாக்கி வாலாட்டுகிறது
மனிதாபிமானம்

அதிகாரத்தின் அகோரத்தையும்
நய வஞ்சகத்தின் துரோகத்தையும்
துணைக்கழைத்து ஊடகங்களில்
உற்பத்தி செய்யும் பொய்களில் பளிச்சிடுகிறது
ஜனநாயகம்

எதிர்ப்புகளுக்கான பரிசுகளால்
உள்ளொடங்கி உள்ளொடுங்கி இருப்பொழிந்து - அச்சம்
அசைவுகளை அந்நியமாகக்குகின்றபோது
நிகழும் அனிச்சை செயலென
உள்ளெழும் ஆசைகள்
ஆர்ப்பரிக்கின்றன

தன் நம்பகத்தன்மையை துறந்த இரவுகளில்
வறுமைக்கும் வெறுமைக்கும் கொடுமைக்கும் நீதிக்குமாக
அதன் ஒவ்வொரு குரலும் வழிந்தோடி
வெளிகளின் தளத்தில் ஒவ்வொரு புள்ளியிலும்
தேடுகிறது தன் விடுதலையை….

--
எஸ். சத்யதேவன்
திருக்கோணமலை

3 comments:

Anonymous said...

"கள்" இன் இந்தப்புதிய கறுப்பு-வெள்ளை நிறக்கலவை உங்களுக்கு வாசிப்பதில் தொந்தரவைத் தருகிறதா?

கண்ணை உறுத்துகிறதா?

தயவு செய்து அறியத்தாருங்கள்

Anonymous said...

yes.. change the colour.

nora

Anonymous said...

poda evane
unakku vera velai